*உலக தந்தையர் தினத்தில் இக்கவிதை தந்தையர்க்குச் சமர்ப்பணம் !
தேரிலே சாமிவந்தால் தோளிலே தூக்கி வைத்து
பாரடாஎன்று காட்டும் பாங்கினை மறக்கமாட்டேன்
ஊரிலேயுள்ளார் எல்லாம் உன்மகன் உதவானென்று
நேரிலேவந்து சொன்னால் நிமிர்ந்தொரு பார்வைபார்ப்பார்
கவலைகள்படவும் மாட்டார் கண்டதை யுண்ணமாட்டார்
தெருவிலேசண்டை வந்தால் திரும்பியே பார்க்கமாட்டார்
அடிதடிவெறுத்து நிற்பார் ஆரையும் தூற்றமாட்டார்
உரிமையாயுதவி நிற்பார் ஊரிலே எங்களப்பா
பொய்யவர்க்குப் பிடிக்காது புழுகுவதை வெறுத்திடுவார்
மெய்பேசிநின்று விட்டால் விரும்பியவர் அணைத்திடுவார்
உண்மையே பேசுவென்பார் உழைப்பையே நம்புவென்பார்
எண்ணமெலாம் இனிதாக இருக்கவே வேண்டுமென்பார்
அன்பாக விருவென்பார் அனைவர்க்கும் உதவென்பார்
அசடனாய் வாழாதே அறிஞனாய் உயரென்பார்
பலகதைகள் ஊடாக பண்புகளை வளர்த்திட்டார்
பாரில் வாழநான் பாதையே அப்பாதான்
அப்பாவை அருகில்வைத்தால் அனைவருக்கும் அதிஷ்டம்தான்
அப்பாவை அலையவிட்டால் அனைவர்க்கும் அவலந்தான்
அப்பாவை அணைத்திடுவோம் அவரருகில் நாமிருப்போம்
அப்பாவை எப்போதும் ஆண்டனாய் போற்றிடுவோம்
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.