-
புகழ்பெற்ற சிங்களப் பாடகரும் இசைக்கலைஞருமான பண்டிதர் டபிள்யூ.டி. அமரதேவா அண்மையில் காலமானார். அவரது நினைவாக தேசபாரதியின் இக்கவிதை பிரசுரமாகின்றது. -
அமரதேவ!
ஒரு கவிஞன் காவியம் படைத்தான்!
சூரியக் கதிர்களால்
எழுதப்பெற்றது இந்தத்
தூரனின் பயணம்!
அவன்தான்...!
வன்னகுவத்த வடுகே
டொன் அல்பேர்ட் பெரேரா!
அமரதேவா என்று
அழகான பெயரில் தன்னை
அலங்கரித்தானோ என்னவோ?
இமயத்தைத் தொட்டது இவன்
கவியுங் கானமும்...!
இந்துஸ்தானி இசைக்காக
இவனைத்தேடி வந்தது
இந்தியப் பத்மசிறீ விருது!
எண்பத்தாறில் இந்திய இமயம்
இந்த விருதை வழங்கியபோது
விண்ணேறிப் பறந்தது இவன்
வித்துவம்...!
பிலிப்பைன் மெக்சைசே விருது
இரண்டாயிரத்து ஒன்றின்
கரங்களில் மிதந்தது...!
மாலைதீவு நாட்டின் தேசிய கீதமும்
இவனது வண்ணத்தில்
வார்த்தெடுக்கப்பட்டது!
தேசிய துக்கதினம் என்று
இலங்கைத்தேசம் துயர் பகிர்கிறது!
தேசியக்கொடி அரைக்கம்பத்திற்கு
இறக்கப்பட்டு அரசாங்கம்
யாசகம் அரங்கேற்றுகிறது...!
யான் முதற் கூறியபடி
சூரியக் கதிர்களால்
எழுதப்பெற்றது இந்தத்
தூரனின் பயணம்!
முதன்முதலாக...
இலங்கையின் ஒரு சனபதியால்
சிவிகை சுமக்கப்பட இந்தக்
கவிஞனின் பயணம்
அவிசொரிந்த அனலில் மறைந்தது!
சனாதிபதி மைத்திரி சிறிசேனா
சரித்திரத்தில்...
சிவிகை சுமந்த சிறிசேனா
ஆகிவிட்டிருக்கிறார்!
அமரதேவவுக்கு மட்டுமல்ல
சாமான்யனாக... ஒரு
சனாதிபதியாக
மைத்திரி சிறிசேனவுக்கும் ஒரு
வரலாறு ஈதென்பேன்...!
அமரதேவ அமரத்துவம்
சாந்தியடைவதாக!
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.