மூங்கில் கூடைகளின் மீன்கள்
கூவி விற்கும் சிறுவனின் குரலில்
இறந்தகாலத்தைப் பாடித் திமிறும்
மீனவத் தெருவின் வாடையை
விருப்பத்தோடு நுகரும் காற்று
பனங்குருத்து வலைத் தொப்பிகளைக் காவும் காலை நேரம்
சூளைத் தொழிலாளியின் செங்கற்களைச் சுமந்த
கைவண்டியில் அவ்வப்போது
அம் மீன்கள் பயணிக்கும்
தொலைவுக்குச் செல்லும் பாதையில் நகர்ந்த
அந்தி மழைக்குத்தான் எவ்வளவு தயாளம்
தகித்த கோடைக்குப் பின்னரான
இக் குளிரும் ஈரமும்
மழை தந்தது
நேற்றைய வானவில்
குளிக்க இறங்கிய நதியல்ல இது
எங்கும் பாய்கிறது நுரை வெள்ளம்
சூரியன் மறையவிழைந்த
ஆகாயமஞ்சளைத் தேய்த்துக் குளித்தபடி
துளிகளோடு துள்ளத் துடிக்க விழுகின்றன
யாரும் தீண்டாது வியப்போடு நோக்கும்
பிறப்பின் இரகசியமறியா
மழை மீன்கள்
ஆழ்கடலினுள்ளும்
வற்றாநதியினுள்ளும் நீந்தித் தேய்ந்த
ஆதி மீன்களின் வழித் தடங்கள்
ஆகாயத்துக்கும் பூமிக்குமாக
மேலிருந்து கீழாக மாறிய
அதிசயமாய்த் திகழ்கிறது
மழை மீன்களின் நவீன வரலாறு
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.