வாழையிலை குடையாக
வதனமெலாம் மலர்ச்சியுற
விண்ணின்று பன்னீராய்
மழைத்துளிகள் சிந்திடவே
நாளைதனை நினையாமல்
நனையுமந்த திருக்கோலம்
பார்ப்பவரின் மனமெல்லாம்
பக்குவமாய் பதிந்திடுமே !
உலகநிலை தனைமறந்து
உளமகிழ்வு முகம்காட்ட
மழைநனையும் அழகுநிலை
மனமதனில் அமர்கிறதே
களங்கநிலை காணாத
காதல்நிறை பிணைப்பாக
கைதொட்டு நிற்குநிலை
களிப்பூட்டி நிற்கிறதே !
ஏழ்மையது எழிலாக
இங்குருவாய் ஆகியதே
ஆழமுடை அன்புநிலை
அருகணைந்து தெரிகிறதே
வாழையிலை மகிழ்வுடனே
காதல்கண்டு மகிழ்கிறதே
மழைகூட இவர்களுக்கு
வாழ்த்துக்கூறி நிற்கிறதே !
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.