பாளையின் சிரிப்புச் சிந்தும்
பாற்கடற் சிரிப்பா கட்டும்
வாழையின் இலையைப் போலும்
வாழ்க்கையே அழகா கட்டும்
காளையின் வலிமை போலும்
கற்பனை வசமா கட்டும்
நாளைய பொழுதே வெல்லும்
நற்தமிழ்ப் பொழுதே வாழ்க !
தோயுதல் கவிதைக் கின்பம்
துள்ளுதல் சிறுவர்க் கின்பம்
தாயவள் மடியின் இன்பம்
தாலாட்டு மழலைக் கின்பம்
சாயுதல் காதல் இன்பம்
சஞ்சலம் களவுக் கின்பம்
தேயுதல் நிலவுக் கில்லை
திரவியம் உழைப்பின் எல்லை!
வாழ்வது வாய்மை யாகும்
வாகையும் நெறியில் வாழும்
ஆள்வது அறமே யாகில்
ஆட்சியும் தெய்வ மாகும்
பாழ்மனம்; அரசர்க் குண்டேல்
பதைகுழி அவர்க்;கும் உண்டே
ஏழிசை சிறக்கு மென்றால்
இன்னிசை வாழ்வென் றாகும் !
மேழியும் வயலும் சேர்ந்து
மேதினி வளமுண் டாக்கும்
ஆழியும் கடலும் கூடி
அவனியில் மழையுண் டாக்கும்
தூளியும் தமிழும் பாடிச்
சொர்க்கமுண் டாக்கும் இல்லம்
கோளினில் ஒன்றும் இல்லை
குடும்பமே அன்பின் எல்லை !
கவிதையில் நிலம்வா ழட்டும்
கடவுளர் தமிழா கட்டும்
அவியிடும் நெறிவா ழட்டும்
அற்புதம் புவிகா ணட்டும்;
சுவைதரும் எழுத்தா கட்டும்
செந்தமிழ் அலைபா யட்டும்
தவமிடும் தெய்வம் தோன்றும்
தத்துவம் புவிவாழ் கவே!
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.