1
பதின் பருவ பள்ளியாய்ப் போன
முள் மரங்களின் குத்தகைத்தாரர் நீ
ஆடுகளின் ஓய்விடங்கள்
கவட்டையோடு உன்னை அடிக்க
அலைந்து திரிந்த நிலங்கள் பலவிதம்
தலை தூக்கி சூரியனோடு நீ பேசும்
உரையாடல் கேட்க காத்திருந்த மணித்துளிகள் பல
எதற்குத் தலையாட்டுகிறாய் என்று
என்னைத் தவிர யாருமில்லா நண்பகலில்
சிந்தித்துக் கொண்ட காலங்கள் அநேகம்
என் கவட்டைக் கல்லுக்கு இரையான உனது
உறவினர்கள் கனவுகளில் புரியாத மொழியில்
பேசிக் கொண்டே இருக்கிறார்கள்
நீ வாழ்ந்த இடமெல்லாம் வீடுகளாய்
உன்னைப் பார்த்து ஆண்டுகள் பல
எங்களைப் போல வாழ்வாதாரம் தேடி
எங்கோ வாழ்ந்து கொண்டிருப்பாய் என்ற
நம்பிக்கையில் உனது நினைவுகளோடு பூமியில்
உனக்குப் பின் பிறந்த ஒரு விலங்கு.
2
காலமும் கரைத்துத் தான் பார்த்தது
கடந்து நிற்கும் சிலையும்
மறைந்து நிற்கும் வரலாறும்
மனிதச் சிந்தனைக்கு எட்டாத அறிவில்
சற்று முயற்சிக்கத் துணியும் பறவை
ஏதேனும் உணர்ந்து விட்ட துணிவில்
பறந்த களைப்புக் காற்றோடு போனாலும்
வரலாற்றுத் தடத்தில் தன் சிந்தை
விலக மனமற்று அமர்ந்திருக்கும் அது.
மன்னனின் ஆசையில் முகிழ்த்த சிலை
அவன் மறைந்தும் தான் வாழும்
மகத்துவத்தை உலகுக்குக் காட்டும் விந்தை.
நீண்ட வாழ்தலின் ரகசியம் கேட்டு
ஒரு பறவையின் நீண்ட நிற்றல்
வெற்றிக்கிட்டும் என்ற நப்பாசைய
3. ஆணிவேர்
ஆண்டின் சில நாட்கள்
பூத்திருக்கும் மலர்கள் வாசனையின் பவனி
அப்படித்தான் எனக்கும்
உயிர் வாழ்தலின் உயிர்ப்புகளில்
ஒன்று
பள்ளிச் சீருடையுடன் பிள்ளைகளைக் காண்பது
பார்வையில் ஒட்டிக் கொண்ட ஓவியமென
அவர்கள் செயல்பாடுகளில் ஆனந்தத் தாண்டவம்
எனக்கும் தான்
பொங்கி வரும் மகிழ்ச்சியில் அவர்களோடு நானும்
மைதானம் அமைதியில் ஆழ
வகுப்பறையில் உயிர்களின் உரையாடல்
பள்ளி புன்னை மர நிழலில் அவர்கள் சென்ற பாதை பார்த்து
அமைதியின் ஆன்ம இழப்பு
காலத்தின் ஓட்டம் வருகை வரை
நீண்டுக் கொண்டே செல்ல
அதே மர நிழலில் வருகை எதிர்ப்பார்த்து ஏக்கத்தோடு இதயம் நிறைய
கண்டவுடன் ஓடி வரும் பெருமகிழ்ச்சியில்
மது கோப்பையென நிறைந்து வலிகிறது
வாழ்தலின் ஆணிவேர் பார்வைகளுக்கு அப்பால்.
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.