1. புதுமை காட்டும் பாங்குடனே புதிய வருடம் பிறக்கட்டும் !
வெடித்துச் சிதறும் பட்டாசு
விடியல் காட்டும் குறியல்ல
இடக்கு முடக்கு வாதங்கள்
எதற்கும் தீர்வு வழியல்ல
நினைப்பில் மெய்மைப் பொறியதனை
எழுப்பி நின்று பார்திடுவோம்
பிறக்கும் வருடம் யாவருக்கும்
சிறப்பை ஈந்து சிரிக்கட்டும் !
அறத்தைச் சூது கவ்வுமெனும்
நினைப்பை பொசுக்கி எரித்திடுவோம்
உளத்தில் உறுதி எனுமுரத்தை
இருத்தி வைக்க எண்ணிடுவோம்
வறட்டு வாதம் வதங்கட்டும்
வெறுக்கும் எண்ணம் மடியட்டும்
சிரிப்பு மலராய் மலரட்டும்
பிறக்கும் வருடம் இனிக்கட்டும் !
வறுமை முகங்கள் மலரட்டும்
சிறுமை தொலைந்து போகட்டும்
சிறகு விரிக்கும் பருந்தெல்லாம்
திசைகள் அறியா சிதறட்டும்
உரிமைக் குரல்கள் ஒலிக்கட்டும்
தரிசு மனங்கள் தளிர்க்கட்டும்
புதுமை காட்டும் பாங்குடனே
புதிய வருடம் பிறக்கட்டும் !
2. இரண்டாயிரத்து இருபதை இன்முகமாய் வரவேற்போம் !
இரண்டாயிரத்து பத்தொன்பது எமைவிட்டு செல்கிறது
இரண்டாயிரத்து இருபது எம்மிடத்து வருகிறது
பட்டவெங்கள் துயரனைத்தும் பறந்தோடிப் போகவென்று
இஷ்டமாய் இறைவனிடம் எல்லோரும் வேண்டிடுவோம்
இனமோதல் மதமோதல் இல்லாமல் போகவென்று
எல்லோரும் மனமார இறைவனிடம் இறைஞ்சிடுவோம்
பணமுள்ளார் மனமெல்லாம் பசித்தவரை பார்ப்பதற்கு
படைத்தவனே உதவிடென பக்குவமாய் வேண்டிடுவோம்
சதைவெறியால் அலைகின்ற சண்டாளர் திருந்துதற்கு
உதவுகின்ற வழிவகையை உயர்சட்ட மாக்கிடுவோம்
தெருவழியே மதுவரக்கன் திரிகின்ற நிலையதனை
உருதெரியா தாக்குதற்கு ஒன்றிணைவோம் வாருங்கள்
அரக்ககுண முள்ளார்கள் அரசுகட்டில் ஏறாமல்
ஆக்குகின்ற விழிப்புணர்வை அனைவருமே பெற்றிடுவோம்
அறவாட்சி செய்திடுவார் எனவெண்ணும் ஆளுமையை
ஆராய்ந்து ஆராய்ந்து அரசுகட்டில் அமர்த்திடுவோம்
பொய்முகத்தைக் காட்டிடுதல் போலிவேசம் போட்டிடுதல்
நல்லதல்ல என்பதனை நாமுணர்தல் நலம்பயக்கும்
வல்லவராய் இருந்தாலும் நல்லவராய் இருந்திடலே
வாழ்வாங்கு வாழ்வதற்கு வழியாகும் எனமுணர்வோம்
பெற்றவரைப் பேணிடுவோம் பெரியவரை மதித்திடுவோம்
கற்றபடி நடந்திடுவோம் கசடதனை களைந்தெறிவோம்
சென்ற வருடத்தை சிந்தையின்று அகற்றிவிட்டு
இந்த வருடத்தை இன்முகமாய் வரவோற்போம்
சமயமெனும் சன்மார்க்க நெறியதனை பாழ்படுத்தும்
சதிகாரக் கும்பலினை தானொதுக்கி வைத்திடுவோம்
மனமதனில் நல்லெண்ணம் தோன்றுதற்கு வழிகாட்டும்
தலைசிறந்த பெரியோரை தானணுகி இருந்திடுவோம்
மணம்பரப்பும் மலராக மலரட்டும் புதுவருடம்
மாசெல்லாம் மனமகன்று மருளகன்று ஓடட்டும்
துணிவு மனமேறட்டும் தொண்டுமனம் நிறையட்டும்
மனமகிழ்வு கொண்டுநாம் வரவேற்போம் வாருங்கள்
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.