வாழியவே கனடியராம் மலாலா பெண்ணாள்
வாழியவே ஐக்கியநா டுவந்த நோபல்
வாருலகில் உரிமையொடும் மகளிர் வாழ்;வு
வாழியவே வையமெனும் சமத்து வத்தாய்
யூசுப்சாய் மலாலாவென் றெழுதும் காந்தள்
வாழியவே கனடாவென் றுவந்த போதில்
மணித்தீபம் மனிதமுமாய் மலர்ந்த(து) அம்மா!
கனடியநாட் டுரிமையினை இன்று பெற்றேன்
பெருங்கனடா வரலாறு பேசும் ஆறாம்
மனிதரென என்சிறப்பு யானும் பெற்றேன்
மகிழுலகம் சமதானம் வழங்கு மென்பேன்!
புனிதமென என்பயணம் பிறக்கும் வையம்
பேசுமொரு கனடியத்தாய் பெற்றுத் தந்தாள்
நனிவிழாவாஞ் சபையிதனில் நிறைந்தோர் மாட்டே
நன்றியுடன் நிற்கின்றேன் மனிதம் வாழ்க!
மலாலாஉன் மனிதநேய மாண்பில் மக்கள்
மனுவாழ்வு அனைவருக்கும் இருக்கு தென்பேன்
அலாதியென உத்வேகம் அடைந்தார் இந்த
அவனியெலாம் உன்பணிக்குப் பணிந்தார் அம்மா
நிலாவெனுஞ் சமத்துவமும் நிகழும் பூமி
நிறங்கல்வி மதங்கோடல் அனைத்தி னோடும்
துலாவெனும் நீதிதரும் கனடா மாண்பின்
நிகழ்விதென்று பிரதமராம் ரூடோ சொன்னார்!
தைரியமாய்ப் பயமிலாத ஆண்மை யோடுஞ்
சண்பகப்பூங் குரலெடுத்துச் சரிதம் செய்த
வைரியத்தில் நன்;றிசொன்னோம் வரலா றென்னும்
மாண்பினையாம் உரிமையொடும் வரவேற் கின்றோம்!
கைவரித்து மைக்கேல்சோங் கனன்ற சேதி
கனடியத்தாய் எதிர்ச்சபையின் கூற்றே யாகும்!
மைவரிக்குஞ் சரிதமொடும் மலாலா போற்றும்
மணிக்கனடா வரலாறு வாழும் வாழும்!
* தேசபாரதி தீவகம் வே. இராசலிங்கம் | இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.