1. பற்றாதே என்கிறது ஞானம்! பற்றுவேன் என்கிறது மோகம் !
வெட்டாதே என்கிறது மரம்
வெட்டுங்கள் என்கிறது குளம்
தட்டாதே என்கிறது மனம்
தட்டுவேன் என்கிறது குணம்
முட்டாதே என்கிறது மூப்பு
முட்டுவேன் என்கிறது கொழுப்பு
பற்றாதே என்கிறது ஞானம்
பற்றுவேன் என்கிறது மோகம் !
கெடுக்காதே என்கிறது தருமம்
கெடுத்திடு என்கிறது அதர்மம்
நடிக்காதே என்கிறது நட்பு
நடித்திடு என்கிறது துரோகம்
குடிக்காதே என்கிறது சிறப்பு
குடித்திடு என்பது வெறுப்பு
படிக்காதே என்பது இழப்பு
படித்திடு என்பது மதிப்பு !
சொல்லாதே என்கிறது மனது
சொல்லுவேன் என்கிறது நா
கொல்லாதே என்கிறது கருணை
கொல்லுவேன் என்கிறது கயமை
நில்லாதே என்கிறது மதி
நின்றிடு என்கிறது விதி
தள்ளாதே என்கிறது பாசம்
தள்ளிடு என்கிறது மோசம் !
பார்க்காதே என்கிறது உள்ளம்
பார்த்திடு என்கிறது கள்ளம்
கேட்காதே என்கிறது புத்தி
கேட்டிடு என்கிறது கெடுதி
உண்ணாதே என்கிறது உணர்வு
உண்டிடு என்கிறது ஆசை
எண்ணாதே என்கிறது சித்தம்
எண்ணிடு என்கிறது பித்தம் !
2. மாநிலம் எங்கணும் மங்கலம் பொங்கவா !
இருபதே சென்றுவா
இருபதொன்றே நன்றுவா
வந்திடும் கொரனாவை
வராதுமே செய்துவா !
நல்லன அளிக்கவா
வல்லன கொடுக்கவா
வெல்லுவோம் என்றிடும்
வீரத்தை உணர்த்தவா !
மதுவினை ஒழிக்கவா
மங்கையர் காக்கவா
சதிகளை தடுக்கவா
சன்மார்க்கம் நிலைக்கவா !
அரசியல் சிறக்கவா
ஆட்சிகள் நிலைக்கவா
கயமைகள் விரட்டவா
கண்ணியம் காக்கவா !
உழவர்கள் உயரவா
உழைப்பவர் சிரிக்கவா
கயவர்கள் ஓடவா
காமுகர் மடியவா !
ஆணவம் அகலவா
ஆன்மீகம் பெருகவா
நாடெலாம் நலமுடன்
நாளுமே இருக்கவா !
கற்றிடும் மாணவர்
கல்வியில் உயரவா
பெற்றவர் வாழ்விலே
பெருஞ்சுமை குறையவா !
மழைவளம் சிறக்கவா
வரட்சியை விரட்டவா
மாநிலம் எங்கணும்
மங்கலம் பொங்கவா !
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.