- அண்மையில் எனது கண்ணம்மாக் கவிதைகள் ஐந்தினைத் தனித்தனியாக இங்கு பதிவு செய்திருந்தேன். அவை அனைத்தையும் தொகுத்து இங்கு தந்துள்ளேன். 'காலவெளி' நம் இருப்பின் யதார்த்தம். இச்சொற்றொடரைக் காணும் போதெல்லாம், கேட்கும் போதெல்லாம், வாசிக்கும் போதெல்லாம் நெஞ்சில் களி பொங்குகின்றது; சிந்தனைக்குருவி சிறகடித்துப்பறக்க ஆரம்பித்து விடுகின்றது. காலவெளியற்று இங்கு எதுவுமேயில்லை. காலவெளி பற்றிய என் உணர்வுகளின் பிரதிபலிப்புகள் இக்கவிதைகள். -
1: காலவெளிச்சித்தனின் மடலொன்று!
ஒளிக்கூம்புக்குள் விரிந்து , சுருங்கி,
மீண்டும் விரிந்து
கிடக்குமென் அண்டம்.
அடியே! அண்டத்தில் நீ இங்கெங்கு சென்றிடினும்
உன்னால் ஒருபோதுமே என்னிடமிருந்து
மறைந்துவிடவே முடியாதடி.
ஏனென்று கேட்கின்றாயா?
நீயே அறிந்துகொள்
நீயே புரிந்துகொள்
என்று நானுனக்குக்கூறிடப் போவதில்லை.
உன் சிந்திக்குமறிவுக்கும் வேலை
வைக்கப்போவதில்லை.
நானே கூறுகின்றேன் விளக்கம் கண்ணம்மா!
உன்னால் புரிந்துகொண்டிட முடிந்தால்
புரிந்துகொள்.
ஏனென்றால் இப்பிரபஞ்சத்துடனான என் உறவு
ஏன் உன் உறவும் கூடத்தான்
ஒருபோதுமே பிரிக்கப்பட முடியாதடீ.
இருந்தாலும் கவலையை விடு.
இன்னும் சிறிது விளக்குவேன்.
நீ, நான் , இங்குள்ள அனைத்துமே
துகள்களின் நாட்டியம்தாம்.
சக்தியின் வடிவம்தான்.
புரிந்ததா சகியே!
இன்னுமொன்று இயம்புவேன் கேள்.
இங்கிருந்து எத்தொலைவும்
ஏன் இட-வெளி மீறிப்
பயணிக்கும் காலவெளிச்சித்தன் நான்.
முடியுமா? சாத்தியமா? என்று நீ
கேட்கலாம். இல்லை கேட்பதென் காதுகளில்
விழுகின்றது.
'அறிவுணர்வு' வாகனமென்னிடமுள்ளதே.
ஏன் உன்னிடமுமுள்ளதே.
ஏன் அவர்கள் எல்லாரிடமும் உள்ளதே.
அதன் மூலம். ஆம்! அதன் மூலம்
என்னால் இட-வெளியை மட்டுமல்ல
அதற்கப்பாலும் பயணிக்க முடியும்.
அதனால்தான் கூறினேன் 'உன்னால்
எங்கு சென்றிடும் என்னாலும் அங்கு வரமுடியுமென்று;.
நீ எஙகே! அடி கண்ணம்மா நானும் அங்கே!
என் வெளியில் நானிருக்கின்றேன்.
என் வெளியில் நீயும் இருக்கின்றாய்.
உன் வெளியில் நீ இருக்கின்றாய்.
உன் வெளியில் நானும் இருக்கின்றேன்.
என் வெளியில் அவர்களும் இருக்கின்றார்கள்.
அவர்கள் வெளிகளில் நாமும் இருக்கின்றோம்.
நீயிருப்பதும், அவர்கள் இருப்பதும் என் வெளியில் என்றால்
எப்படி நீயும் அவர்களும் சுயாதீனமாக இருக்க முடியும்
என்னை மீறி.
உன் நிலையும் அதுதானே. உன்னை மீறி
அவர்களை மீறி,
நானெப்படி இங்கிருக்க முடியும்?
கண்ணம்மா புரிந்ததா? விடை தெரிந்ததா?
என்னை மீறி நீயில்லை. இவ்வுலகில்லை.
இங்கு எதுவுமேயில்லை.
அதனால் பிரிவுமில்லை.
பிரிவற்ற உறவினில்
அறிவு மிகுந்து பிரகாசிக்கின்றேன்.
'அறிவுணர்'வால் சுடர்விடுகின்றேன்.
2. மின்னலே! நீ மின் பின்னியதொரு பின்னலா ?
உண்மையென்று ஏதேனுமொன்றுண்டா ?
நான் பார்ப்பது, நீ இருப்பது இதுவெல்லாம்
உண்மையென்று எவ்விதம் நான் நம்புவது ?
நீயே சொல். நீ சொல்கின்றாய் நீ இருக்கிறாயென்று.உண்மையாக
நீ இருக்கின்றாயென்று.
என்னை விட்டுத் தனியாக எப்பொழுதுமே
இருப்பதாக நீ கூறுகின்றாய்.
எவ்விதம் நம்புவது.
ஆயிரம் மில்லியன் ஒளிவருடங்களிற்கு
அப்பாலிருந்து இருந்து வரும்ஒளிக்கதிர்களுக்கும்
உன்னிலிருந்து வரும் ஒளிக்கதிர்களுக்கும்
இடையிலென்ன வித்தியாசம் ?நேரத்தினைத் தவிர.
உனக்கும்எனக்குமிடையில்எப்பொழுதுமே ஒரு தூரம்
இருக்கத் தானே செய்கிறது. அது எவ்வளவுதான் சிறியதாக
இருந்த போதிலும்.
எப்பொழுதுமே ஒரு நேரம் இருக்கத் தானே செய்கிறது
கணத்தினொரு சிறுபகுதியாக என்றாலும்.
நீ இருப்பதாக நீ சொல்லுவதைக் கூட
நான் அறிவதற்கும் புரிவதற்கும் எப்பொழுதுமே இங்கு
நேரமுண்டு. தூரமுமுண்டு கண்ணே!
காண்பதெதுவென்றாலும் கண்ணே! அதனை அப்பொழுதே
காண்பதற்கு வழியென்றுண்டா ?
காலத்தைக் கடந்தாலன்றி ஞாலத்தில் அது
நம்மால முடியாதன்றோ ?
தூரமென்று ஒன்று உள்ளவரை நேரமொன்று இங்கு
இருந்து தானே தீரும் ? அது எவ்வளவுதான் சிறியதாக
இருந்த போதும்.
வெளிக்குள் காலத்திற்குள் கட்டுண்டதொரு இருப்பு
நம் இருப்பு கண்ணம்மா!
காலத்தினொரு கூறாய்
உன்னை நான் காண்பதெல்லாம் இங்கு
உன்னை நான் அறிவதெல்லாம்
மின்னலே! மின் பின்னியதொரு பின்னலா ?
உன்னிருப்பும் இங்கு மின் பின்னியதொரு
பின்னலா ? என் கண்ணே!
என் கண்ணம்மா!
3: காலவெளி மீறிய கவிஞனடி கண்ணம்மா!
கண்ணம்மா!
நேற்று -இன்று - நாளை என்று
காலத்தின் ஒரு திசை பயணத்தில்
மீளுதல் சாத்தியமற்றதா? ஆயின்
'அறிவுணர்'வுக்கு அது இல்லை. ஆம்!
அது இல்லை. எது?
ஆம்! அதுதான். அதுதான்.ஆம்!
அது இல்லை.
தயக்கமெதுவற்று அதனால் தங்குதடையின்றிப்
பயணிக்க முடியும்.
நேற்று - இன்று - நாளை
காலத்தின் அர்த்தமற்றதொரு நிலை
'அறிவுணர்'வுக்குண்டு.
குவாண்டம் நுரையில் கிடக்கும் இருப்பில்
நேரத்துக்கும் அர்த்தமுண்டோ?
அங்கு அனைத்துமே சம காலத்தில்
இருப்பன. அறிவாயா கண்ணம்மா!
காலமே காலமாகி விட்ட நிலைதான்
குவாண்டம் நிலை. ஆம் ! அந்த நிலை.
என் 'அறிவுணர்'வு கொண்டு
என்னால் எங்கும் பயணிக்க முடியும் கண்ணம்மா!
உனக்கது புரியுமா?
காலவெளிச்சட்டங்களைக் காவிச்செல்லும்
காலவெளிப் பிரபஞ்சத்தில்
காலவெளி மீறிப்பயணிக்க என்னால்
முடியுமடி கண்ணம்மா!
காலைதனை நீ அழகுபடுத்திய
காலவெளிச்சட்டத்துக்குள் கூட
என்னால் இன்றும் பயணிக்க முடியமடி
என் 'அறிவுணர்'வின் துணைகொண்டு.
காலவெளியில் ஒரு திசையில் பயணிக்கும்
பயணங்களை மீறிடும் பக்குவம் அல்லது
பலம் 'அறிவுணர்'வுக்குண்டு.
புரியுமா கண்ணம்மா!
காலவெளியை வளைப்பேன் கண்ணம்மா
என் 'அறிவுணர்'வினால் என்றால் நீ
நகைக்கக்கூடும்/.
ஆயின் அதுவோருண்மை.
நீயும் அறியக்கூடும் அறிவின் துணைகொண்டு.
காலத்தை வரையறுக்கும்
ஆம் ஒரு திசையில்
காலவெளியில் கண்ணம்மா
காலவெளி மீறிடுதற்கு உதவிடும்
அறிவுணர்வே! நீ வாழி!
அறிவுணர்வு மிகுந்து, காலவெளி மீறி,
காலமழித்துப் பயணிக்குமெனக்கு
களிப்பன்றி வேறுண்டோ கண்ணம்மா!
நான்
காலவெளி மீறிய கவிஞனடி கண்ணம்மா!
ஆம்!
காலவெளி மீறிய கவிஞனே நானடி கண்ணம்மா!
4: காலவெளிக்காட்டி வல்லுனன்!
காலவெளிச் சட்டங்களைக் கோத்து
உருவானதிந்த இருப்படி கண்ணம்மா!
இவ்விருப்புமொரு காலவெளிப் படம்
என்பதையுணர்வாயாயடி நீ!
என்னாசையொன்றுள்ளதென்பேன்.
என்னவென்று நீ அறியின் நகைக்கக்கூடும்.
ஒருபோதில் ,உணர்வுகள் கிளர்தெழுந்த
பருவத்தினொரு போதில்
உனைப்பார்த்த உணர்வுகளுளவே.
அவ்வுணர்வினைப் பிரதிபலிக்கும் காட்சியுமுளவே.
அப்போது கண்ணம்மா! அதிகாலைநேரம்.
ஆடியசைந்து நீ வந்தாய் பொழுதின் எழிலென.
நினைவுள்ளதா? இருக்கிறதெனக்கு.
மார்புற நூல்தாங்கி, முகம் தாழ்த்தி
நடந்து வந்தாய்; அது உன் பாணி.
நிலம்பார்த்து நடக்குமுனக்கு
நடப்பதற்கு,
நேரெதிர்க் காட்சிகள்
தெரிவதெப்படி என்று வியப்பதுண்டு அப்போது.
இருபுறம் பிரிகுழல் இடைவரை
இருந்தசைய ,
பொட்டிட்ட வதனத்தில் நகையேந்தி நீ'
நடந்துவருமெழிலில் பொழுது சிறக்கும்.
ஒருபோதில் வழக்கம்போல் அசைந்து சென்றாய்
அதிகாலைப்பொழுதொன்றில்.
அவ்விதம் சென்று சந்தி திரும்புகையில்
ஓரப்பார்வைக்கணை தொடுத்துச் சென்றாய்.
நினைவிருக்கிறதா? ஆனால் எனக்கு
இருக்கிறதடி.
அக்கணத்தைச் சிறைப்படுத்தி ஆழ்மனத்தினாழத்தே
பத்திரப்படுத்தி வைத்துள்ளேன்.
அதற்கு எப்போதுமில்லையடி
விடுதலை/ ஆயுள் தண்டனைதான்.
இருக்கும் வரை அதனாயுள் அங்குதான்.
ஆசைபற்றிக் கூறியபின் அலம்பலெதற்கு\
என்று நீ கேட்கின்றாய் என்பதும்
புரிகின்றதடி கண்ணம்மா!
திரையிலோடிவிட்ட காட்சிகளை மீண்டும்
'ஓடவிட்டு, ஓடிவிட்ட காட்சிகளிலொன்றிக்
கிடப்பதில்லையா கண்ணம்மா! அதுபோல்
காலவெளிக் காட்சிகளை ஓடவிட்டாலென்ன?
ஆம்! மீண்டும் ஓடவிட்டாலென்ன?
என்று நாம் சிந்துப்பதுண்டு கண்ணம்மா!
இவன் சித்தம் சிதைந்ததுவோ என்று நீ
சிரித்தல் கூடும். நன்றாகச் சிரி.
சித்தம் சிதைந்த சிந்தனையின் விளைவல்ல
கண்ணம்மா இது.
சித்தச் செழிப்பின் விளைச்சலடி இது.
குவாண்டத்திரையில் இருப்புக்குப்
பல நிலைகள் ஒரு கணத்திலுள்ளதை
அறிவாயாயடி கண்ணம்மா!
அறியின் என் சித்தச் சிறப்பினை உணர்வாய்.
காலவெளித்திரையில்
காலவெளிச்சட்டங்களை
இருந்த காலம் நோக்கி ஓட்டிடும்
ஆற்றல் மிக்கவனிவன் என்பதை
நீ உணரின் அதிசயித்துப்போவாயடி.
காலவெளித்திரையில்
காலவெளிக்காட்டி இயந்திரத்தை
இயக்குபவன் நானடி கண்ணம்மா.
முன்னோக்கி, பின்னோக்கி எனப்
பல்நோக்கில்
இயக்குவதில் வல்லவன் நானடி.
ஆம்!
காலவெளித்திரையில் இருப்புக்காட்சிகளை
முன், பின் நோக்கி ஓட்டுவதில்
நிபுணத்துவம் பெற்ற வல்லுனனடி கண்ணம்மா
நான்.
5. காலவெளிக் கைதிகள்!
காலவெளியிடையே கண்ணம்மா உன்
கனிமனம் எண்ணி வியக்கின்றேன்.
காலவெளியிடையே கண்ணம்மா
கணமும் பறந்திட விளைகின்றேன்.
காலவெளிச் சிந்திப்பிலே கண்ணம்மா
களித்திட கணமும் எண்ணுகின்றேனடி.
சூழலை மீறியே கண்ணம்மா
சிந்திக்க விரும்புகின்றேனடி.
காலமென்றொன்றில்லை கண்ணம்மா.
வெளியும் அவ்வாறே கண்ணம்மா.
காலவெளி மட்டுமே கண்ணம்மா இங்கு
உண்மையடி கண்ணம்மா.
அறிவின் உச்சம் பற்றி கண்ணம்மா
பிரமித்துப்போகின்றேனடி கண்ணம்மா.
மனத்தின் அசை இன்னும் முடியவில்லையடி.
எப்பொழுதென்றாயினும் நீ கண்ணம்மா
இவ்விதம் எண்ணியதுண்டா கண்ணம்மா?
நான் எண்ணுகின்றேன் எப்பொழுதும் கண்ணம்மா.
நான் வியந்துகொண்டிருக்கின்றேன் எப்பொழுதும்
கண்ணம்மா.
நான் எண்ணுவேன் எப்பொழுதும் கண்ணம்மா.
நான் வியந்துகொண்டிருப்பேன் எப்பொழுதும் கண்ணம்மா.
காலமற்ற வெளியில்லை கண்ணம்மா.
வெளியற்ற காலமில்லையா சொல்லம்மா.
காலம் நீயென்றால் கண்ணம்மா
வெளி நானன்றோ இல்லையா?
வெளி நானென்றால் கண்ணம்மா
காலம் நீயன்றோ இல்லையா?
காலவெளியன்றோ நாம் கண்ணம்மா!
காலவெளியன்றோ நாம் கண்ணம்மா!
காலவெளியாகக் கண்ணம்மா – நாம்
உள்ளதெல்லாம் கண்ணம்மா
உண்மையா கண்ணம்மா?
உண்மையா கண்ணம்மா?
காலவெளிக் கோலமன்றோ கண்ணம்மா
ஞாலத்தில் நம்நிலை கண்ணம்மா.
காலவெளி கடக்காக் கைதிகளா நாம் கண்ணம்மா?
கைதிகளா நாம்? ஆம் கண்ணம்மா!
காலவெளிக் கைதிகளே நாம் கண்ணம்மா!
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.