1.
தண்ணீரில்
மூழ்கிப்போகும் என்று தெரிந்தும்
அம்மா
காகிதக்கப்பலைத் தண்ணீரில் விட்டாள்..
அவ்வைப்பாட்டி
அவள் இல்லை என்று
நினைக்கும்படி
கதை சொல்லிச் சொல்லி
சோறு
ஊட்டிய அம்மா சொன்னதும் பொய்தானே?
இருந்திருக்கலாம்..
நாகரீககோமாளியாக
தாய்மாமன்...
'உம்மாண்டி வருகுது'
என்று சொல்லி
பயமுறுத்தியதும்
அதே அம்மாதானே?
'இந்த வழியால் மட்டுமே போ'
கட்டாயப்படுத்தி
வழியனுப்பிவைக்கின்ற அம்மா..
'சந்தியில் ஆமி நிற்கும்..கவனம்'..
அக்காவும் சொல்வது காதில் விழும்..
வீட்டுப்பாடம்
செய்யவில்லை என்றபடி
அப்பாவின்
முன் முழங்காலில் நின்றது...
யாருக்கும் தெரியாமல் வாங்கி
மறைத்து அவனது கடிதத்தை
சபையில் போட்டுடைத்த தம்பி...
அவசரம் அவசரமாக
யாரோ ஒருவனுக்கு
மனைவியாகி...
அதே அம்மாவாய்..
அதே அப்பாவாய்...
அதே தம்பியாய்..
அதே அக்காளாய்
அதே பொய்களுடனும்,
புரியாத உணர்வுகளுடனும்...
மகளை வழியனுப்பிவைக்கிறேன்.
பள்ளிக்கூடத்திற்கு..
வேலைக்கு..
கணவனுடன்...
பாட்டியாகினினும்...
2.
என்னைச்
செதுக்கியவர்கள் பற்றிக் கேட்கிறாய்.
வீட்டு முற்றத்துப் பூக்கள்,
அவற்றின் மீது
அமர்ந்திருக்கும்
பனித்துளி அல்லது வண்ணத்துப்பூச்சி.
கால்களை
கீறிப் பார்க்கும் கற்கள் அல்லது முட்கள்.
அழகாய் காற்றில்
அசைந்து
கனவுகளுக்கு கையசைக்கும்
அம்மா காயப்போட்ட துணிகள்..
வேலிக்கென
வெட்டிய பனையோலையை
காலால்
மிதித்து அடுக்குக் குலையாமல்
வரிசைப்படுத்து செல்லப்பா மாஸ்டர்..
திரும்பத் திரும்ப
ஒரே பாப்பா பாடலை
தன் குழந்தைகளுக்குச்
சொல்லித்தரும்
கலைவாணி ரீச்சர்..
ஓடிக்கற்றுகொள்
என தன் சைக்கிளைத் தந்து,
பின்
விழுந்து காயத்துடன் போய் நிற்கையில்
புன்னகைத்தபடி...
மருந்து போடும்
அப்போதிக்கரி மாமா..
எத்தனை முறை ஏமாந்தாலும்,
மீண்டும்,
மீண்டும் பணம்
தந்து வெளிநாட்டிற்கு அனுப்பிய அப்பா..
மயிலிறகு போட்ட கதைபுத்தகத்தைத் தந்து
வாசி என்று சொல்லிய
நந்தினியின்
காதல்கடிதத்தையும் வாசிக்கின்ற அனுபவம்..
எதைச் சொல்ல..?
சொல்லாமலும்,
எழுதாமலும்
விடப்பட்ட
நாட்குறிப்பின் வெற்றுப்பக்கங்களுமே.
என்னை செதுக்கியிருக்கலாம்..
யாரைச் சொல்ல?
கொலைசெய்ய உன்னையே
அனுப்பிய அவர்களைப்பற்றியும் சொல்லவா??
போடி போ..
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.