1. பனிப்பூக்கள்.
பஞ்சின் மென்மை உன் கன்னமாக
விஞ்சும் அழகால் உள்ளம் கனலாகுதே
அஞ்சும் மனமின்றி ஆசையாய்த் தொடுகிறேன்
கொஞ்சமும் பயமின்றி உன் அம்மா ஏசுவாரென்று
அன்னமே வருவாயா அழகுப் பனியில்
உன்னதமாய்ச் சறுக்கலாம் பனியால் எறியலாம்
சின்ன செடிகளின் தண்டுகளில் பனியும்
என்ன அழகாய் அப்பியுள்ளது பனிப்பூ
வெப்பத்தில் உருகிக் கண்ணாடியாய் மின்னும்
ஒப்பனையற்ற அழகு பிரம்மன் சிருட்டியாய்
கற்பனையிலும் காணவியலாது வெப்ப நாட்டினருக்கு
சிற்பம் செதுக்கியதாய் எத்தனை பனிப்பூக்கள்.
வானமே பூமிக்கு இறங்கியதாக பெரும்
தானமான கவின்கலைப் பனிப்பூக்கள் குளிரில்
தேனமுத அதரபானம் அருந்தி சூடேற்றும்
நாணமற்ற இணைகளிங்கு மூலைக்கு மூலை
2. சகுந்தலை
மேனகை - விசுவாமித்திரரின் மோகனக் காதலில்
மேதினியில் உதித்தாளொரு பெண் மகவு.
மேம்பாடு கடமையென வனத்தில் கைவிட்டனர்.
தம்பிரானருளால் சாகுந்தலப் பறவைகளால் சூழப்பட்டது.
கன்வ மகரிஷி கண்டெடுத்து சகுந்தலையானாள்.
கண்ணாக வளர்த்தார். காந்தவெழில் கொண்டாள்.
கண் பறிக்கும் அழகு தேவதையானாள்.
கானக இயற்கையில் தோழியரோடுலாவினாள்.
அரசன் துஷ்யந்தன் வேட்டையாட வந்தான்.
அழகிய புள்ளிமானால் கன்வர் ஆச்சிரமமருகினான்.
அங்கு வேட்டையாடலாகாதெனவறிந்து இயற்கையை இரசித்தான்.
அங்கயற்கண்ணிகளெனத் தோழியருடன் சகுந்தலையைக் கண்டான்.
மெருகேறிய பருவம் போதையேற்ற மையலானான்.
மெல்லிசையெனக் காதலிருவரையும் சுற்றிப் பிணைத்தது.
மொழிகளும் விழிகளுமிணைந்தன. கந்தர்வ மணமுடித்தனர்.
மகிழ்ந்து குலாவி இராசமுத்திரைமோதிரமீந்து பிரிந்தான்.
துஷ்யந்தன் மோகத்தில் மகிழ்ந்து மயக்கமானாள்.
துர்வாசருக்குரிய ஆசிரம வரவேற்பின்றிக் கோபமானார்.
எந்த நினைவில் எனை மறந்தாயோ
அந்த நினைவுடைய வனுன்னை மறப்பானெனச் சபித்தார்.
அடையாளம் கண்டாலே நினைவு திரும்புவானென
சாப விமோசனமும் கொடுத்துச் சென்றார்.
சகுந்தலை மோதிரத்தை நீரில் தொலைத்தாள்.
குழந்தை பெற்றெடுத்தாள். துஷ்யந்தன் வரவில்லை.
பிள்ளையுடன் அரசவைக்குச் சென்றாள். நினைவிழந்த
அரசனவளை நிராகரித்தான். காலம் கடந்தது.
செம்படவரால் மோதிரம் கண்டு நினைவடைந்தான்.
கண்ணுவராச்சிரமத்தில் சிங்கக் குட்டியைத் துரத்தும்
மகனோடு தாயையும் கண்டிணைந்தான்.
காளிதாச காவியம் சொல்லோவியம் சாகுந்தலம்.
3. பூவுலகப் பொன்மொழி தமிழ் மொழி
நாவலந் தீவாம் குமரிக்கண்டத்தில் பிறந்தது.
நக்கீரர் 'இறையனார் அகப் பொருள்' நூலில்
மூன்று தமிழ்சங்கங்கள் 9990 வருடங்கள்
முறையாகத் தொடர்ந்து நடந்தது என்றாராம்
தமிழின் முதல் சங்கம் கி.மு 4400ல்
4449 புலவர்களுடன் சிவன் முருகர் அகத்தியருடன்
38 மன்னர்களும் இணைந்து பரிபாடல், முதுநாரை
முடுகுருக்கு, கலரியவிரை, பேரதிகாரமாகியவை இயற்றப்பட்டதாம்.
இரண்டாம் தமிழ் சங்கம் கபாடபுரத்தில் கி.மு 3700ல்
3700 புலவர்களுடன் அகத்தியம், தொல்காப்பியம்,
பூதபுராணம், மாபுராணம், ஆகியவை இயற்றப்பட்டது.
இதில் எஞ்சியது தொல்காப்பியம் மட்டுமே!
மூன்றாம் தமிழ்ச் சங்கமின்றைய மதுரையில்
கி.மு 1850ல் 449 புலவர்களுடன் அகநானூறு,
புறநானூறு, நாலடியார், திருக்குறளானவை இயற்றப்பட்டது
இரண்டாயிரமல்ல இருபதாயிரம் பழமைத் தமிழ்.
வள்ளுவர், கம்பர், ஒளவை பாரதியீறாகப்
பலரள்ளிப் பரப்பிய ஆதி மொழி
தள்ளவியலாச் சொத்தாம் பழமைத் திமிரே!
உள்ளபடியுலக மொழியில் பதினெட்டாம் நிலையே!
மொழி எம் வாழ்க்கை வழி!
ஆழி! உள்ளாழ்ந்து முத்துக் குளி
குழிவியிலிருந்து தமிழ் பேசத் தொடக்கு!
குழம்புவது பெற்றோரே, சிறார்கள் அல்ல!
தமிழ் கலங்கரை விளக்கிதை உண ர்ந்தால்
கலக்கமற்ற இலக்கு, வேர், ஊன்!
தமிழ் வானிற்கு இணையமும் ஏணி!
தட்டும் விரல் நுனி வியப்புலகம்!
இணையற்றது! இணைந்து மின்னுங்கள் உயர்ந்திட!
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.