ஓன்பது பத்து என்ற
உயரிய அழகை யிட்ட
அம்பியே புலவ ரேறே
அகிலமே வியக்கும் மன்னா!
நெம்புகோல் பார திக்குப்
பின்னொரு கவிதை யூறும்
தம்பியாய் வருகை தந்தாய்
தமிழ்மகள் மகிழ்ந்தாள் ஐயா!
மழலையர் மகிழப் பாடி
மதுரமாம் இலக்கி யத்தின்
அழகென ஒலித்த அம்பி
அணித்தமிழ் மரபின் நம்பி
உழவெனப் பாக்கள் இட்டு
உயிரெனக் கவித்தேன் வைத்தே
விழுமியம் படைத்த பாகன்
விளைநிலம் எழுதக் கண்டோம்!
விருதென அறிவி னாற்றல்
வேரிடும் அதிபர் என்க
கருதிடக் கல்வி யாற்றின்
கலங்கரை விளக்கம் கண்டீர்!
பருதியாய்ப் பகரும் அம்பி
பைந்தமிழ் மகளின் தம்பி
எருதெனத் தமிழாள் தேரை
இழுத்திடும் பாகன் என்போம்!
சின்னஎன் விரதத் தோடும்
சீரிய விளக்கத் தோடும்
கன்னலாய் மனிதம் பாடும்
கவினுறு பாவி னோடும்
அண்ணலாய் நின்ற அம்பி
அகிலமே வியக்கும் தும்பி
மண்ணிலே மகுடம் கண்;டீர்
மாறனே வாழ்க! வாழ்க!
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.