தானியம் தூவும்
வேடனின் கைகள்
வலை விரிக்கும்
ஆற்றில் மூழ்கியபடி
அடையாளத்தை இழக்கிறது
உடைந்த பாலம்
பிஞ்சுக் கரங்களின்
தொடுதலின்றி வாடுகின்றன
உடைந்த பொம்மைகள்
ஏணிப்படிகளோடு
உறவாடி மகிழ்கின்றன
உயர்ந்த எண்ணங்கள்
இலையுதிர்த்தபோதும்
அசையாத நம்பிக்கையில்
ஆணி வேர்
இலைகளை உதிர்த்தபடி
குளக்கரை மரம்
நீரில் தத்தளிக்கும் எறும்பு
விழி மூடிய புத்தனின்
தியானத்தில் நடனமிடுகிறது
உதிர்ந்த சருகு
குடிசையின் மேல் ஏறி
காய்த்துவிட்டுத் திரும்புகிறது
சுரைக் கொடி
தெருவில் மழை வெள்ளம்
அணைபோடும் சிறுவர்கள்
ஒதுங்கி நடக்கும் கால்நடைகள்
காற்று எதிர்த்தாலும்
சுழன்றபடி முன்னேறுகிறது
ஓலைக் காற்றாடி
குப்பத்து முனியனும் சுப்பனும்
கோபுர உச்சியில்
மின்விளக்கு ஏற்பாடுகள்
பின்நோக்கி நகரும் மரங்கள்
பத்திரமாய் இருக்கட்டும்
சாலையில் நடக்கிறேன்
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.