இரக்கமின்றி கொலைசெய்ய
எம்மதமும் சொன்னதுண்டா
வணக்கத்தலம் வன்முறைக்கு
வாய்ததென்றும் சொன்னதுண்டா
அரக்ககுணம் மனமிருத்தி
அனைவரையும் அழிக்கும்படி
அகிலமதில் எம்மதமும்
ஆணையிட்டு சொன்னதுண்டா !
ஈஸ்டர்தின நன்னாளில்
இலங்கையினை அதிரவைத்த
ஈனச்செயல் தனைநினைக்க
இதயமெலாம் நடுங்கிறதே
துதிபாடி துதித்தவர்கள்
துடிதுடித்தார் குருதியிலே
அதையெண்ணி அகிலமுமே
அழுதேங்கி நிற்கிறதே !
பிராத்தனைக்குச் சென்றவர்கள்
பிணமாகிக் கிடந்தார்கள்
பேயாட்டம் நடந்தேறி
பெருந்துயரே எழுந்ததுவே
இன்னுயிரை ஈந்தளித்த
யேசுபிரான் சன்னதியில்
இரத்தவெறி அரங்கேறி
எடுத்ததுவே பலவுயிரை !
மதங்கடந்து இனங்கடந்து
மக்கள்மனம் சேரவேண்டும்
மதவெறியை இனவெறியை
மனம்விட்டு அகற்றவேண்டும்
புவிமீது பொல்லாங்கு
நிகழ்த்துகின்றார் அனைவருமே
அறவழியில் வருவதற்கு
ஆண்டவனை வேண்டிநிற்போம் !
ஈழத்தின் துயரமதை
எண்ணியெண்ணி அழுகின்றோம்
வாழுகின்ற வயதினிலே
மண்மீது சாய்ந்தார்கள்
ஆழமாய் பதிந்துவிட்ட
அவலமதை நினைக்கையிலே
அழுகின்ற நிலைமாற
ஆண்டுபல ஆகிடுமே !
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.