1. புதிய ஆண்டினை....(2017)
பண்டிகை நாட்கள் அனைவருக்கும்
இண்டிடுக்கு சந்துகளிலும் இன்பம்
கொண்டிருத்தல் ஆறுதல் ஆரோக்கியம்.
உண்டி உடையுடன் மகிழ்வும்
ஒண்டியற்ற உல்லாச அனுபமும்
கண்டிடல் தென்றலெனும் கொடுப்பனவு.
வண்டினமாய் ரீங்காரித்து நந்தவனத்தில்
சண்டித்தனமின்றித் தேனருந்தி மயங்கி
மண்டியிடாது நிமர்ந்து முரண்களை
முண்டியடித்துத் தள்ளி வெற்றித்
தண்டிகையில் வாழ்வு பயணித்து
துண்டில் தோப்பாக இசைக்கட்டும்.
நொண்டிச் சாக்கு போக்கின்றி
வண்டில் வண்டிலாகப் பரிசின்றியும்
வெண்டிரை (கடல்) அலையான மகிழ்வுடன்
பண்டிகை களை கட்டியது.
அண்டியோருடனும் மகிழ்ந்து கூடி
கண்டிருப்போம் புதிய ஆண்டினை.
* துண்டில் - மூங்கில்
2. முகிலின் துளி
உணவு பெறத் தாயிடம்
அலகு திறந்து அண்ணாத்தலாக
உயிர்த் துளியாம் முகிலின்
துளிக்கு ஏங்கும் உலகம.;
பிரபஞ்சம் நனைக்கும் அமுதம்.
சீவராசிகளை உயர்பிக்கத் தஞ்சம்
தரும் முகிலின் துளிகள் மண்
நனைத்தீயும் மகிழ்வை மழலைக்கும்.
வயல் நனைத்தீயும் தனம்.
மழை மையல் முகில்கள்
வாளும் வேலும் உரசலின்
கடுமையாய் மூளும் மின்னற்
தெறிப்பில் முகில் இடித்து
மத்தளம் கொட்டக் கோன்
வரக் குடியொதுங்குதலாய் வரும்
வான் கொடையது முகிற்துளி.
வெள்ளிக் குடைக் கம்பியாய்
அள்ள முடியா முகில் துளி.
எத்தனை நாட் தூசியையும்
மொத்தமாய்க் கழுவி விடும்.
மனிதக் கண்ணீராவியோ முகில் துளி!
முகில் அண்டாவால் ஒழுகுதோ!
விரிவான் மணற் சல்லடையால்
பூமியில் சொரிகிறதோ துளிகள்!
3. தூரத்துப் பச்சை
கிட்டாத ஆசையும் கையால்
எட்டவியலாததும் தூரத்துப் பச்சையே
நேரத்தின் முயற்சி பலனாகில்
தூரத்துப் பச்சை என்பதில்லை.
அக்கரைப் பச்சை என்பது
இக்கரைக்கு அழகு உண்மை.
அளவான ஆசை உத்தமம்
அருமையாய் நெருங்கும் ஆனந்தம்.
அழகு தம்பதிகள் பார்வைக்கு!
ஆழப் புகுந்து பேசினால்
அழுகையே மிகும் சிக்கல்கள்
இக்கரை பச்சையே தூரத்தில்.
வெளிநாட்டு வாழ்வும் ஒரு
களியாட்ட தூரத்துப் பச்சை.
கண்ணால் காண்பது பொய்யென்று
உள்நாட்டை முன்னேற்றி வாழ்!
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.