மாநகர் துஞ்சும் நள்ளிரவில்
வெளியே வந்தேன்.
நுண்கிருமியின் தாக்கம்.
சுருண்டு கிடந்தது மாநகர்
உந்துருளியில் நகர்வலம்
வந்தாலென்ன? வந்தேன்.
வாகனவெள்ளம் பாயும் நதிகள்
வற்றாதவை வற்றிக்கிடந்தன.
கட்டடக்காட்டில் இருள்
கவிந்து கிடந்தது.
நிசப்தம் நிலவியது நகரெங்கும்.
இயற்கையைச் சுகித்துறங்குகிறதா
இந்த மாநகர்?
என் நகர்வலம் தொடர்கிறது.
தொலைவில் ஒண்டாரியொ வாவி
விரிந்து கிடந்தது.
வாவிக்கரையில் குழந்தையை
வாரிமுகர்ந்தபடி நரி அன்னை..
வீதியை ஊடறுத்து மான்கள் சில
விரைந்து மறைந்தன.
மானுடரின் மெளனத்தில்
மிருகங்களின் புத்துயிர்ப்பு
ஓசோன் துவாரம் சிறுத்ததாம்;
ஓடும் கங்கை நீர் தெளிந்ததாம்.
அத்தியாவசியச் செலவில் வாழ்வில்
அத்தியாவசியமற்ற செலவுகள்
அருகினவாம்..
நகர்வலம் முடிந்து மீள்கையில்
மென்துயரில் தோய்ந்ததென்
நெஞ்சம்.
தெளிவிழக்கப்போகின்ற நதிகளை,
உலகை எண்ணினேன்.
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.