“பிணிக்கு மருந்து பிறமண் : அணியிழை
தன் நோய்க்கு தானே மருந்து” (திருக்குறள் – 1102)
இதயத்தை நிறைத்து நோகும்
என்காயம் மாற உந்தன்,
அதரத்தின் அழுத்தல் அன்றோ
ஒளஷதம் ஆகும் கண்ணே…!
உதயத்தின் தோன்றல் போலே
உன்துணை தந்து என்னை
கதைதன்னில் நாயக னாக
கண்ணேநீ ஆக்கு ஆக்கு…!
உந்தனைக் கண்ட நாளாய்
உள்ளத்தால் உருகி நான்தான்
எந்தனை மறந்தே போனேன்..,
எதுமறியாப் பித்தன் ஆனேன்…!
வந்தெனை அணைக்க வேண்டும்,
வாழ்வில்நீ கலக்க வேண்டும்..,
சொந்தமாய் ஆக வேண்டும்..,
சொர்க்கத்தைக் காட்ட வேண்டும்…!
எத்தனையோ பெண்க ளோடு,
என்வாழ்வில் பழகி யுள்ளேன்..,
சுத்தமாய் நெஞ்சில் தொட்டுச்,
சுகித்தவள் எவளும் இல்லை…!
பித்தனாய் ஆக்கி என்னைப்,
பின்சுற்ற வைத்தாய் : விந்தை..,
சொத்தென எனக்கு வேண்டும்..,
சொந்தமாய் ஆகு ஆகு…!
ஆத்தாளும் அப்பனும் தான்
அண்ணன்மார் அனைவருந் தான்,
பார்த்துனக்குப் பேசி வைத்த,
“பரதேசி” வேண்டாம் கண்ணே…!
காத்துக் காத்து நானிருந்து,
கண்ணில்குழி ஆகிப் போனேன்…!
நேத்துவந்த எவனைத் தானும்,
நினைக்காதே : வந்து சேரு…!
நினைவிலே வாழ்ந்து : ஆழ்ந்து,
நெஞ்சாலே உருகிப் போனேன்.,
உனைவிட எதையும் எண்ண,
உள்ளத்தில் பலத்தைக் காணேன்..!
மனைதன்னில் வந்து சேரு.,
மார்புக்குச் சொந்த மாகு..,
மனந்தன்னில் மகிழ்ச்சி பொங்க
மணமகள் ஆகு : ஆகு…!
Srirham Vignesh <இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.>