“பஞ்சத்தில் உழன்று : பட்டினி கிடந்தாலும்….
பட்டதாரி ஆக்கிப் : பார்க்க வேண்டும் தம்மகனை….”
நெஞ்சத்தில் நினைப்போடு : நிறையப் பெற்றோர்கள்,
நெருக்கடிகளைச் சுமந்து : நேரகாலத் தையும்மறந்து ….,
பட்டணம் அனுப்பிவைத்துப் : பட்டதாரி ஆக்கிவிட்டு,
பட்டயம் பெற்றதனைப் : படம்பிடித்து மாட்டிவைத்து,
தொட்டதனைப் பார்ப்பதிலே : சுகமொன்றைக் கண்டுவிடும்,
பெற்றோர்க்கும் பிள்ளைகட்கும் : இக்கவிதை சமர்ப்பணமாம் !
பட்டம் பெறுவதில்தான் : பற்றெல்லாம் இருந்ததனால்,
பழகியே எத்தொழிலும் : பார்ப்பதற்கு வாய்ப்பு இன்றிப்,
பாவம் இவன் நிலைமை : பயனற்ற அலைச்சலிலே…….
பணிகள் பலதேடிப் : படியேறி இறங்குகின்றான்…..!
ஒரு ரூபாச் சீட்டினிலே : ஒரு லட்சம் கனவுகாணும்….
உருப்படார் வரிசையிலே : உள்ளபடி இவனும் ஒன்று !
“உனக்கும் கீழுள்ளோர் : ஒருகோடி என அவரை,
நினைத்துப் பார் அதிலே : நிம்மதியை நாடு” என்று….,
செப்பிய கவிஞர் தன் : சிந்தனை வரிகளை….
திருப்பியே பார்த் துணர்ந்து : திருந்தியே கொள்ளுங்கள் !
“உனக்கும் முன்னே : உள்ளவர் பலரே….
உத்தியோகம் பெற்றோர் : ஒருவர் சிலரே….! ”
என்கின்ற உண்மையை : ஏற்றிட மறுத்தே,
இன்னும் வாழ்க்கையை : இழந்திட வேண்டாம் !
பட்டம் பெறுவதும் : படிப்பில் உழல்வதும்,
“பாபச் செயல்” என்று பகர்ந்திட வில்லை !
”பட்டதாரி ஆவதால் : பலமான மதிப்பும்,
கிட்டுமே உத்யோகம் : உயர்வும் வருமென்று…..”
முட்டாள் தனமாய் : முடிவினி வேண்டா……
முறையாய் தொழில்கற்று : முன்னேற்றம் பெற்றால்……,
கையிலே திறமையும் : கனமான தொழிலுமே,
வையகம் வாழ்த்தும் : வசமான பட்டங்கள்….!
பொய்யான வாழ்க்கைக்கும் : பொருளற்ற பட்டத்துக்கும்,
மெய்யதனை வருத்தியே : மெலிவைத்தான் காணாதீர் !
பொய்யாலும் புரட்டாலும் : புழுத்துப்போன லஞ்சத்தாலும்,
ஐயாமார் வாழ்கின்றார் : அரசு உத்யோகத்தில்…..!
உச்சத்து மதிப்பென்று : உள்ளூர நினைத்தாலும்,
பிச்சைக்கார வாழ்க்கையைத்தான் : பெரும்பாலோர் வாழ்கின்றார் !
எளியோர்தம் வயிறெரிய : ஈனத் தனமாக
இலஞ்சம் பெறுவதில்தான் : இவர் வாழ்க்கை நகர்கிறது !
பாட்டாளிகள் சிந்தும் : பச்சை வியர்வையில்தான்,
பாவிஇவர் வீட்டுணவுப் : பண்டமே ருசிக்கிறது !
பாமரரின் ரத்தத்தைப் : பகிர்ந்தே குடிப்பதில்தான்,
பாழ்படுவார் இவர்தமது : பக்குவமே தெரிகிறது !
பட்டணத்தில் கற்றுப் : பட்டம் பெற்றதெல்லாம்,
பாபத்துக்குத் துணைபோகும் : பட்டாக்கத்தி ஆகிறது !
குப்பையைக் கிளறிவிடக் : குவிவதுவோ துர்நாற்றம் !
இப்படித்தான் இவர்கதையும் : எல்லாமே படுமோசம் !!
உள்ளபடி சிந்தித்து : உறுதியாய் முடிவெடுப்பீர்….
ஊருலகில் நடப்பதனை : ஒருகணம் நினைத்திடுவீர் !
உத்தியோக எண்ணத்தில் : உயர்படிப்பைப் படிக்காதீர்!
உள்ளபடி கைத்தொழிலில் : ஒன்றைத் தெரிந்திடுவீர் !!
காகிதப் பூ செய்வதிலே : காலத்தைக் கழிக்காதீர்….!
மல்லிகைச் செடிவளர்க்க : மண்ணைத் தயார்செய்வீர்…..!!
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.