சக்தி சக்திதாசன் கவிதைகள்!
1. நண்பனுக்கு ஒரு மடல்
அன்பு நண்பா,
மடல் கண்டு பலகாலம்
மனம் திறந்து நெடுநாட்கள்
விழி மூடும் போதெல்லாம்
வழிந்தோடும் ஞாபகங்கள்
சொல்லொண்ணாத் துயராயினும்
சொந்தம் தந்த வலியென்றாலும்
சொற்ப நேரம் உன்னுடனே
சொல்லாடியதும் விலகிடுமே !
நடந்து வந்த பாதையெங்கும்
பதித்து வந்த தடங்கள் அனைத்தும்
பகிர்ந்திடுமே வாழ்வின் சிக்கல்
புரிந்திடுமே நட்பின் வலிமை
பொல்லாத உலகமதில் என்றும்
போதாத மனம் கொண்டோர்
பேராசை கொண்டே தம்மை
பெரிதாக எண்ணிக் கொள்வார்
அவசர உலகமடா நண்பா
அந்தரத்தில் வாழ்க்கையடா
மனித உயிர்களின் விலையின்
மதிப்பறியா மூடரடா
வளர்ந்து விட்ட விஞ்ஞானம்
விதம் விதமாய் ஆயுதங்கள்
விவேகத்தின் வெறுமையிலே
வியூகங்கள் வகுக்கின்றார்
புன்னகையை அடகு வைத்த
புதிர் நிறைந்த முகங்களடா
மகிழ்வதனை புதைத்து இங்கே
பொருளாதாரம் பெருக்குகின்றார்
உள்ளம் எனும் ஆழிக்கரையில்
உணர்ச்சியலைகள் கொடுத்த
வெண்நுரையின் வேகத்தை
பகிர்ந்து கொண்டேன் உன்னுடனே
2. நனைய வேண்டும் இப்பொழுதே !
உன்
ஆழமான விழிகளுக்குள் என்
ஆளுமையைத் தொலைத்து விட்டேன்
கரு விழியின் துணை கொண்டு
கன்னி நீ தீட்டி விட்ட
காதலெனும் ஓவியத்தில் எனை
கரைத்து வர்ணமாய் பூசி விட்டேன்
நேற்று வரை நினைக்கவில்லை
நெஞ்சத்தை உடைக்கும் வகை
நங்கை உந்தன பார்வைக் கணைக்கு
நிறைந்திருக்கும் வலிமை என்று
அந்தி மாலை மஞ்சளிலே
ஆடி நிற்கும் ஆலங்கிளை
அதன் மீது இரு கிளிகள்
அழகுக் கிள்ளையில் காதல் பேசும்
அதைப் பார்த்து என்னிதயம்
அலைந்தோடி உனை நாடும்
அப்போதும் தப்பாமல் நெஞ்சில்
அலைபாயும் உன் வதனம்
என்
நீளமான இரவுகளுக்குள் நான்
நீண்ட யாத்திரை கனவில் செல்வேன்
மீண்டு நான் வருவதென்றால்
நனவுலகில் உன் நிழல் வேண்டும்
சொல்ல முடியா உணர்வலைகள்
சொக்க வைக்கும் கணப் பொழுதுகள்
சுவாசிக்கும் கணக்களல்ல அவை
சுவாசத்தை மறக்க வைக்கும் கணங்களடி
விணையொன்று மீட்டாமலே எப்படி
விழுந்ததொரு வேணுகானம் ?
ஓசையின்றி என் நெஞ்சினில் நீ
ஓடியாடும் பொழுதுகளும்
மேகமில்லா மோகமழை நெஞ்சில்
வேகமாகப் பொழியுதடி !
நாளையென்ன நாளை உன்னில் நான்
நனைய வேண்டும் இப்பொழுதே
3. எவ்வழியில் எதைக் காண்போம் ?
தாளம் தப்பாமல்
தண்டவாளத்தினில்
ரஞ்சகமான ஓட்டம்
ரயிலதன் மகிழ்கீதம்
காற்றோடு காற்றாக
கரைதோறும் பறந்தோடும்
பச்சை மரக்கூட்டம்
பசுங் கதை கூறும்
வீட்டின் ஓரங்களில்
விழிகளில் அதிசயத்தோடு
கையசைத்து வழியனுப்பும்
கனிவான சிறு குழந்தைகள்
ஓடிய களைப்புத் தீர
ஒய்வெடுத்து நிலையத்தில்
அமைதியாக நிற்கும்
அழகுமிகு ரயிலது
பயணிகள் மேடையெங்கும்
பார்க்குமிடமெல்லாம் வெறுமை
ஓயாத கதை பேசும் பறவைக்கூட்டம்
ஒன்றேதான் காதுகளில் ஒலிக்கும் கீதம்
ஊதுகுழல் சத்தம் காதுகளில்
ஊதிக் கொண்டே புறப்படும் ரயில்வண்டி
மீண்டும் கனகதியில் காற்றைக் கிழிக்கும்
காட்சிகள் மட்டும் மாறிக் கொண்டே
சிலமணி நேரம் மட்டும் மனம் திறக்கும்
சிநேகத்தின் பிரிவுகள் அதுவும் ஒருவகை
சிந்தைச் சுழல்களே ; அடுத்தொரு நிலையம்
ஏறுவோர் பலரோ ? இறங்குவோர் சிலரோ ?
வாழ்க்கையின் தத்துவத்தை கண்முன்னே
வரைந்திடும் சித்திரமாய் அந்த
வியத்தகு ரயில் பயணம் எத்தனை
விந்தைகள் அற்புதம் ! அற்புதம் !
நேற்றிருந்தோர் இன்றில்லை இப்புவியில்
நாளையிருப்போர் யாரென்றறியோம்
காட்ச்சிகள் மாறுவது போல் வாழ்வில்
காலங்களும் மாறும் எனும் உண்மை
எவ்வழியில் எதைக் காண்போம் ?
எப்போது யார் வருவார் ? எல்லாமே
புதிராகும் ரயில் பயணம் போல்தானோ
புவியினில் நம் வாழ்வும் தடம் பதிக்கும் ?
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
ஜுமானா ஜுனைட் (இலங்கை) கவிதைகள்!
1. மொட்டுக்கள் மலர்கின்றன
இயற்கை மூடி வைத்த
மொட்டுக்கள் ஒவ்வொன்றும்
சிறுசத்தம்போட்டு உலகை
எட்டிப் பார்க்கின்றன
பூக்களாக…
பூவுலகின்
சிறுதூண்டலால்
அழகழகாய்
மலர்கின்றன
எழில் பூக்கள் - தம்
புறவிதழால்
புதுக் காற்றை
பிடிபிடித்தும்
பார்க்கின்றன…
வளிபோன போக்கில்
அசைந்தாடவும்
வாயின்றி சில வார்த்தை
இசை போடவும்
வான் போடும் மழை நீரில்
விளையாடவும்
வையத்தில் தேன் பூக்கள்
பூக்கின்றன.
ஒரு மொட்டு
மலரும் போது…
மெல்லப் பேசுகின்றது…
பேசும் விழிகளால்
புன்னகை பூக்கின்றது…
பூமிக்கு
வளையோசை கேளாமல்
காற்றிலே நடனம் ஆடுகின்றது…
2. நன்றி கூறுவேன்…
வித்தொன்றை சிதைத்துப் பார்த்தேன்
எதுவும் இல்லாமல் போனது…
இன்னொன்றை
மண்ணுள் புதைத்துப் பார்த்தேன்
மரமாக வந்து கதை பேசியது…
இலைகளையும் பூக்களையும்
உனக்குள்
எப்படித்தான் சுமந்தாயோ என்றேன்..
மண்ணைப் போட்டு மூடினாலும்
உன்னை
மீறி வரும் சக்தி எங்கே என்றேன்…
மறுபடியும் வித்தொன்றை
சிதைத்தொருக்கால் பார்த்தேன்…
மாய வரம் ஏதேனும்
அங்குள்ளதுவா தேடினேன் -
“வித்திலைகள்” மட்டும் தான்
எனைப் பார்த்து முறைத்தன….,
மற்றதெல்லாம் எனை விட்டு
என் கண்ணை மறைத்தன…
பூவின் நிறமேதும் அங்கு இல்லை..,
கனியின் தீஞ்சுவையும் காணவில்லை…!
விருட்சம் அதன் தலைவிதியை
வித்தினுள்ளே தேடிப் பார்த்தேன் -
ஒன்றும் புரியவில்லை…,
ஒரு வித்தை நாட்டிப் பார்த்தேன் -
கன்றாய் எழுந்தது
மரமாய் விரிந்தது
பூக்கள் சிரித்தன
பூச்சிகள் வளைத்தன
கனிகள் விளைந்தன..
என் கண்கள் வியந்தன..
வித்திற்கு நன்றி சொல்ல
தேடிப் பார்த்தேன் -
காணவில்லை…
விந்தை தான்..!,
இறைவனுக்கே நன்றி சொல்வேன்.
3. காலம் ஒரு கணந்தான்….! பகுதி(5)
இது
மின்னல் வாழ்க்கை
மின்னிப் பாரு
மீதி வாழ்க்கை
எங்கு
தேடிப் பாரு
கண்ணில் இமைகள்
மூடிமூடி
காற்றினாலே
திறப்பதுண்டு,
மூடித்திறக்கும் ஆயிடையில்
வாழ்வே மாறும்
வாழ்ந்து பாரு!
காலைக் கதிர்
சுடுவதில்லையே,
சுணங்கிப் போனால்
பாதம் கூட
தீ மிதிக்குமே!,
பாரில் இந்த
வாழ்க்கை கூடவே
தாமதத்தால்
பாதம் போல ஆகக் கூடுமே!
ஓசை தரும்
அலைகள் கூடவே
கடலில்
உடைந்து -
நொருங்கி -
வீழ்ந்து போகுமே
ஒன்றுபட்டு
மீண்டும் இணைவதால்
அவை வானைத் தொட
தொடர்ந்து முனையுமே..
அலைகள்
தோற்று தோற்றே போயினும்
அவை துவண்டிடாமல்
விடாது முயல்வதால்
ஆவியாகி விண்ணையடையுமே…
உலக வாழ்க்கை
இதிலே யாமும்
விடாது முயல்வதால்
எதுவும் தோல்வியாக
இறுதி வரைக்கும்
ஆவதில்லையே..,
என்றோ ஒருநாள்
முயல்வின் முடிவைப்
பெற்று மகிழத்தான்
அலைகள் போல
தினமும் நாமும்
அலைந்து முயல்கிறோம்;…!!
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
ர.மணிமேகலை கவிதைகள்!
1. வேர்
குருவிகளின் அலகுக்கு இரையாகும்
பளபளத்த கருநாவல் பழங்கள்
பசிக்குத்தப்பியவை ஒளிகள் பரந்த வெளியில்
சிலுசிலுக்கும் இலைகள்
கனியின் சுவைக்கு இறைஞ்சும் சிறு வளைகரங்கள்
நீளுகின்றன
அவன் கிளைகளில்
ஆண்டுகளின் சுழற்சியில்
அவள் வேர் வேராகவே
தாயின் முலைருசி மறுக்கப்பட்ட கன்றொன்று
பாயத்தயாராகிறது.
2. பக்கங்கள்
கழைக்கூத்தாடியின்
டிரம் டிரம் டிரம் இசையில்
பேருந்து நிலையம் பயணங்களிலிருந்து
அதிர்ந்தெழுகிறது
சதுரத்தின் விளிம்பையே எல்லைகளெனக்கொண்டு
அசைகின்றது இடை
சிறுமியின் விசும்பலுடன்
அவள் முன்னே கரணமடிக்கும் தாயின் கால்களை
கண்ணுக்குத்தெரியத சாட்டை சுழற்றுகிறது
ஏந்தும் கிண்ணங்களை
நிரப்புகின்றன
எழுதித்தீராத
குரூரத்தின் பக்கங்கள்
3. பார்த்தீனிய வீரன்
சிறகு விரித்த பட்டாம் பூச்சிகளின் நினைவோடு
அந்தப்பொழுது விடிந்தது
குழந்தைமைக்காலப் பார்த்தீனியச் செடி வீரனவன்
கன்னிகா தானம் ஒன்றைத் தன் உளம் கொள்ள விரைகிறான்
எதிர் வந்த வாகனத்துடன்
முரண் கொண்ட அவனின் நினைவுகள் மங்கின
ஆயுதத்தொழில் நுட்பம் பலனற்றுப்போக
முற்றத்தில் மலர் மாலைகள் குவிகின்றன
மஞ்சளும் மல்ர்களும் நிறமிழக்க
சிவப்புச்சேலையில் சூனியமாகிப்போன அவளிடம்
தன் ஐயன் குறித்து வினா எழுப்புகிறது மழலை
காற்றில் கலந்த அவன் வாசம்
நெஞ்சச்சிறையில் குடியிருப்பதாகப் பகர்கிறாள்
விரிந்த அவள் கரங்களில்
நிரம்பாத வெற்றிடம் நிரம்பியிருக்கிறது
சுற்றிலும் சடங்குகளின் ஒலி நிறைகிறது.
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.