தைதரும் வளமெனுந் தங்கநாள் பொங்கல்
தமிழ்ப்பெருஞ் சந்ததிச் சார்பிடும் பொங்கல்
கையிலே அறுவடைக் களம்தரும் பொங்கல்
காலமெல் லாம்பிணி காத்திடும் பொங்கல்
மைவரை உலகமாய் மாண்பிடும் பொங்கல்
மரபெனுஞ் செந்தமிழ் வார்த்திடும் பொங்கல்
செய்யவார் வெள்ளையர் தேசமும் பொங்கல்
சிறப்பிடும் நன்றியே! பொங்கலோ பொங்கல்.
வானுயர் தமிழ்மர பென்றுவை யத்துள்
வரையறை செய்துஇன் னுலகெலாம் பொங்கல்
தேனுயிர் தமிழருந் திருவரங் காத்து
தேசமெல் லாமொடும் அரசிடும் பொங்கல்
மானுயிர் வாழ்வெனும் மானமும் தண்ணார்
மணித்தமிழ் கொண்டுமே வாழ்த்திடும் பொங்கல்
ஈனமுஞ் சதியொடும் ஈட்டிகொண் டானாய்
எழியர்போய் வந்ததே பொங்கலோ பொங்கல்
நல்லறம் நற்கவி நற்தமிழ்த் தாய்தம்
நாடெலாம் பரவிய மைந்தரின் பொங்கல்
சொல்லறங் கலையெனச் சீரொடும் பண்பும்
சிறந்திடப் பரதமும் செய்யுளும் யாப்பும்
மெல்லியர் வாலிபர் எல்லருஞ் சேர்ந்து
மூட்டிய செந்தமிழ் மரபொடும் பொங்கல்
கல்லணை போல்வருங் காப்பியம் ஆக்கக்
கனிந்தது மண்ணெலாம் பொங்கலோ பொங்கல்!
பொங்கலோ பொங்கலாம் பூத்தது வையம்
பூக்களாய்க் கவியிடப் பொழிந்தது பொங்கல்
நங்கையர் மானிடர் நயந்தகா வியத்துள்
நானிலம் வந்தது நல்மர பென்கப்
பொங்கிடும் தமிழ்தரும் பூப்பொடுந் தேனார்
பொழிகிற தாமடி பொன்னரும் வையம்
தங்கிடும் மரபெனத் தாங்கிய உலகம்
தந்தது வணங்குவோம் தண்தமிழ்ப் பொங்கல்.
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.