வாசம் பரப்பிய மல்லிகை
வாடி வீழ்ந்தது மண்ணில்
தேசம் தெரியும் ஜீவா
தேசம் விட்டேகினார் விண்ணில்
வெள்ளுடை வேந்தனாய் ஜீவா
வீதியில் நடந்துமே திரிந்தார்
கல்லிலும் முள்ளிலும் நடந்தார்
கருத்துடன் எழுதியே உயர்ந்தார்
எள்ளவும் அஞ்சவும் மாட்டார்
எடுத்தை முடித்துமே நிற்பார்
கள்ளமில் மனமுடை ஜீவா
காலனின் கையிலே சென்றார்
மூலையில் ஒதுங்கியே நில்லா
முயற்சியை கையினில் எடுத்தார்
நாளையே எண்ணியே உளத்தில்
நம்பிக்கை எழுத்தினில் விதைத்தார்
எழுதிடும் கரங்களுக் கெல்லாம்
ஏணியாய் ஆகினார் ஜீவா
மல்லிகைத் தொட்டிட்ட பலபேர்
மனமெலாம் உறைகிறார் ஜீவா
ஈழத்து இலக்கிய பரப்பில்
இருக்கிறார் விருட்சமாய் ஜீவா
ஆழமாய் மல்லிகை அமைத்தார்
அவரெங்கும் படர்ந்துமே இருந்தார்
நீண்டநாள் சஞ்சிகை தந்தார்
நிமிர்வுடன் எழுத்தினை ஆண்டார்
ஆண்டவன் திருவடி அடைந்தார்
ஆனாலும் தெரிகிறார் ஜீவா