அரக்க பறக்க ஓடும்
உலோகாய யுகத்தில்
பாலைவன ஓடையில் தூண்டிலுடன்
மீனுக்காக காத்திருப்பவன் போல்
ஓய்வுக்கான நேரத்தை கைப்பற்ற
காத்துக் கிடக்கும் மனிதனுக்கு
இடி மின்னல் இன்றி
மடைதிறவா வந்த
lockdown காட்டாறு வெள்ளத்துள்
மூழ்கி திக்குமுக்காடுகிறான்.
வாயும் வயிறும் துண்டிக்க
தூண்டிலும், கட்டியிருந்த கைலியும்
வெள்ளத்தில் போயிருக்கும்.
திசையறியா சூறாவளியில்
கலங்காது கரையேறும் மாலுமிக்கு
மீன்கள் படாது போவதுமுண்டு,
மீண்டு,
மீண்டும்
பாலைவன ஓடையில் தூண்டிலிலோ
காட்டாறு வெள்ளத்தில் வலையிலிலோ
நேரமேனும் மீனை
துரத்த எண்ணுபவனுக்கு அனுதாபங்களை
முன்கூட்டியே சொல்லி விடுங்கள்.
சிந்தனை சிறையின்
மூச்சு திணறலிலிருந்து
முதலில் விடுபட்டு வா.
பூமி என்னும் பெருமுதலாளி
நேரத்தை உற்பத்தி செய்வதை
நிறுத்த போவதில்லை.
அதன் சுவை நுகர
நீ தரப்போகும் விலைப்பட்டியலை
அடமானம் பிடிக்க
முதலைகள் கரையேற தொடங்கிவிட்டன.