ஓயாமலுழைத்து நிற்கும் ஓருயிரை நினைப்பதற்கு
தாய்நாளாய் ஒருநாளை தரணியிலே வைத்துள்ளார்
வாழ்வெல்லாம் எமக்காக ஈந்துநிற்கும் அவ்வுயிரை
வதங்காமல் காப்பதுதான் மானிலத்தில் தாய்த்திருநாள் !
சுமையென்று கருதாமல் சுகமாக எமைச்சுமந்து
புவிமீது வந்தவுடன் புத்துணர்வு அவளடைவாள்
அழுதழுது அவதியுற்று அவளெம்மை பெற்றிடுவாள்
அவள்மகிழச் செய்வதுவே அன்னையரின் தினமாகும் !
காத்துவிடும் தெய்வமாய் காலமெலாம் இருந்திடுவாள்
கண்ணுக்குள் மணியாக எண்ணியெமைக் காத்திடுவாள்
பார்க்குமிடம் எல்லாமே பார்த்திடுவாள் எம்மையே
பாரினிலே அவளுக்கு ஈடாவார் எவருமுண்டோ !
இரவுபகல் அவளறியாள் எமையணைத்து இருந்திடுவாள்
வறுமைநிலை அடைந்தாலும் வாடிவிடா எமைக்காப்பாள்
பொறுமைதனை ஆபரணாமாய் பூண்டிடுவாள் வாழ்வெல்லாம்
நிறைகுடமாய் அவளைப்போல் நீள்புவியில் யாருமுண்டா !
நோயணுகா எமைக்காக்க தானிருப்பாள் பத்தியமாய்
வாய்முழுக்க மந்திரத்தை உச்சரிப்பாள் நாளுவளும்
ஊணுறக்கம் தனைமறப்பாள் உடற்களைப்பை உதறிடுவாள்
நீள்புவியில் இவளைப்போல் யாரிப்பார் எமைக்காக்க !
ஈன்ற பொழுதினிலே தான்பட்ட துன்பமெலாம்
சான்றோனாய் ஆக்குதற்கே எனநினைப்பாள் தாயவளும்
துன்பத்தை தானெடுத்து இன்பத்தை எமக்களிப்பார்
இப்புவியில் தாயைவிட வேறெவரும் இல்லையன்றோ !
அன்னையர்க்குப் பூச்செண்டு கொடுக்கின்ற வேளையிலே
அவரகத்தை உடையாமல் காப்பதுதான் அவசியமே
அன்னையினை வீட்டைவிட்டு காப்பகத்தில் சேர்த்தபின்னர்
அன்னைதினம் எனச்சொல்லி ஆரவாரம் செய்யாதீர் !
பெற்றவளை பேணிடுவார் பெரும்பேறு பெற்றிடுவார்
உற்றதுணை எனவுணர்ந்து பெற்றவளைக் காத்திடுவோம்
எமையீன்ற அன்னையினை எம்முடனே வைத்திடுவோம்
அவளாசி பெற்றுநின்று அவள்பாதம் பணிந்துநிற்போம் !
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.