முனைவென்றி நா சுரேஷ்குமார் (பரமக்குடி, இராமநாதபுரம் மாவட்டம்) கவிதைகள்!
1. செல்லமடி நீ எனக்கு!
குடையை மறந்துவிட்டு
வெளியூர்போன நான்
மழையில் தொப்பலாக நனைந்தபடி
வீட்டிற்குள் நுழைகிறேன்!
மழையில் நனைந்த
தன் கன்றுக்குட்டியை
வாஞ்சையோடு தன்நாவால் நக்கி
ஈரத்தை நீக்கும்
பாசமிக்க தாய்ப்பசுபோலவே
என் செல்லமனைவியான நீ
உன் முந்தானையால்
என் தலைதுவட்டிவிடுகிறாய்
'சளி பிளிக்கும்டா செல்லம்'
என்று செல்லங்கொஞ்சியபடி!
நீ பொழிந்த அன்பாலும்
அரவணைப்பாலும்
உன் கைக்குழந்தையாகவே
மாறிப்போனேன் நான்!
உன் முந்தானையால்
ஒரு தூளிகட்டி
அதில் எனை தூங்கவைத்து
தாலாட்டு பாடுடா என்செல்லம்!!
2. தமிழ்த்தாயே!
சித்திரப் பெண்ணடி நீ! – என்
செல்லக் குழந்தையடி நீ!
முத்துரதம் போன்றவள் நீ! – இங்கு
முழுநிலவாய் வந்தவள் நீ!
தித்திக்கும் தேன் சுவையாய் – எங்கள்
தென்னாடு உனைப் போற்ற
எத்திக்கும் புகழ் பெற்ற – அன்பான
எம் தமிழ்த்தாயடி நீ!!
நல்ல மொழியுடையாள் நீ! – என்
நாவில் புகுந்தவள் நீ!!
சொல்லும் மொழிகளிலே – தனிச்
சுவை மிகுந்தவள் நீ!!
எள்ளளவும் குறை காணோம் – இங்கு
என் தமிழ்த்தாய் உன்னிடம்!
பள்ளத்தில் வீழ்ந்தாயடி தாயே! – உனைப்
பாவிகள் மறந்தாரடி தாயே!!
கற்ற பழந்தமிழ் நீ! – எனைக்
காப்பாற்ற வில்லையடி தாயே!
உற்ற தாயாய் நீயிருந்தும் – எனக்கு
உதவ வில்லையே தாயே!
மற்றொரு மொழியாம் ஆங்கிலம் – என்
மானங் காக்குதடி தாயே!
பற்றுதல் குறையவில்லை தாயே! – உன்மேல்
பாசம் மறையவில்லை தாயே!!
நீயும் என் னுயிரன்றோ! – எங்கும்
நான் வணங்கும் தெய்வமோன்றோ!
தாயே சரண மென்றேன்! – தமிழ்த்
தாயே சரண மென்றேன்!!
வாயார உனை நானே – பலமுறை
வாழ்த்து கிறேன் தமிழ்த்தாயே!
துயர் வேண்டாம் தாயே! – இனி
துன்ப மில்லை தாயே!!
தென்னகத்தே வளர்ந்த நீ – இனி
தரணியெல்லாம் தழைப்பாய் நீ!
எனைப்போல பலகோடிப் புலவர்கள் – எப்போதும்
இங்குண்டு உனை வாழ்த்த!!
என் னகத்தே உள்நின்று – இங்கு
எனை யியக்கும் தமிழ்த்தாயே!
உன்தாள் பணிந்து தொழுது – இறுதியாய்
உனை நான் வாழ்த்துகிறேன்!!
3. காந்தி
அரையாடைக் கிழவனாக அகிம்சையோடு வாழ்ந்தானே
திறைகேட்ட வெள்ளையனை தலைவணங்க வைத்தானே
சத்தியத்தின் மறுவடிவாய் சாந்தமான காந்தியடா
இதயத்தில் அகிம்சைதனை ஏற்றிவைத்து வாழ்வோமடா
வெள்ளையர் செருக்கடக்கி வாங்கினான் சுதந்திரம்
விலைவாசி ஏற்றந்தான் இந்தியாவில் நிரந்தரம்
கொள்ளையர் வாழ்கின்ற கற்பிழந்த நாட்டினிலே
வலைவீசித் தேடுகிறேன் வரலாற்றுக் காந்தியை
4. உனக்கொப்பார் யார்!
பெற்றெடுத்த அன்னையுனை பேணுகிறேன் நலமாக
ஈரைந்து திங்களாய்த் தவமிருந்தாய் – வரம்பெற்ற
முனிவனாக எனைக்கண்டு மகிழ்ந்தாயே நீயிங்கு
அன்பே உனக்கொப்பார் யார்!!
அழகான தேவதையே அன்பான காதலியே
பழகுவதில் பாசம்தந்த பாரிஜாதம்! – தலைவியே
உன்னுடை நினைவோடு உயிரோடு வாழ்கிறேன்
அன்பே உனக்கொப்பார் யார்!!
புரியாத மொழியினிலே பலகதைகள் பேசுகின்ற
சிறுகுழவி வாய்மொழியே அமுதம் – பெற்றெடுத்த
அன்னையிங்கு பேர்சூட்ட அழைக்கிறேன் உனைத்தானே
அன்பே உனக்கொப்பார் யார்!!
5. பசி
விளைநிலங்களெல்லாம்
விலைநிலங்களாகிப் போனதால்
சுவரொட்டிகளைக்
கிழித்துத் தின்று
பசியாறிக் கொள்கின்றன
எங்கள்ஊர்ப் பசுக்கள்...!!
6. மணல்வீடு
காற்றடித்தால் கூட
இடிந்துவிழும் எனத்தெரியாமல்
மணல்வீடு கட்டும்
குழந்தைகள் போல்
நான் உன்னோடுசேர்ந்து
காதலெனும் மாளிகை
கட்டினேன்
ஆசையோடு வளர்த்த
காதல்
ஆதரவின்றி நிற்கிறது
இன்று
வாழ்வெனும்
நெடுந்தூரப் பயணத்தில்
நீயின்றி நான்மட்டும்
தனியே நடக்கிறேன்
7. என்ன செய்யப் போகிறாய்?
என்ன செய்யப் போகிறாய்?
தமிழா...
என்ன செய்யப் போகிறாய்?
கல்தோன்றி மண்தோன்றாக்
காலத்தே...
முன்தோன்றிய மூத்ததமிழ்
என்றாயே...
காலங்காலமாய்
வாழக் கதியற்றுநிற்கும்
ஈழத்தமிழருக்காய்
நீ என்ன செய்யப் போகிறாய்?
வறுமையை ஒழிப்பேன்
வாக்களியுங்கள்
என்றாயே...
பொறுமையாய்த்தான்
காத்திருக்கிறோம்
வறுமையை ஒழிக்க
நீ என்ன செய்யப் போகிறாய்?
ஜாதிகள் இல்லா
சமத்துவ சமுதாயம் அமைப்போம்
என்றாயே...
ஜாதிச் சான்றிதழுக்காய்
சாதிகள் கேட்கும்
பிள்ளைகளை
என்ன செய்யப் போகிறாய்?
என்ன செய்யப் போகிறாய்?
தமிழா...
என்ன செய்யப் போகிறாய்?
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
எது மூலதனம்?
- வேதா. இலங்காதிலகம் (ஓகுஸ், டென்மார்க்) -
நம்பிக்கை மூலதனத்தில்
தன்னம்பிக்கைச் சிங்காசனம்.
சுயநம்பிக்கை நிர்மாணத்தில்
சுகவாழ்வு ஆரோகணம்.
மூலதனமற்ற எத்தனம்
கோலப் பிழையாகும்.
பாலைவனத்தில் பயிர்செய்ய
வேலையற்றவனும் சிந்திக்கான்.
ஆரோக்கிய உடலிற்கு
உழைப்பு இலட்சணம்.
உழைப்பின் மூலதனத்தில்
உல்லாசம் வேதனம்.
அங்கீகாரம், அரவணைப்பு
தங்கமூலதனம் பாலருக்கு.
பொங்கும் ஞானமிதால்
பூங்காவன வளர்ச்சியாகும்.
பஞ்சபூத நியமனத்தில்
கொஞ்சும் இயற்கைத் தரிசனம்.
மோகன மூலதனம், இது
அமைதியூருக்கு விமானம்.
நிர்வாகம் சிறக்க
நிதி மூலதனம்,
நிதிநிலை தடுமாறினாலோ
நந்தவனமல்ல குடித்தனம்!
அன்பின்மை பலவீனம்.
அன்பு காலமுழுதும்
சந்தனப் பற்றாகட்டும்.
மனிதநேயம் உலக
சமாதானத்திற்கு மூலதனம்.
மண்மானம், இனமானம்
பிரதான ஆதனம். இது
அவமானமல்ல விழியுங்கள்!
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
காற்றில் நீந்திச் சுகித்திட வேண்டும்!
- வ.ந.கிரிதரன் -
விண்ணில் புள்!
மண்ணில் புள்!
வனத்தில் புள்!
மனத்தில் புள்!
புள்ளினம் பறந்து செல்லும்.
உள்ளமோ சிறகடிக்கும்.
அவற்றை
அவதானிப்பதில்
அளப்பரிய இன்பம்.
புல்லரிப்பில் களிக்குமென்
உள்ளம்.
இறகசைப்பின் விரிவு கண்டு
ஒரே பிரமிப்பு!
அழுத்த வேறுபாடுகளை அவை
கையாளும் இலாவகம்!
எத்துணை அறிவு!
புள்ளினம் தந்திரம் மிக்கவை.
சிறகசைத்தலற்று விண்ணோக்கி
அல்லது மண் நோக்கி விரைதலில்
அவை பாவிக்கும் அறிவின் ஆழம்..
பிரயோகிக்கும் அறிவியலின் புரிதல்...
இவை கண்டு வியக்காமல் ஒருவரால்
எவ்விதம் இருக்க முடியும்?
பறவைகளில்தானெத்தனை பிரிவுகள்:
கடுகி விரையும் குறும்புள்.
நெடுந்தொலைவு செல்லும் பெரும்புள்.
சிறகசைத்தலில்தானெத்தனை
எத்தனை பிரிவுகள்.
ஆலா போன்றதொரு கடற்பறவையொன்று
மிகவும் ஆறுதலான, மெதுவான சிறகடிப்பில்...
வீழ்வதற்குப் பதில் எவ்விதம் வெற்றிகரமாக
எழுகின்றது மேல் நோக்கி?
விரிந்த வெளியில், காற்றில் கட்டற்றுப்
புள்ளினம்போல் சுகித்திட வேண்டும்!
புள்ளினம்போல்
காற்றில் நீந்திச் சுகித்திட வேண்டும்!
காற்றில் நீந்திச் சுகித்திட வேண்டும்!
காற்றில் நீந்திச் சுகித்திட வேண்டும்!
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
அக்கறை/ரையை யாசிப்பவள்
- எம்.ரிஷான் ஷெரீப் (இலங்கை) -
அன்றைய வைகறையிலாவது
ஏதாவதொரு அதிசயம் நிகழக்கூடுமென
படிப்படியாயிறங்கி வருகிறாள்
சர்வாதிகார நிலத்து ராசாவின்
அப்பாவி இளவரசி
அதே நிலா, அதே குளம்,
அதே அன்னம், அதே பூங்காவனம்,
அதே செயற்கை வசந்தம்
அதுவாகவே அனைத்தும்
எந்த வர்ணங்களும் அழகானதாயில்லை
எந்த மெல்லிசையும் புதிதானதாயில்லை
எந்த சுதந்திரமும் மகிழ்வூட்டக் கூடியதாயில்லை
நெகிழ்ச்சி மிக்கதொரு
நேசத் தீண்டலை
அவள் எதிர்பார்த்திருந்தாள்
அலையடிக்கும் சமுத்திரத்தில்
பாதங்கள் நனைத்தபடி
வழியும் இருளைக் காணும்
விடுதலையை ஆவலுற்றிருந்தாள்
காவல்வீரர்களின் பார்வைக்குப் புலப்படா
மாய உடலையொன்றையும் வேண்டி நின்றாள்
அவள் நிதமும்
அப் புல்வெளியோடு
வானுக்குச் சென்றிடும் மாய ஏணியொன்றும்
அவளது கற்பனையிலிருந்தது
இப் பொழுதுக்கு மீண்டும் இக்கரை தீண்டா
ஒரு சிறு ஓடம் போதும்
எல்லை கடந்துசென்று
சுதந்திரமாய்ப் பறக்கும் பட்சிகள் பார்க்கவென
அச் சமுத்திரத்தின் அக்கரையில்
அவளுக்கொரு குடில் போதும்.
-இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
என் கிராமத்திற்கு வந்துபோன கடலைவியாபாரி
-துவாரகன்
நகரச் சந்துகளில்
கூவிக்கூவி விற்ற
கடலை வியாபாரி
ஒருநாள்
என் சின்னக் கிராமத்திற்கு வந்துபோனான்
மழை பெய்து ஓய்ந்திருந்த
மாலைப்பொழுதில்
சிறுவர்கள் மாபிள் அடித்து
விளையாடிக் கொண்டிருந்தனர்.
பெரியவர்கள் கோவிலில்
கடவுளைக் கண்டு
ஆனந்தக் கூத்தாடிக் கொண்டிருந்தனர்.
குழந்தைகளின் மூச்சிலும்
சிறுவர்களின் பேச்சிலும்
ஊர் உயிர்த்திருந்தபோது
ஊரின் ஒதுக்குப் புறத்தால்
வந்துபோனான் கடலை வியாபாரி
கடவுளைத் தூக்கி
வீதியுலாச் செல்ல
இளைஞர்களைத் தேடியபோது
அவர்கள்
யாருக்கும் தெரியாமல்
கடலை கொறித்துக் கொண்டிருந்தனர்.
அழகான கிராமத்தின்
குச்சொழுங்கைகள் எல்லாம்
அசிங்கமாயின
பகிர்ந்துண்டவர்களின் எச்சத்தால்
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
நன்றி சொல்லும் நேரம்…
- சம்பூர் சனா -
நான் பிறந்ததால்
“நீ”
இறந்தாய்..
நீ இறந்ததால்
“நானும்”
இறந்தேன்..
மீண்டும் ஓருயிரென
ஆனாயோ..?,
என்னை இன்று
வாழ்த்துகிறாய்…
உன் ஒரு வாழ்த்துக்காக
காத்திருந்தேன்
பல நாள்..,
இன்று என்னை வாழ்த்துகிறாய்
“நான்” உயிர் நீத்த
பின்னால்…
“நன்றி” சொல்ல
“நான்” இல்லை..,
ஆனாலும் சொல்லுகிறேன் -
“கல்”லாய் உள்ளம் ஆகினாலும்
இதயம் இன்றும் துடிப்பதனால்…!
என் அன்பு வாழுமிடம்
உன் இதயம்
என்பதனால்
“நான்” இறந்து போனபோதும்
உனக்குள் வாழ்வேன்
இதயத்துடிப்பாய்…!
உன் வாழ்த்தின் ராகதாளம்
கேட்கும் போது
சிலநேரம்
என்னிதயம் துடிக்கத் தொடங்கும்
சுயமாய்…!!
மனிதனென்போன் வாழ்த்துகிறான்
பிறந்த பின்னால்…,
நீயோ “மாமனிதன்” -
உன் வாழ்த்தின் பின் பிறக்கின்றேன்
அதனால்…!!
நான் நன்றி சொல்லும் வார்த்தை
உனக்குக் கேட்பதில்லை..,
நான் இன்று மழழை…
என் பாஷை -
அழுகை
அல்லது சிரிக்கும் ஓசை….!!