கண்ணுக்குள் மணியானாள்
கருத்துக்குள் உருவானாள்
உணவுக்குள் சுவையானாள்
உணர்வுக்குக் கருவானாள்
மலருக்குள் மணமானாள்
மழைமேகம் அவளானாள்
மண்மீது என்னிடத்து
பிரியேனே எனவுரைத்தாள் !
பொதுநலத்தை உடன்கொண்டாள்
சுயநலத்தைத் தான்துறந்தாள்
வருந்துயர்கள் விருந்தாக
வாஞ்சையுடன் கண்டிடுவாள்
நிரந்தரமாய் இருந்திடுவேன்
எனவுரைத்த மங்கையவள்
நிரந்தரமே இல்லையென
நிரந்தரமாய் உறங்கிவிட்டாள் !
குழந்தையென அவளிருந்தாள்
குறுக்குத்தனம் தெரியாது
குதர்க்கமிடும் குணமதனை
குழிக்குள்ளே புதைத்திடுவாள்
மூத்தோரை தெய்வமென
முன்வந்து வணங்கிடுவாள்
காத்திடுவேன் எனவுரைத்தாள்
கண்ணீரைத் தந்துவிட்டாள் !
மருத்துவத்தை உயிரெனவே
வாழ்வாக்கி வாழ்ந்திருந்தாள்
தனித்துவமாய் மருத்துவத்தை
தயாளமாய் அவளீந்தாள்
கொடுமைமிகு கொரனோவால்
கடுந்துயரில் இருந்தோரை
அணுகிநின்று உபசரித்தாள்
அழவிட்டு அகன்றுவிட்டாள் !
அன்பான முகங்காணா
அழுகின்றோம் அனைவருமே
அரக்கனென கொரனோவின்
இரக்கமிலா இதயமதால்
பிரிக்கவொணா அன்புதனை
பிருத்துவிடும் கொரனோவால்
வருத்தமுற்று அழுகின்றோம்
வண்ணமகள் மறைந்துவிட்டாள் !
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.