அவ்வளவு தூய்மை
வழிகிறது குழந்தைகள் கண்ணில்
தடுமாறுகிறார்கள் தந்தைகள்
எப்படி இந்த மாசுபட்ட உலகை
அவர்களுக்கு அறிமுகம் செய்து வைப்பது
அவர்களின் நுரையீரல்
பிரம்ம முகூர்த்தத்து ஓசோனால்
நிரம்பி வழிய வேண்டும்
காற்றின் நறுமணம் கற்பழிக்கப்பட்டதை
அந்தப் பிஞ்சுகளுக்கு எப்படிச் சொல்வது
அவர்களின் கைகளில்
வழிய வழிய பூக்கள் பூக்க வேண்டும்
ரத்தம் வழியும் துப்பாக்கிகள்
எதற்காக என்று அவர்கள் கேட்டால்
என்ன சொல்வது
காட்டில் பலா மணக்கும் வாசனை முகர்ந்தபடி
இலைகளின் பேச்சு வார்த்தையை
பறவைகளின் பாடல்களை
அவர்களின் செவிகள் விரும்பக்கூடும்
அணுகுண்டுகளின் வெடிப்புச் சோதனையில்
அவர்கள் செவிடாகி விட்டால்
என்ன செய்வது
பூஞ்சிறுமிகள் பூப்படையும் முன்பே வன்புணர்ந்து கொல்லப்பட்ட
கதைகளை சொல்லித்தான்
அவர்களை பத்திரமாக இருக்கும்படிச் சொல்ல வேண்டுமா
ஆட்டுக்குட்டிகளை
முத்தமிட்டுப் பேசுகிறார்கள்
நாய்க்குட்டிகளை
விரட்டி விளையாடுகிறார்கள்
மனிதர்களை மனிதர்கள் கொல்வதை
எப்படி அவர்களுக்கு சொல்வது
அவ்வளவு புதிதாக இருக்கும் அவர்களை
அத்தனைப் பழையதாக
நம்மைப் போல எப்படி மாற்றுவது.
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.