1. தாந்தேவின் நரகத்தில் நான்
அப்போது வலியின் ஒளியொலிக்கீற்றுகள் நிறப்பிரிகை கண்டு
வானவில்லாகக் கதறல்களை அம்பாகத் தொடுத்து கொண்டிருந்தது எனக்குள்
தாந்தேவின் நரகத்திற்குள் பிணங்களை அரைத்து பொடியாக்கி
காலைக் காபியில் கலந்து அருந்துபவனை நான் சந்தித்தேன்
ரகசியங்களை கேட்கப் பல ஜோடிக் காதுகள்
ஊசியில் கோர்க்கப்பட்டு அவன் அலமாரியில் இருந்தன
நீயொரு பெண்ணாய் இருந்தாய்
நான் உன் ரகசியங்களை என்னுள்
ரகசியப்படுத்தி கொண்டிருந்தேன்
என் மூளையின் சதைமடிப்புகளுக்குள்
என்றொரு உரையாடல் கேட்கிறது நீ தானா அது என்கிறான்
என் முகத்தை கழற்றி எறிகையில்
தற்கொலையின் வாசனையைப் பின்பற்றி
என்னை உண்ணக் காத்திருந்தவர்கள் வந்திருந்தார்கள்
ஒப்பந்தத்திற்க்ச் சம்மதிக்கிறேன் என மொழிந்தேன்
என் தலையை அவர்களும் என் உடலை அவனும் உண்ணும்போது
தற்கொலையின் சீழ் காற்றில் பரவி காலத்தின் யோனிக்குள்
விந்தென கறுப்பு ரத்தம் பாய்கிறது
கூடவே எனக்காக சிரிக்கிறது
என் சொல்லும் என் முள்ளும் கடைசியாக
என் குடல்களை என் எலும்பால் உருவாக்கிய யாழில் நாணென போட்டு
என் நுரையீரல் அதிர இசைப்பார்கள்
என் பிறப்புறுப்புகளை புல்லாங்குழலென உருவாக்கி இசைப்பார்கள்
என் தோலை மிருதங்கத்தில் பொருத்தி இசைப்பார்கள்
என் மூளையின் சதைமடிப்புகளை விரித்து அதன்மேல் சயனம் கொள்வார்கள்
என்றெல்லாம் நினைத்து மகிழ்வுடன் உருவாகிறேன்
இல்லாமல் இருப்பவனாய்
அப்போது மரணத்தின் வானவில் தலைகீழாக மாறியிருந்தது என்னைத் தொடுத்தபடி
(நரகங்களின் வரைபடங்களை வைத்திருக்கும் தாந்தேவுக்கு )
2. மொழிபெயர்ப்புக் கவிதை: தீர்க்கதரிசியின் உணவு -
- மூலம்: குந்தர் கிராஸ்: தமிழில்: வே.நி/சூர்யா -
வெட்டுக்கிளிகள் நமது நகரத்தை ஆக்கிரமித்திருந்த போது
மேலும் அருந்த கூடுதல் பால் நமது வீட்டுக்கு வந்து சேரவில்லை ,
செய்திதாள்கள் மூச்சு திணறி போயின
சிறைக்கதவுகள் திறக்கப்பட்டன, தீர்க்கதரிசிகள் சுதந்திரமாக்கப்பட்டனர்
தற்போது 3,800 தீர்க்கதரிசிகள் தெருக்களின் ஊடே ஊர்வலம் போகின்றனர்
அவர்களால் இழப்பின் பயமின்மையுடன் பேச முடியும்
மேலும் தங்களை துள்ளிக்குதிக்கக் கூடியதும்
சாம்பல் நிற உறையை உடையதுமான
நம்மால் ப்ளேக் என அழைக்கப்படுவதால் நிறைத்துக் கொள்கின்றனர்
யாரால் வேறெந்த பயனை இனி எதிர்பார்க்க முடியும்
விரைவில் மேலும் அருந்த பால் நமக்கு கிடைத்துவிடும்,
செய்திதாள்கள் மூச்சு விட தொடங்கிவிடும்
தீர்க்கதரிசிகள் சிறையில் அடைக்கப்படுவர்
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.