தமிழ்த்தாயின் தவப் புதல்வா
தானாக எழுச்சி பெற்றாய்
அமிழ்தான தமிழ் மொழியை
ஆசை கொண்டு அரவணைத்தாய்
தமிழ் முரசாய் நீயிருந்தாய்
தமிழெங்கும் முழங்கி நின்றாய்
தவிக்க விட்டுப் போனதெங்கே
தமிழ் அன்னை தவிக்கின்றாள் !
சங்கத் தமிழ் இலக்கியத்தை
தானாகக் கற்று நின்றாய்
பொங்கிவந்த தமிழ் உணர்வால்
பொழிந்து நின்றாய் பலவுரைகள்
ஒல்காப் புகழ் தொல்காப்பியத்தை
உள்ளம் அதால் நேசித்தாய்
உனைப் பிரிந்து வாடுகின்றார்
ஓலம் அது கேட்கலையா !
வள்ளுவத்தை வாழ்வு எல்லாம்
மனம் முழுக்க நிறைத்தாயே
வள்ளுவத்தை பலர் அறிய
வரைந்தாய் நீ ஓவியத்தை
வள்ளுவர்க்கு சிலை எடுத்தாய்
வள்ளுவர்க்கு உரு கொடுத்தாய்
தெள்ளு தமிழ் அறிவுடையாய்
தேம்பி நின்று அழுகின்றோம் !
வெள்ளித்திரை உன் வரவால்
வீறு நடை போட்டதன்றோ
அள்ளிவந்த உன் தமிழை
ஆர்வமுடன் பலர் ரசித்தார்
எதுகை மோனைத் தமிழாலே
எல்லோரும் உனைப் பார்த்தார்
எல்லோரும் ஏங்கி நிற்க
எங்குதான் சென்று விட்டீர் !
சட்ட சபை வரலாற்றி
சாதனைகள் பல படைத்தாய்
திட்டம் இட்டுச் செயலாற்றி
தீரனாய் உயர்ந்து நின்றாய்
கட்டழகு மீசை உடன்
கறுப்பு நிறக் கண்ணாடி
கலைஞர் அதை அடையாளம்
காணாமல் போன தெங்கே !
மு.க எனும் எழுத்தை
முணு முணுக்கும் மக்களெலாம்
முத்தமிழின் சொத்து என
மு.க வை மதிக்கின்றார்
மு.க. வின் துணிச்சலுக்கு
மு.க தான் சமமாகும்
மு.க வை காணாமக்கள்
மூச் சொழிந்து நிற்கின்றார் !
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.