எல்லாக் கிளிக்கூண்டுகளையும்
எல்லாக் குருவிக்கூண்டுகளையும்
திறந்து வையுங்கள்.
அவை வானத்தின் எல்லைகளை
முகர்ந்து பார்க்கட்டும்.
எந்த உயிரினமும் சிறைகளின்
நிழலைக்கூட பார்த்துவிடக்கூடாது.
எல்லாக் குதிரைகளின் லயங்களையும்
எல்லா மாடுகளின் தொழுவங்களையும்
திறந்து வையுங்கள்.
அவை வனத்தின் எல்லைகளை
தகர்த்து பார்க்கட்டும்.
சுதந்திரக்காற்றும் சுவாசப்பையின்
எல்லைகளுக்குள் சுருங்கிவிடுவதில்லை.
சூரியனைத் தொட்டெறிக்கும்
எல்லைகளும் கட்டைவிரல்
கணக்கினுள் கனிந்துவிடுகிறது.
ஆனாலும் பதிலுக்கு
குதிரைகளின் லயங்களிலும்
மாடுகளின் தொழுவங்களிலும்
எல்லைகளைக் கடந்து வரும்
ஏழைகளை அடைத்துவிடுங்கள்.
ஆனாலும் பதிலுக்கு
கிளிக்கூண்டுகளிலும்
குருவிக்கூண்டுகளிலும்
எல்லைகளைக் கடந்து வரும்
ஏழைகளின் குழந்தைகளை
அடைத்து தனிமைப்படுத்தி விடுங்கள்.
ஏனெனின்
லயங்களும், தொழுவங்களும்
கிளிக்கூண்டுகளும், குருவிக்கூண்டுகளும்
தவறியும் பிரிவின்
துயரத்தை அறிந்துவிடக்கூடாது.
பூமாதேவியின் வகுக்கப்பட்ட
எல்லைகளை
நிந்தனை செய்துவிடாதே.
உலகத்தின் ஆசீர்வதிக்கப்பட்ட
தேசமென மனம்கொள்!