கல்லுண்டாய் வெளியினூடே
பயணித்த நாட்களை
எண்ணிப் பார்க்கின்றேன்.
எத்தனை காலைகள்!
எத்தனை மாலைகள்!
இருள் பிரியா அதிகாலைகளில்
நகர் நோக்கிச் செல்வதுண்டு;
நகர்நோக்கி மானுடர் சிலர்
நடந்தும் சில்லுகளிலும் செல்வர்.
உழைக்கும் தொழிலாளர் அவர்.
வழுக்கியாறு கடலுடன்
சங்கமிக்கும்
பாலத்தில் இறால்
பிடித்துக்கொண்டிருப்பர்
கடற் தொழிலாளர் சிலர்.
கார்க்கியின் தாய் படித்துக்
கனவுகள்
கண்டுகொண்டிருந்த காலமது
கீழ்வானம் சிவந்திருக்க,
அடிவானத்து வெள்ளி கண்டு
அகத்தில் உவகை பொங்க
மேலும் கனவுகளில் ஆழுமென்
நெஞ்சு.
கீழ்வானம் ,
கீழ்வெள்ளி மாந்தர்தம் விடிவினை
எதிர்வு கூறும். என் நெஞ்சோயதை
எண்ணிக் கும்மியடிக்கும்.
உப்பளம், அதையடுத்து
உள்ள கல்லுண்டாய் வைரவர் கோயில்
இன்னும் சிறுதூரம் சென்றால்
இளந்தென்றலில் கதிராடும்
வயல்வெளி, அதனூடு தவமியற்றும்
மண்கும்பிக் குறுமுனிவர்.
கடந்து செல்லின்
காக்கைதீவு மீன் சந்தை.
கட்டுமரத்தில், வள்ளத்தில்
தொழிலுக்குச் செல்லும்
தொழிலாளர்.
தொடர்கையில்
பாதையொன்று நாவாந்துறை பிரிய
பொம்மைவெளி தாண்டி
நகருக்குள் நான்
நுழைவேன்.
மீண்டும் மாலைகளில்
மருத நில மண் நோக்கி
என் பயணம் தொடங்கும்.
மீண்டும் தொடங்குமிரு
சில்லுப் பயணத்தில்
சிந்தை யிழப்பேன்.
அந்திக் கதிராழியில்
அஸ்தமிக்கும் நேரம்.
வெளி ஊடறுத்து விரைகையில்
சில போதுகளில்
உலைகளில் கடலட்டையவித்து
உலரப் போட்டிருப்பர்
வீதியோரங்களில்...
அந்தியிருளில் தொழிலாளர்
வள்ளங்கள் , கட்டுமரங்கள் ..
ஓவியச் சட்டகங்களாய்
நினைவுகளில் படிய..
விரைந்து கொணடிருப்பேன்.
பசுங்கிளிகள், பல்வகைக்கடற்
பறவைகள்,
வயல்வெளிகளில் பயிர்களாட
வெளிகடந்து , வழுக்கியாறு பாலம்
கடந்து
மடத்தடி தாண்டி வீடு திரும்புகையில்
மனத்தில் மகிழ்ச்சி மலரும்.
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.