1.பூவின் வாசனைக்குத் தூலவடிவம் தருபவன்!
(சமர்ப்பணம்: இளையராஜாவுக்கு)
இசை உனக்குள் கருக்கொள்ளும்போது
நீ உருவிலியாகி
ஒரு காற்றுப்பிரியாய் பிரபஞ்சவெளியில்
அலைந்துகொண்டிருப்பாய்…...
இசையை முழுமையாய் உருவாக்கி
முடிக்கும்வரை
நீ மனிதனல்ல _ தேவகணம்தான்.
உன் உயிரில் கலந்த இசை
என்னை ஊடுருவிச் செல்லும் நேரம்
காலம் அகாலமாகும்;
காணக்கிடைக்கும் சிந்தா நதி தீரம்……
இதயம் எல்லோருக்கும் இருக்கிறது;
மனமும்; ஆன்மாவும்
அப்படியெனில்
இசையென்பது உன்னில் என்ன?
அழகிய பூவுக்கு வடிவம் உண்டு.
வரையலாம்.
அந்தப் பூவின் நறுமணத்திற்குத்
தூலவடிவம் தருவதுதான்
உன் இசையென்னும் அருவமாக _
ஆகிறாய் நீ
ஆன்ற புத்துயிர்ப்பை அருள்பாலிக்கும்
பெருமானாய்!
உன் கையில் இசையொரு
அட்சயபாத்திரமாக
அன்றாடம் எத்தனையெத்தனை பேரின்
உறுபசியாற்றிக்கொண்டிருக்கிறாய்!
நேற்றும் இன்றும் நாளையும்
ஊற்றுநீராய் சுரந்தபடியே இருக்கும்
உன் இசையில் தாகமாற்றியபடி
முன்னேகும் வழிப்போக்கர்களுக்கு
நிழல்தரவும் நீயே உன் இசையை
அங்கங்கே நட்டுவைத்திருக்கிறாய்
நெடுமரங்களாய்!
நாள் முழுக்க நடந்து கடந்த களைப்பு மீற
நாங்கள்
எங்கள் அவமானங்களின், ஆற்றாமைகளின்
கன்றிச்சிவந்த காயங்களோடு
கட்டாந்தரையில் தலைசாய்க்கும் நேரம்
தூணோரமாய் நின்றபடி
கனிவோடு எங்களைப் பார்த்துப்
புன்முறுவலிக்கும் உன் இசை
தன் மயிற்பீலி வருடலால்
எங்களுக்குக் களிம்பிட்டு வலியாற்றி
கலிதீர்த்துக் காப்பாற்றிக் கரைசேர்க்கிறது.
கரையில் ஓடமாக அசைந்துகொண்டிருப்பதும்
உன் இசையல்லாமல் வேறேது?
கண்ணெதிரே காணும்
காணக்கூடாதனவற்றிலிருந்து
ஒரு கவசமாய் எம்மைக் காப்பதும்
இந்த கொரோனா வைரஸ் காலத்தில்
கைவசமாகும்
நோய் எதிர்ப்புச்சக்தியாவதும்
உன் இசையொன்றே யாக _
என்றுமான நன்றி யொன்றே
என்னாலாகும்
எளிய கைம்மாறாக….…
2.பாடகனின் அநாதிகாலம்!
(“பாட்டுத்திறத்தாலே இவ்வையத்தைப் பாலித்திட வேண்டும் __பாரதியார்)
(சமர்ப்பணம்: சித் ஸ்ரீராமுக்கு)
’எனை மாற்றும் காதலே எனை மாற்றும் காதலே’
என்று பாடிக்கொண்டேயிருக்கிறான் அவன்
மேடையில்.....
காதல் என்று அவன் பாடுவது எனக்குக்
காலம் என்பதாய் குழம்புகிறது.
அவனை மாற்றியிருக்குமோ காதல்?
ஒரு தேவதையிடம் மனுஷி நான் எப்படிக் கேட்பது?
எதையும் மாற்றும் காதலை மாறாத ஒரே ராகத்தில்
மீண்டும் மீண்டும் சொல்லிக்கொண்டேயிருக்கிறான்.
சமயங்களில் சுருதி பிசகுவதாய்த் தோன்றுகிறது.
குரலில் கரகரப்பு கூடுகிறது.
ஆனாலும் அவனுடைய ஆனந்தத் துள்ளலில்
கரடிக்குட்டியும் முயலும் சின்ன பப்பியும்
செல்லப் பாப்பாவும் வரக் காண்பது
சொல்லிலடங்கா சூட்சும தரிசனமாய்…!
இசையின் உன்மத்தநிலையில்
சூரிய சந்திரராய் சுடர்விடும் அந்த விழிகள்
அனந்தகோடிமுறை அருள்பாலிக்கின்றன!
'கண்ணான கண்ணே கண்ணான கண்ணே'
என்று அழைக்கும் அந்தக் குரல்
கண்ணனுடையதாக _
கிறங்கிக்கிடக்கும் கோபியர் கூட்டம்
பாலினங் கடந்து!
வியர்வையில் நனைந்த முதுகுப்புறச் சட்டையும்
முன்நெற்றி முடிச்சுருளுமாய்
அந்தப் பாடகனின் குரல்
அநாதி காலத்திலிருந்து கிளம்பி
அரங்கில் ரீங்கரித்துக்கொண்டிருக்கிறது.
மேடையிலிருந்த வாத்தியக்காரர்களெல்லாம்
அவனுடைய பிரதிபிம்பங்களாய்….
அல்லது, அந்தப் பாடகன் அவர்களுடைய
விரல்களனைத்தின் ஒற்றைக்குரலாய்....
பாடலை எழுதிய, இசையமைத்த
கைகளும் மனங்களும்
தனி அடையாளம் இழந்து அந்தக் குரலில்
இரண்டறக் கலந்து
ஈரம் நிறைக்கும் இசையில்
அரங்கமெங்கும் க்வாண்ட்டம் அணுக்களாய்
விரவிய ரசிகர்களின்
காலம் இல்லாமலாகியது.
அன்பின் குறுக்குவழி அல்லது சுற்றுப்பாதையின்
அரூப ஓவியங்களைத் தீட்டிமுடித்து
அவன் விடைபெற்றுக்கொள்ளும்போது
அரங்கிலுள்ளோர் எழுந்து நின்று கைதட்டி
அவனை அத்தனை அன்போடு
வழியனுப்பிவைக்கிறார்கள்.
நான்கு சுவர்களுக்குள் ஒரு பிரபஞ்சவெளியை
உருவாக்கித்தந்தவனுக்கு
என்னவென்று நன்றிசொல்வது என்று தெரியாமல்
நீர் தளும்பி வழிகிறது கண்களிலிருந்து.
3. P.சுசீலாக்களின் பெருங்கருணை!
(சமர்ப்பணம்: பாடகி பிரியங்காவுக்கு)
குரல் வழி பரவும் கனிவினிமையில்
ஒவ்வொரு மனதிலும்
காலத்தின் அதலபாதாளத்திலிருந்து
அல்லது, கைக்கெட்டா உயரத்திலிருக்கும்
பரணிலிருந்து
சில தருணங்கள் துடித்தெழுந்து
தரையிறங்கிவருகின்றன.
சில பாதி மூடிய,
இறுக்கமாகத் தாழிட்ட
கதவுகள்
தாமாகவே விரியத் திறந்துகொள்கின்றன.
விஸ்வநாதன் - ராமமூர்த்தி
கண்ணதாசன் தேவிகா கல்யாணகுமார்
ஸ்ரீதர் இன்னும் எத்தனையோ பேருமான
ஒரு சுசீலாவின் வாய்திறந்து
அத்தனை சுசீலாக்களும் பாடுகிறார்கள்.
ஆனாலும் சேர்ந்திசையாகாது,
அவரவருக்கு மட்டுமானதாக
மிகத்தனியாக
இசைத்துக்கொண்டிருக்கிறது பாடல்.
தடையரண்களெல்லாம் தகர்ந்துபோக
ஒரே சமயத்தில் தானாகவும் பிறனாகவும்
வாழக் கிடைக்கும் வாழ்க்கை
இந்த ஏழை மனதை
தொட்டதெல்லாம் பொன்னாக்கும்
ரசவாதியாக்குகிறது!
அரங்கமொரு பிரபஞ்சவெளியாகிறது.
ஒரு பிறவிக்குள் எத்தனையெத்தனை
மறுபிறவிகள்!
அத்தனையையும் வாழ்ந்துபார்க்கும் ஆர்வமும்
வாழ்ந்தாகவேண்டிய அயர்வுமாய்
அமர்ந்திருக்குமவர்களை
அந்தப் பெண்ணின் குரல் அத்தனை பிரியமாய்
வருடித்தரத் தர
அவர்கள் ஏழைக் குசேலனின் அவிலாய்
தங்கள் கைத்தட்டல்களையும் கண்ணீர்த்துளிகளையும்
பரிசளிக்கிறார்கள்.
பாடல் முடிந்து
கதவுகள் ஒன்றன்பின் ஒன்றாய்
மீண்டும் மூடிக்கொண்டபின்னும்
விட்டகுறை தொட்டகுறையாய்
சன்னமாய் மென் காற்று வீச,
இன்னும்
மனமெங்கும் ரீங்கரித்துக்கொண்டிருக்கும்
சுநாதம்.
4. உற்சவம்
குரலின் திருக்கோலம் காண்பதொரு
கொடுப்பினையாய்
இரு கரம் கூப்பிக் கண்மூடித்
தெருநீள வழிபார்த்து
இருகால்களும் நிலம் பாவாமல்
பரந்து விரிந்த வெளியெங்கும்
பறந்து பறந்து
பரவசத்தில் கண்கிறங்கிக்
கிடந்ததொரு காலம்……
உருகும் உள்ளெங்கும் இசை
நிறைத்துப் பெருகி
வித்தாகிப் பித்தாகி கத்துங்கடல்
முத்தாகி
யெத்தாலும் அழியாச் சொத்தாகி
செத்தாலும் மறவாத நினைவாகி
மொத்தமாயெனை ஆட்கொண்டிருந்த
தொரு காலம்.....
வரமனைய இசையின் பிசிறுகளும்
பேதங்களும்
சிறுகச்சிறுகப் புரிய
புரிதலுக்கப்பால் சில நிரவல்களும்
நிறுத்தங்களும்
வெறும் பேரிரைச்சலாக
பத்தோடு பதினொன்று
அத்தோடு இதுவுமொன்றாய்
குரலின் திருக்கோலம் காணும்
பேரார்வம்
நத்தையோட்டுக்குள் சுருண்டு
முடங்கியதொரு காலம்……..
திருவீதி யுலா நாளும்….