பொங்கலோ பொங்கல்!
- சக்தி சக்திதாசன் -
பொங்கிடும் பானைகளில்
வடிந்திடும் நுரையினைப் போல்
வளரட்டும் மகிழ்வு உங்கள்
வளமிகு வாழ்க்கையிலே !
கிழக்கினில் உதித்திடுவான் எம்
தகித்திடும் செங்கதிரோன்
தந்திடும் நல் வரம்தனையே நாம்
தாழ்வாய் வணங்கிடுவோம்
உழவரின் வியர்வையினால் நன்கு
உலகமே செழித்திடுமே !
உழைப்பவர் வாழ்க்கையும் அதுபோல்
உயர்ந்திட வாழ்த்திடுவோம்
நேற்றையை உழைப்பினிலே வரும்
இன்றைய அறுவடையே என்றும்
நாளைய வாழ்க்கைக்கு சேரும்
நம்பிக்கை அறிந்திடுவீர்
தமிழரின் திருநாளில் என்
தரமிகு தாய்மொழியில் உம்
தழைத்திடும் வாழ்வதற்கு நான்
தந்திடும் நல்வாழ்த்து
வரைந்திடும் கவிதையின்று
வடித்திடும் வரிகளிலே
வாழ்ந்திடும் உண்மை அன்பை
விளக்கியே வாழ்த்துகிறேன்
பொங்கலோ ! பொங்கல் என்றே
பொங்கி நீவீர் மகிழ்ந்திடுவீர்
புவியினில் அனைவருமே நலமாய்
பலர்ந்திட வாழ்த்திடுவோம்
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
http://www.thamilpoonga.com
http://www.facebook.com/sakthi.sakthithasan
தை மகளே வருக!
- மன்னார் அமுதன் -
தை மகளே வருக!
தரணி பொங்கத் தருக! - இன்பம்
தரணி பொங்கத் தருக!
செந்நெல்லின் தோகைகள் போல்
செழுமை வாழ்வில் பெருக!
காணியிலே வைத்த பயிர்
காளையாக நிமிர - பொலிக்
காளையாக நிமிர
காடு கரை வீடு எல்லாம்
கதிரவனால் ஒளிர
கரையுடைத்து ஓடும் வெள்ளம்
அணைகளிலே மூழ்க - பெரு
அணைகளிலே மூழ்க
கவலைகளை மறந்து மக்கள்
களிப்பினிலே மூழ்க
வரப்புயர நெல்லுயரும்
வட்டிக் கடன் குறையும்
வட்டிக் கடன் குறையும்
வாழ வந்த பெண்களுக்கு
தங்கம் கழுத்தில் நிறையும்
கரும்பின் அடி இனிப்பு போல
காதல் வாழ்வில் மகிழ -மக்கள்
காதல் வாழ்வில் மகிழ
பசி பிணி பட்டினிகள்
சாதல் கண்டு மகிழ
பொங்க வேண்டும் இன்பமெலாம்
பசுவைக் கண்ட கன்றாய் - தாய்ப்
பசுவைக் கண்ட கன்றாய்
மங்க வேண்டும் துன்பமெல்லாம்
மாரி கண்ட கன்றாய்
தைமகளே வருக
தரணி பொங்கத் தருக-இன்பம்
தரணி பொங்கத் தருக
செந்நெல்லின் தோகைகள் போல்
செழுமை வாழ்வில் பெருக
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.