[பதிவுகள் இதழில் ஏற்கனவே வெளிவந்த படைப்புகள் அவ்வப்போது ஒருங்குறி எழுத்துருவில் மீள் பிரசுரம் செய்யப்படுகின்றன. அந்த வகையில் பதிவுகளின் ஆரம்பகால இதழ்களில் வெளிவந்த கவிதைகளை இம்முறை மீள்பிரசுரம் செய்கின்றோம். பதிவுகள் தனது கடந்த காலத்தில் தமிழ் இலக்கியத்திற்கு, குறிப்பாகக் கணித்தமிழ் இலக்கிய உலகிற்கு ஆற்றிய வளமான பங்களிப்பினை இவ்வித மீள்பிரசுரங்கள் புலப்படுத்துவதால், அன்றைய கணித்தமிழின் ஆரம்ப காலத்தில் உலகின் பல்வேறு பாகங்களிலிருந்தும் தமிழ்ப் படைப்பாளிகள் எவ்வளவு ஆர்வத்துடன் பதிவுகள் இதழுடனிணைந்து தங்கள் பங்களிப்பினை நல்கினார்களென்பதையும் இவ்வகையான மீள்பிரசுரங்கள் புலப்படுத்துவதால் இவை முக்கியத்துவம் பெறுகின்றன; இவற்றை மீள் பதிவு செய்ய வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்துகின்றன. இன்று கணினிகளில் ஒருங்குறி எழுத்துருவில் மிகவும் இலகுவாகத் தமிழ் ஆக்கங்களை வாசிக்க முடிகிறது. ஆனால், அன்றைய காலகட்டத்து நிலை வேறு. இணைய இதழ்கள் பாவிக்கும் எழுத்துருவை அவற்றை வாசிக்கும் ஒவ்வொருவரும் தத்தமது கணினிகளில் நிறுவிக்கொள்ள வேண்டும். இத்தகைய தடைகளையெல்லாம் மீறி வாசகர்களும், படைப்பாளிகளும் ஒருங்கிணைந்து படித்தல் (வாசித்தல்) , படைத்தல் (எழுதுதல்) ஆகியவற்றை ஆற்றுவது கணித்தமிழ் உலகிற்கு மிகவும் முக்கியம். அந்த வகையில் 'பதிவுகள்' கணித் தமிழ் இலக்கிய உலகிற்குத் தன் பங்களிப்பினை நல்ல முறையில் ஆற்றியிருக்கிறது; ஆற்றிவருகிறது. அதனையிட்டு நாம் பெருமையுறுகின்றோம். - பதிவுகள் ]
பிப்ரவரி 15 : யுத்த எதிர்ப்பு நாள் அமெரிக்காவைக் கடவுள் காப்பாற்றட்டும்
- ஹெரால்ட் பின்ட்டர் - தமிழில்: யமுனா ராஜேந்திரன்
பாருங்கள் மறுபடி அவர்கள் புறப்பட்டுவிட்டார்கள்
ஆயுதப் படையணிகள் கொண்டு
தமது எக்காளம் நிறைந்த களியாட்டங்களுடன்
யாங்கிகள் புறப்பட்டுவிட்டார்கள்
பரந்த உலகத்தினை ஊடறுத்துக் கொண்டு
அமெரிக்கக் கடவுளைத் துதித்தபடி
மறுபடி அவர்கள் புறப்பட்டுவிட்டார்கள்
சடலங்கள் இனி சாக்கடைகளை அடைத்துக் கிடக்கும்.
அவர்கள்
இவர்களோடு சேர்ந்து கொள்ள முடியாதவர்கள்
இவர்களோடு ஒத்துப்பாட மறுத்தவர்கள்
தமது குரலை இழந்து கொண்டிருப்பவர்கள்
தமது பாடலின் லயத்தை மறந்து போனவர்கள் அவர்கள்
வெட்டும் சிறகுகளோடு சவாரிக்காரர்கள் புறப்பட்டுவிட்டார்கள்
உங்கள் தலைகள் இனி மணலில் உருளும்
உமது கபாலங்கள் ரத்தத் தடாகத்தில் மிதக்கும்
மணல் புழுதியில் உமது வெட்டுண்ட தலை
ஒரு சொட்டுக் கறை போல் தோன்றும்
உமது விழிகள் கண்குழியினின்றும் பிதுங்கிக் கிடக்கும்
சவங்களின் மணத்தை உமது நாசிகள் நுகரும்
அமெரிக்கக் கடவுளின் நறுமணத்துடன்
மரணித்த காற்று மட்டும் உயிர்த் திருக்கும்.
குறிப்புகள் :
ஹெரால்ட் பின்ட்டர் இங்கிலாந்தில் வாழும் உலகப் புகழ்பெற்ற நாடகாசிரியர். கவிஞர். அரசியல் நடவடிக்கையாளர். இவரது நாடகங்கள் அனைத்துமே அரசியல் வன்முறை குறித்ததும் சகலவிதமான அதிகாரங்களுக்கும். எதிரானதும் என்று அவர் குறிப்பிடுகிறார். அவரது இரண்டு நாடகங்களான போகிற வழிக்கு ஒன்று மற்றும் மலை மககள் என்பன குர்திஸ் இன மக்கள் மீதான ஒடுக்குமுறையைச் சித்திரித்த அதற்கு எதிரான பிரக்ஞையை பார்வையாளரிடம் கோரும் படைப்புக்களாகும். இவர் சில மாதங்களின் முன் ரத்தப்புற்று நோயிலிருந்து மீண்ட பின்பு எமுதிய. மூன்று கவிதைளில் ஒன்றே இங்கு மொழியாக்கம் பெறுகிறது. பிற இரண்டு கவிதைகளளும் வெல்லப்பட முடியாத புற்று நோய்க் கிருமிகளுக்கெதிரான அவரது வாழ்வுக்கான போராட்டம் பற்றிய சுய அனுபவங்கள் குறித்த கவிதைகளாகும்.
நன்றி : தி கார்டியன், லண்டன் 22 ஐனவரி 2003
பதிவுகள் பெப்ருவரி 2003; இதழ் 38.
திலகபாமா கவிதைகள்!
1. நிலவுப் பயணம்!
நட்சத்திரங்களுக்கிடையேயும்
வானத்து நீலக்கருமையோடும்
வெளியெங்கும் நிரப்பிக் கிடந்த
காற்றினோடும்
இரவுப் பறவைகளின்
பசிக் கூக்குரலோடும்
கூடி உயிர்த்துக் கிடந்த அத்தனை
உயிர்களோடும் தான்
என் நிலவுப் பயணம்
என்றும் தன்னந்தனிமையில்
பலநேரம் சுகந்தமாக
சில நேரம் கசப்பாக
எனக்கு ஒளி தந்து போவதாய் சில
சூரியன்கள்
என் ஒளி தின்று விடத் துடிக்கும்
பூமிகள்
யாரும் தீர்மானித்து, புரிந்து
தீர்த்து விட முடியாது போகும்
என் தனிமை வாழ்வு
உன்னிடமில்லா என் வார்த்தைகளுக்கு
அகராதியில் மூழ்கி வந்தும்
முத்தை எடுத்து தொலைத்து விட்ட மூச்சாய்
அர்த்தங்கள் அர்த்தங்களாகிப்
போகப் போவதில்லை உனக்கு
கட்டிய கண்களுக்கிடையில்
தூண்களாக
நீ தீர்மானித்திருந்த என் கால்கள்
நகர்ந்து மிதிக்காத வரை
கண்களின் கட்டவிழ்க்கப் போவதில்லை நீ!
- பதிவுகள் ஆகஸ்ட் 2004; இதழ் 56.
2. அம்பின் கூர் சுமக்கும் வாசம்
நினைத்ததை சொல்ல முடியாமல்
போவதற்கு
சொல்வதை நம்பாது
எனன முட்டாளாய்
முன்னிறுத்தும் உன் பலவீனங்களும்
காரணமென அறிவாயா?
நான் மல்லிகையாய்
வாசம் வீசியிருக்க
அடைபட்ட குப்பியின் மேல்
எழுதப் பட்ட
“மல்லிகை வாசம்”
அச்செழுத்தை நுகராது
நம்பித் தொலைக்கிறாய்
எப்போவாவது வாசனையை
உணரப் புகும் அந்த வேளையில்
அம்புப் படுக்கையில்
சாகத் துணிகிறாய்
வரம்
அம்புப் படுக்கையில்
ரணமோடு வாழ்வதல்ல
சிகண்டியின் அம்பின் கூர்
பீஷ்மனையும் சாய்க்கும் என
நம்ப ஆரம்பிப்பதிலும் தான்
உங்களின்
பிரமச்சர்ய விரதங்கள்
முழுமை பெறும்
- பதிவுகள் ஜூலை 2004; இதழ் 55
3. மீள் பதிதல்!
வலியின் நினைவுகளில்
நனைந்து நமத்து போன பதிவுகள்
முன்னகர்த்தி போட்டு போட்டு
தொலைத்து விட்டன வேகத்தை
மெல்ல இழுக்கும் குரல்களால்
உணரவைக்க முடியாது போகலாம்
உடைத்து வெளிக்கிளம்பிய உணர்வுதனை
உள்ளங்கை ரேகைகளாய்
உணர்வுகள்
வாசிக்க முடிந்த போதும்
விடைகள்
நிகழ்தகவின் தீர்மானிப்பில்
நீ தீர்மானித்திருக்கும்
எதுவும் நிச்சயமில்லையென
உணரும் தருணத்தில்
தானே நிகழும்
மீள் பதிதல்கள்
என்னிடமிருந்து
உன்னிடம்
- பதிவுகள் அக்டோபர் 2004; இதழ் 58.
4. நான் நானல்ல
அன்பின் பேரால்
உடமையும் உரிமையும்
கோரும் முன்
அதே அன்பின் பேரால்
நீ தந்து போனது எவை
எட்டாத பழங்களை
புளிக்கும் என்று மட்டுமல்ல
என் உலகிலிருந்தே
தள்ளி வைக்கின்றேன்
எனக்கு உன்னால்
அளிக்கப் படுகின்ற
முத்தங்களும், அப்பங்களும்
பசியாறுதலுக்காக அல்ல
காட்டிக் கொடுக்க வென்று
உணர்ந்திருக்கின்றேன்
நீ காட்டித் தந்த
நான் நானல்ல
என்றுணர்கையில்
உயிர்த்தெழ முடியா
சிலுவையில் நீ இருப்பாய்
தன்னந் தனிய
- பதிவுகள் பெப்ருவரி 2005; இதழ் 61
பா.தேவேந்திர பூபதி கவிதைகள்!
1. மழைத்துளியின் பயணம்
கீழே விழுவது தான்
உன்னதமென்றார்கள்
வானிலிருந்து உதிரும்
மழையைக் காட்டி
உயரச் செல்வதுதான்
மேன்மையென
வளர்ந்து செல்லும் மரத்தின்
உச்சியை காட்டி
வளரச் சொன்னார்கள்
அன்றைக்குண்டான மழை நாளில்
சீறிப் பறந்து கீழே விழுந்து சிதறின
பல துளிகள்
அறுந்து விழும் வார்த்தைகளாய்
எஞ்சி நின்ற சில
மரத்தின் உச்சி கிளையில்
இளைப்பாறின
முடிதல்களை அறிவித்த படி
எதற்குமிங்கே கேள்விகளில்லை
புறம் பேசும்
மண் புழுக்களாய்
நாவுகள்
உள்ளும் புறமும்
ஊர்ந்து கொண்டே இருக்கின்றன
- பதிவுகள் ஆகஸ்ட் 2004; இதழ் 56.
2. கரும்பனையும், ஆலமரமும்!
போதி சத்துவரின் வெளியில்
வீசி எறியப் பட்டு
மறைக்கப் பட்டு வைத்ததை
உண்டு பசியாறிணார்கள் இருவரும்
பிரவாகத்தின் ஆட்கொள்ளலில்
மறு பிறப்பின் நினைப்பின்றியே
மூழ்கிப் போனார்கள்
எழுச்சியும் வீழ்ச்சியும்
சந்தித்த புலத்தில்
உண்டானது அது
கூடவே அமிர்த கலசமும்
பீறிட்டு வந்ததாயும் கேள்வி
அழகியலும் துன்பமும்
கூடவே வந்தன
அவற்றிற்குத் துணையாய்
வளர்ந்த வேளையில் காற்றை கூட
விட்டு வைக்கவில்லை அது
முட்டைக்கள் பெரிதாகி
பிரபஞ்சம் மறைக்கையில்
ஒருவரை ஒருவர்
பார்க்கக் கூடவழியின்றி
பிரிந்து போயினர்
ஒருவர் கரும் பணையாயும்
மற்றொன்று ஆலமரமாயும்
- பதிவுகள் அக்டோபர் 2004; இதழ் 58.
ரவி(சுவிஸ்) கவிதைகள்!
1. அழிவு எழுதும் மொழி!
உயிருருவி உலங்குவானு¡ர்தியின்
இரைச்சலில் வீதிகள்
அதிரவும் உடல்களை கையிலேந்தி
பதறியோடவும்
சபிக்கப்பட்ட தேசமாய்ப் போனது
பலஸ்தீனம்.
உலகத் தலைவர்கள் எல்லாம் ஆங்காங்கே
மடிப்புக்கலையா உடைகளுடன்
ஆறஅமர
ஐனநாயகம் பற்றியும் மனிதநேயம் பற்றியும்
பேசிக்கொண்டிருக்க
மக்கள் மடிந்துகொண்டேயிருந்தனர்.
அடிக்கடி கிற்லரை ஏற்றிவந்து
பலஸ்தீன வீதியில்
கணக்கினை சமப்படுத்திச் செல்கிறார்
ஏரியல் சரோன்.
உலகின் காவலர்களே!
பிணங்கள்விழாத ஒரு நாளை
ஒரு பலஸ்தீனக் குழந்தைக்காய்
வரைந்துகாட்டுவதில்
தோல்வியுற்றுக் கொண்டிருக்கிறது
உங்கள் ஐனநாயகம்.
கிளாசில் ஊற்றிய பின்னரங்க மதுவுக்காய்
முன்னரங்கில் தண்ணீர்ப் போத்தல்களை
மெல்லமெல்ல காலியாக்கி, பின்
முடிவடைந்துபோகிறது ஒவ்வொரு முறையும்
ஐனநாயக இரைச்சல்தாங்கிக் கூட்டங்கள்.
ஆனாலும் மிண்டும் மீண்டும்
பேசிக்கொண்டேயிருங்கள்!
இயலாமையின் கடைசியாய்
பொறுமையின் எல்லைப் பிரதேசத்தில்
உலகின் காவலர்களே, நீங்கள்
ஊன்றிவளர்ப்பதுதான் எதனை?
- பதிவுகள் ஆகஸ்ட் 2004; இதழ் 56
2. அலைப் போர்!
இன்னுமென்னால் கற்பனை பண்ண முடியவில்லை
நாளுக்கு நாள் பெருகும் செய்திகளினு¡டு
நான்
பயணித்துக் கொண்டுதானிருக்கிறேன்.
முடியவில்லை, இந்தக் காட்சியை
கற்பனையுள் வார்த்துக் கொள்ள.
அலைகள் இராட்சதித்து
மண்ணில் புகுந்து
நிகழ்த்தியாயிற்று ஒரு அலைப் போர்.
பூமியின் மீதான ஒரு பிரளயத்தின் முன்மாதி¡¢யாய்
எல்லாம் நடந்து முடிந்தது.
இந்தத் துயர்த் திரட்சியைத் தாங்கிக் கொள்ள
மனிதர்களால் முடியுமெனின்,
இவையெல்லாம்
அசாதாரணமாகவே தோன்றுகிறது எனக்கு.
ஒவ்வொரு சோகத்தின்போதும்
கடற்கரை மணலில் கால்பதித்து ஆறுமென் மனம்
இப்போ
இந்தக் கடற்துயரை ஆற்ற எங்கு செல்வது.
நடமாடித்திர்¢ந்த உடல்களை உயிர்நீக்கி
உடலங்களாக பரத்திச் சென்றது
நீர்வெறிப் பிரளயம்.
தனித்து விடப்பட்ட ஒற்றைத் தென்னைகளில் அதன்
கீற்றுகளின் ஒலி துயா¢சை எழுப்ப,
மீளமுடியாமல்
சா¢ந்துபோனது கடற்கரையின் வாழ்வு.
எதுவும் நடவாததுபோல் அலைகளெல்லாம்
இயங்கத் தொடங்கியுமாயிற்று.
மரணத்தின் அச்சம் கலந்த தொனி
இதயத்தின் ஒவ்வொரு மூலையையும்
நிரப்பி நிரப்பித் தழும்புகிறது.
மீளமுடியாமல் அவதியுறம் மக்களைப் பார்த்து
எதிர்காலம் கையசைத்து,
விலகிச் செல்கிறது.
இந்த சுனாமிக் கொடுமையை அலைகள் இசைத்து
வாழ்வுக்கு சவால்விட்டுச்
சென்றிருக்கிறது.
இதயத்துள் இறக்கப்பட்டிருக்கும் இந்த
அதிர்ச்சியை நாம்
பிடுங்கி எறியவும்
காயமாற்றவும்
இயங்கவும் பற்றிக்கொள்ள எதுவுமின்றி
அசைகிறது வாழ்வின் நுனி.
ஆயினும் நாம்
நம்பிக்கை கொண்டே ஆகவேண்டும்.
ஒரு சோகப் பிரளயத்தை உள்வாங்கிய இதயங்களே
துயர் கரையும்வரை அழுக
கதறி இழுக
கண்ணீ¡விட்டு அழுக...
மனித அவலத்தின் உச்சியின்மேல் நின்று
ஒலிக்கும் உங்கள் கதறல்களில்
மனிதம் விழிப்புறட்டும்.
தேசம் இனம் மதம் கடந்து
இணைந்தது இத் துயா¢ல் உலகம் எமது
எதிர்பார்ப்பையும் மீறி என்ற செய்தியைப்
பற்றிக் கொள்ளுங்கள்
அழிவுகள் அடர்ந்த காடுகளினு¡டு
அதன் திசையற்ற வியாபகத்தினு¡டும்கூட
வாழ்வின்மீதான நம்பிக்கைகளை அடைவது
ஒன்றும் சாத்தியமற்றதல்ல.
- பதிவுகள் ஜனவரி 2005; இதழ் 61.
3. தெருவிழா!
எங்கள் வீதியில் இடையிடையே
தெருவிழா களைகட்டும்
அதில்
குரங்குகள் சில வீதியில்
வலம் வருவது வழமையாகிற்று
மலர்களை கசக்கி உதிர்த்து
விசிறி நடந்தன ஒய்யாரமாய்.
மலர்களை, மலர்மாலைகளை எறிந்து
களித்தின்புற்றனர்
மனிதர்கள் சிலர்.
குது¡கலம் என்றுமாய்
சி¡¢ப்பு கோபம் கத்தல் நளினம்... என
தெருவெல்லாம் தனதினதாய்
பெருமைகொண்டாடின.
காற்று வீசிய திசையில்
இலகுவாய் மனிதர்கள்
மூளைமடிப்புகளை பறக்கவிட்டனர்.
இந்தத் திசையில் நகர்வது இலகு.
வீதிக் குரங்குகளும்
அள்ளுண்டு போகிறது இத் திசையில்.
ஆசி¡¢யனின் பிரம்பு நுனியில்
தொங்குகிறான் மாணவன்.
ஆத்திரப்பட்ட கணவனின் பிடியில்
அழுகிறாள் மனைவி
கோவில் கதவு சாத்தப்பட்டே இருக்கிறது
இன்னொருவனுக்கு.
எல்லாம் மீறி
பெருங்காற்றை போரும் போரோசையும்
வியாபித்தது
அனுபவங்கள் எல்லாம் சேகரமாகி
புதுப்புது முளைப்புக்கான விளைநிலமாயிற்று
எம் முளைமடிப்புகள்.
ஆனாலும் என்ன
அரைத்தரைத்தே நான்கு வார்த்தைகளுடன்
எடுக்கும் வாந்தியில்
நாறுகிறது
சந்தியில் குடித்த கள்.
கத்தல் கூச்சல் சொறிவு...
இப்படியே
தெருவிழாவில் குரங்குகள் செல்ல
மாலைகள் எறிந்திடுவோரும்
சேர்ந்து நடந்தனர்.
வசதிப்பட்ட இடங்களில்
கோவணத்தை இறுக்கி
வீரம் புரிந்தனர்
மனிதர்கள் இன்னும்
கண்டுகொள்ளா து¡ரமதில்
அவை நடந்து மறைக,
பகுத்தாயும் அறிவு
வெளிச்சம் கொள்ள!
- பதிவுகள் ஜனவரி 2004; இதழ் 49
இளங்கோவின் கவிதைகள்!
1. உயர்பாதுகாப்பு வலயம்
ஆமியின் கண்களுக்கு
மண்ணை தூவிவிட்டு
வயல்வெளிக்குள்ளால்
நுழைந்து
ஏறியாயிற்று
என் ஊரிற்குள்
எல்லாப் பாதைகளும்
மூடப்பட்டு
அடர்ந்த வனங்களாகிவிட்டன
வீடுகள்
புதைந்திருக்கும்
கண்ணிவெடிகள் வெடிக்காதிருக்க
பயத்தைக் காணிக்கையாக்கி
எல்லையோரத்து
பூவரசிலேறி
மிதக்கவிடுகிறேன் விழிகளை
தொலைவில்
கூரையற்ற வைரவர்கோயிலும்
கிளைகளிழந்த புளியமரமும்
துலங்குகின்றன தடயங்களாய்
பிறகு
ஒருகல் கீழேயெடுத்து
எறிகிறேன்
காலத்துயரை
விழிநீரில் குழைத்து
தசாப்தம் தாண்டியும்
ஏதிலியாய் அலையும்
ஊரினோர் மைந்தன்
இன்று வந்தானென
என் வீட்டுமுற்றத்திற்கு
தெரிவிக்க.
2. ஊருக்கு திரும்புதல்
ஞாபகங்கள்
மழைகாணாத் தெருவில்
சுழன்றாடும்
புழுதிபோல் எழுகின்றன
மீசையும் பருக்களும்
அரும்பும் வயசில்
நேசிக்கும் ஆசை
துளிர்த்தல் இயல்பு
ஓர் குச்சொழுங்கையில்
சைக்கிளை
குறுக்காய் நிறுத்தி
வியர்வைத் துளிகளுடன்
யாசிக்கிறேன் காதலை
ஒருகணம்
விழிகளில் வியப்பினை
நிரப்பி
விலகிப்போகிறாய் நீ
அந்நியமாகிப் போகிறேன் நான்
போரின்
கால்பந்தாட்டத்தில்
நீ உள்நாட்டுக்குள்ளும்
நான் சமுத்திரம் தாண்டியும்
சிதறிப்போகிறோம்
தற்செயலாய்
பெருநகரொன்றின் புத்தகசாலையில்
உஸ்ணம் கனலாய்
மிதந்த
மத்யானபொழுதில் சந்திக்கிறோம்
நமது சந்திப்புக்கள்
நிகழா
வருடங்களின் பெரும்பரப்பில்
வாழ்வினை ருசித்திடும்
குழந்தையின் ஆவலில்
அனுபவித்தாயிற்று
துணைதேடும் துயரங்களை
நீயும்
இவற்றையெல்லாம் கடந்து
தெளிந்துமிருக்கலாம்
நம் பால்யத்தின்
இசையை
நினைவுகளால் மீட்க
உருகுகிறது இடைவெளி
இன்றைய பொழுதில்
நமது உரையாடல்களைப் போலவே
இயல்பாய் வளர்கிறது
நமக்கான காதலும்.
பதிவுகள் அக்டோபர் 2004; இதழ் 58.
3. நீ என் வண்ணத்துப்பூச்சி!
நமக்கு
ஒருபோதும் தெரிவதில்லை;
நம்மைச்
சாதாரணமாய்க் கடந்துசெல்பவர்கள்
வாழ்வின்
மிகப்பெரும் தருணங்களை
கொண்டுவந்து சேர்க்க
மீள வருவார்களென்பது
நதியின் கரையில்
விரித்து வைத்திருந்த
புத்தகத்தின்
பக்கமொன்றில்
வந்தமர்ந்துபோன
வண்ணத்துப்பூச்சியின் நினைவுடன்
உன்னையும் முன்பு
பத்திரப்படுத்தியிருக்கக்கூடும்
ஆகவேதான்
இன்றைய உரையாடல்களிலும்
அவ்வவ்போதைய இடைவெளிகளிலும்
வண்ணத்துப்பூச்சியின் சிறகடிப்பையும்
வர்ணங்களையும்
நீயெனக்குள்
உதிர்த்தபடியிருக்கிறாய்
சாம்பர் பூசிய
மழைக்கால வானத்தில்
நமக்கான பொழுதின்
அகாலம்
பூத்துக்கிடப்பதாய்
மழைவருவதற்கு முன்பான
ஒவ்வொருபொழுதுகளிலும்
எச்சரிக்கிறாய்
அழகின்மையில் அழகையும்
அபத்தத்தில்
வாழ்வதற்கான நம்பிக்கையையும்
பிரித்துணரும் தன்மை
எல்லோருக்கும் வாய்ப்பதில்லை
உன்னைப்போல
நேசிப்பின்
முதல் இழையைப் பிரிக்கமுன்னரே
பிரிவு
தன்கொடூரநிழலுடன்
எங்கோர் மூலையில்
காத்திருக்கலாமென்று
வாழ்வின் கசப்பையும்
இயல்பென
நினைக்குமுன்னை
யாருக்குத்தான் பிடிக்காமற்போகும்?
- பதிவுகள் நவம்பர் 2004; இதழ் 59
4. தோழிக்கு எழுதியவை...
'...இந்த சூழலில், நட்பு என்பது இல்லாமலே போய்விடுகிறது. காயத்தின் போது எந்த உடைவுமின்றி நட்பு பேணுவதும், ஆறுதல் கூறுவதும், எவ்வளவு பலத்தை தரும். ஆதலால் நல்ல நண்பனுக்கான என் நீண்ட நாள் காத்திருப்பில் உங்களைப் போன்ற இளம் தலைமுறையினரைக் கண்டது மகிழ்வாய் இருக்கிறது....'
4.1.
எல்லா வாசல்களும் அடைபட்டு
துயரின் அறையினுள்
வெந்துகொண்டிருந்த
ஓர் பொழுதில்
மாலைத் தென்றலாய்
நுழைந்து
மழலையின் மிருதுவான
மொழிபேசினாய்
இன்று.....
கடந்துபோன காலத்தை
மெல்லிய புன்னகையால்
திறந்து பார்க்கையில்
மலைபோல்
குவிந்து கிடந்த துயரங்களல்ல
மழைபோல் நீ
கழுவிச்சென்ற தடயங்கள்தான்
வருகின்றன நினைவுக்கு.
"...மற்றும்படி எல்லா அம்மாக்களைப் போலவே தங்கள் பிள்ளைகளைப் பற்றிய கனவுகளுடனும் எதிர்பார்ப்புக்களுடனும் அவர் வாழ்வு. அன்பை மட்டுமே பிறரிடம் எதிர்பார்க்கக்கற்றுத்தந்த அம்மா, அது என்னைக் காயப்படுத்தியபோதும் அது எனக்குப் பிடித்திருக்கிறது..."
4.2.
பிரியமான
எவரின் சிக்கல்களையும்
உனது பிரச்சினையென நினைத்து
தீர்த்து வைக்க
முயல்பவள் நீ
பிறகு
ஏதோவொருபொழுதில்
ஆற்றுப்படுத்தப்பட்டவரே
குற்றச்சாட்டு வாசிப்பதுமுண்டு
உன்மீது
இந்த
உறவுகளின் முகமூடியினால்
நீ வெந்து
உடைந்துபோகும்போதெல்லாம்
நான் சொல்வதற்கு
ஒன்றுமில்லை
நீ
நீயாகவே இரு
என்பதைத்தவிர.
"...இங்கு மிக மோசமாக சாதி தலைவிரித்தாடுகிறது. அதிகமாய் தூக்கி பிடிக்கிறார்கள். திருமணங்களில் விசாரிக்கிறார்கள். நாங்கள் முன்னோக்கிப் போகாமல் பின்னோக்கிப் போகிறோம் போலத்தோன்றுகிறது..."
4.3.
ஏனிந்த மனிதர்கள்
அன்பைப் பகிரவும்
புன்னகையைத் தவழவிடவும்
இவ்வளவு தயங்கிறார்கள்?
எதையும் வந்துபேச
நம்நட்பிற்கு தந்திருக்கிறது
சுதந்திரம்
உன் வீடு
ம்...
களைப்பு களைந்து
தேநீர் அருந்தி
நான்
புத்துணர்ச்சி பெற
எப்போதுவரும்
இன்னொரு வெள்ளிக்கிழமை?
"...எனக்கு உங்களைக் கண்டது, கதைத்தது, கடிதம் எழுதுவது இவையெல்லாம் மகிழ்ச்சியான விடயங்கள். எனக்கு உங்களை தவிர வேறு யாருடனும் இப்படி நட்பு பேணமுடியும் என்று தோன்றவில்லை. உண்மையில் உங்களுடன் கதைப்பது என்னைப் புதிதாய் கண்டெடுப்பது போல் உள்ளது..."
4.4.
நாடோடியின்
பொழுதுகளென நகர்கிறது
வாழ்வு
காற்றில் அலைவுறும்
இலைகளென
ஒட்டிக்கொள்கின்றனர் பலர்
என் இயல்பை
மாற்ற
மன்றாடி
பிறகு கோபித்துக்கொண்டு
வெளியேறுபவரிற்கு வழங்குகிறேன்
புன்னகையை
நினைவாக
என்னை
என் இயல்போடும்
பலவீனங்களுடனும்
புரிந்துகொண்டவள் நீ
குறிஞ்சி மலர்
எப்போதாவதுதான் பூக்கும்
அப்படித்தான்
எனக்கும்
உன் நட்பு
பதிவுகள் டிசம்பர் 2004; இதழ் 60.
டிசே தமிழன் (இளங்கோ) கவிதைகள்!
5. இலையுதிர்காலம்!
சொல்வதற்கோ தருவதற்கோ
நம்பிக்கையோ வார்த்தைகளோ
எதுவுமில்லை
என்வசத்து
பூவொன்றின் மலர்ச்சியுடன்
விழிகள் விரித்து
மழைத்துளியின் ஈரலிப்புடன்
முத்தம் பகிரும்
அவள் இல்லை;
நீ
விலக்கானபொழுதுகளில்
முதுகு தடவி
முன்னிரவு நிலவில் காய்ந்து
எதிர்காலம் பேசும்
அவனுமில்லை;
நான்
உறவொன்று முகிழ்வதற்கு
காரணங்கள் நூறு வேண்டும்
ஒரேயொரு சறுக்கல் போதும்
நாம் யாரோ
என்று
எல்லாம் உதறிப் போவதற்கு.
***
இழப்புக்களைத்தான்
தந்துகொண்டிருக்கிறது
இந்த நகரம்
தங்குவதற்கு
பிரியமில்லையெனினும்
வெளியேறுவதற்கான
வழிகள்
புலப்படுவதேயில்லை
வாழ்வின் நியதிகள்
அடித்துச்செல்லப்படுகின்றன
அன்புவழிந்த முகத்தில்
உணர்வுகளைச்சிதைக்கும்
கோரப்பற்கள் முளைக்கையில்
எப்படியும் வாழலாமெனும்
நினைப்பை
தடுத்துநிறுத்துகின்றார்
யாரோ
அக்கறை காட்டும்
ஒருவர்
இன்னொரு இழப்பை
அனுபவிப்பதற்கும்
இப்படியொரு குறிப்பை
அடுத்தமுறை எழுதவும்
வரப்போகும்
கொடும்கணத்துக்கிடையில்
எப்போதும்போல
குதூகலிக்கவும்
குடித்துத் திளைக்கவும்
விரும்புவேன்
நான்.
சாரல் ஓய்ந்தபொழுதில்...
இருளை
வாரியிறைக்குமறையினுள்
நினைவுகளைப் புசித்து
அவள் மடியில்
படுத்துறங்கிய காலத்தை
மீளக்கொணரமுடியாத்துயருடன்
முடிவற்று நீள்கிறது
பொழுது
யன்னலோரத்தில்
நேசம நிரம்பி வழிந்தபொழுதில்
தந்திட்ட அந்தூரியச்செடி
இரையைக் கவ்வத்துடிக்கும்
மரநாயொன்றின் வன்மத்துடன்
அசையாதென்னைக் கவனிக்கிறது
வாசமில்லா
அதன் அரும்புகள் முகிழ்கையில்
எப்படியோ என்னில் பரவிவிடுகிறது
சிறுமுலைகளின் வாசம்
நாளொன்றை மினக்கெடுத்தி
தேடித்தேடியெடுத்து
எரித்தாயிற்று
எல்லா அடையாளங்களையும்
ஒவ்வோர் தழுவலின்
சிலிர்ப்பிலும்
என்னுயிரின் blackholeஐ
நினைவுபடுத்துபவள் இடதுபுற
முலையின் மச்சத்தையும்:
சந்திப்புக்களின் முடிவுப்புள்ளிகளில்
காததூரம் சென்று
தற்செயலான நிகழ்வெனப்போல
திரும்பி
கையசைத்து புன்னகையில்
நேசத்தை அனுப்பும் கணங்களையும்:
எந்தப்பெருநெருப்பில் போட்டெரித்து
அவளில்லாத
என்னை மட்டும் மீட்பது?
- பதிவுகள் ஜனவரி 2005; இதழ் 61.
கா-க்-கை!
- மொனிக்கா (நியூயோர்க்) -
ஒட்டில் இடப்பட்ட அணிற்குஞ்சு
மதிய வெய்யிலில் வீட்டிற்குள்
எட்டிப் பார்த்தது.
நெடுநாள் சிநேகம்,
கடும் சண்டை, கோபம்,
பணக்கூட்டல், அன்புக்கழித்தல்
பலவும் சிந்தித்துப் பயணப்பட்டான்.
ரோட்டின் மிக அருகில் வீடு.
நெருங்கத் தொலைவுற்றது.
சாமான்யச் சூரியனோ சட்டைதாண்டி
வாட்டி வருத்திற்று.
சாவுக்குச் சம்பிரதாயம் தவறாதே
என
வரிக்கு வரி சொல்லி வந்தான்.
நியாயப் படுத்த வலிந்தால்
நினைவுப் பாதையொன்றும்
நேர்ப் பாதையாய் தெரியவில்லை.
உணர்வு வந்தவனாய் ஒப்பாரி
கேட்டு நின்றான்.
கூட்டம் உள்ளிருக்க
கூரைக்கு மேல் பார்த்தான்.
காக்கை கைபற்ற கத்திற்று அணிற்குஞ்சு.
விரட்டினான் கருமையை
வீட்டிற்குள் விட்டான் குஞ்சை.
வெய்யில் சகித்ததொன்னும்
வீண்போகவில்லை என்றான்.
துன்பம் கைபற்றத் தூக்கிவிடல் மனிததர்மம்.
எண்ணம் தலைக்கேற
எளியனாய் திரும்பி வந்தான்.
கனவு கலைந்தெழும்ப கழுத்தை
நிமிர்த்திப் பார்த்தான்.
கூரையில் அணிற்குஞ்சு.
பகற்கனவு வேண்டாமென்று வழமைபோல்
மனைவி வைதாள்.
பதிவுகள் நவமப்ர் 2004; இதழ் 59.
நா.முத்து நிலவன் கவிதைகள்!
1. எங்கள் கிராமத்து ஞானபீடம்!
காலை வணக்கத்தில்
'நேர் நில்' சொல்லியும்
நிமிர்ந்து பறக்கச் சக்தியற்று
தர்மசக்கரத்தை மறைத்து
தேசியக்கொடி தரை பார்க்க,
மாணவர் ஊர்வலம்
மரத்தடி வகுப்புக்கு
மவுனமாய்ச் செல்லும்.
ஐந்து வகுப்பிலும்
அறுபத்தேழு பேர்சொல்லி
வருகை பதிவதற்குள்
மணியடித்துவிடும்,
அடுத்த வகுப்பு துவங்கும்.
பெரியாரைப் பற்றிய
உரை நடைக்குமுன்
கடவுள் வாழ்த்தோடு
செய்யுள் தொடங்கும்
உலகப் படத்தில்-
பாற்கடலைத் தேடும்
இலக்கியம்.
ஆண்டவனைக் காப்பாற்றும்
அறிவியல்.
ஆள்பவரைக் காப்பாற்றும்
வரலாறு.
வறுமைக் கோடுகளை மறைத்து
வடஅட்சக் கோடுகளைக் காட்டும்
புவியியல்.
கடன்வாங்கச் சொல்லித்தரும்
கணக்கு.
கிழிந்த சட்டை,
நெளிந்த தட்டோடு
அச்செழுத்துக்களை மேய்ந்த
அf£ரணத்தில் மாணவர்.
'எலேய்! எந்திரிச்சு வாடா'
அவ்வப்போது வந்து
அழைக்கும் பெற்றோர்.
உபகரணங்கள் இல்லாமல்
பாவனையில் நடக்கும்
செய்ம்முறைப் பயிற்சி.
அவசரத்தில்
தின்றதை வாந்தியெடுக்கும்
தேர்வுகள்.
பழைய மாணவர் எம்.எல்.ஏ ஆகி
பள்ளிக்கு வந்தார்.
ஆசிரியர் கையை
ஆதரவாய்ப் பற்றி,
'கோரிக்கை ஏதுமுண்டா
கூறுங்கள்' என்றார்-
'நிரந்தரப் படுத்தணும்
நீயும் சொல்லணும்'
திறந்த உலகம்தான்
சிறந்த படிப்பாம்,
எங்கள் பள்ளிக்குக்
கதவே கிடையாது-
கட்டடம் இருந்தால்தானே?
'எங்கள் பள்ளி நல்ல பள்ளி
கட்டடம் இரண்டு பூங்கா ஒன்று'
-நடத்துவார் ஆசிரியர்.
'எங்கேசார் இருக்குது?'
மரத்தடி மாணவன்
எழுந்து கேட்பான்.
'புத்தகத்தைப் பார்ரா'
போடுவார் ஆசிரியர்.
போதிமரத்தடியில்
புத்தருக்கு ஞானம்,
புளியமரத்தடியில்
மாணவர்க்குப் பாடம்.
இதுவே-
எங்கள் கிராமத்து
ஞானபீடம்!
- பதிவுகள் செப்டம்பர் 2004; இதழ் 57.
2. நன்றி, சங்கரா! நன்றி!!
*சதுர்வேதி மீது கற்பழிப்பு வழக்கு!
சஙகராச்சாரி மீது கொலைவழக்கு!!
கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்களே!!!
நன்றாகப் புரியவைத்த உனக்கு,
நன்றி சங்கரா நன்றி!
*பெரியார் சொல்லை
எகத்தாளம் செய்தவர்கள்-
உன் செயல்களால்
தெளிவாகப் புரிந்துகொண்டார்கள்-
'கடவுள் இல்லை
கடவுள் இல்லை
கடவுள் இல்லவே இல்லை'யென்று!
நன்றி சங்கரா நன்றி!
*காவியைக் கழற்றி, தண்டத்தை உதறி,
ஏற்கெனவே நீ இருமுறை ஓடிப் போனாய்!
'அது தண்டம் தான்' என்று
அப்போதே புரிந்துகொள்ளாதவர்களும்
இப்போது புரிந்துகொண்டார்கள்!
காவியை வெளுத்துக் க(¡)ட்டிய உனக்கு
நன்றி சங்கரா நன்றி!
*'இசட்'பூனைப் பாதுகாப்பு,
எல்லா இழிவுகளுக்குமா?"
இல்லை என்பதை-
எங்கள் சொல்லை விடவும்,
உன் செயலால் புரியவைத்தாய்!
நன்றி சங்கரா நன்றி!
*உன்காலைத் தொட்டுவணங்க
அப்பாவி மக்களையும் நீ
அப்போது அனுமதிக்கவில்லை!
இப்போது புரிந்துவிட்டது-
உழைக்கும் மக்களைத் தொடக்கூட
உனக்குத்தான் தகுதியில்லை என்று,
அவர்களுக்கும் புரியவைத்த உனக்கு
நன்றி சங்கரா நன்றி!
*உன்காலில் விழுந்ததைப்
பெருமையோடு சொன்னவர்கள்,
இப்போது-
அவமானத்தோடு அமைதியாயிருக்கிறார்கள்!
பாவம்-
பாத்திரம் அறிந்து
பிச்சையிடத்தெரியாதவர்கள்!
*குளித்துவிட்டுக்
கோவிலுக்குள் வரச்சொன்னாய்-
உன் குளத்தில் குளிக்க
எங்களை அனுமதிக்காமலே!
எந்தக் குளத்தில் விழுந்தாலும்
இந்த அழுக்கைக் கழுவ முடியாது
என்பதைப் புரியவைத்த உனக்கு
நன்றி சங்கரா நன்றி!
*விவேகானந்தரும், திரு.வி.க.வும்,
அடிகளாரும் போன்றோர்
அணிந்தால் தவிர
காவியை நாங்கள்
'கபட வேடம்'என்றே கருதுகிறோம்.
எங்கள் கருத்து சரிதான் என்று
மீண்டும் புரியவைத்த உனக்கு
நன்றி, சங்கரா நன்றி!
*சங்கராச்சாரி முன்
சனாதிபதியும் நிற்கிறாரே என
சாமானியர்கள் பயந்தார்கள்!
அதுதானே உன் சாம்ராச்சியம்!
இப்போது -
நீ நின்று விளக்கம்தர,
நீதிபதி உட்கார்ந்து தீர்ப்பளிக்க
fன சட்ட நீதி புரிந்தது!
நன்றி சங்கரா நன்றி!
*காலையில் சி வழங்கி
மாலையில் கைதான
லோக குருவே!
உன்னால் எது நடந்ததோ
அது நன்றாக நடக்கவில்லை என்பதால்
உனக்கு இப்போது
எது நடக்கின்றதோ
அது நன்றாகவே நடக்கின்றது!
'மடச்சாமிகள்' பற்றி
மக்கள் புரிந்துகொண்டு,
இனி நடக்கப் போவதாவது
நன்றாகவே நடக்கட்டும்!
நன்றி சங்கரா நன்றி!
பதிவுகள் டிசம்பர் 2004; இதழ் 60.
வ.ந.கிரிதரன் கவிதைகள்!
1. விருட்சங்கள்!
திக்குகளெங்கும் ஓங்கி வளர்ந்த
விருட்சங்கள்!
எண்ணிலடங்கா விருட்சக் காட்டினுள்
தன்னந்தனியாக நான்
நடந்து கொண்டிருக்கின்றேன்.
வனமெங்கனும் கவிந்து கிடக்குமொரு
மோனம்.
கோடை வெயிலின் சுட்டெரிப்பில்
தகித்துக் கிடக்கும் விருட்சங்கள்
தகிப்பினை வாங்கித் தரும்
தண்மையின் கீழ் என் பயணம்
தொடரும்.
அமைதியான,
ஆரவாரமற்ற பெருந்தியாகம்!
பலன் கருதாப் புரியப்படும்
பணி!
எத்தனை விந்தையான உயிரினங்கள்!
அத்தனைக்குமோர்
ஆதரவு! அரவணைப்பு!
ஓங்கிய விருட்சங்களுக்குள்
ஒரு கோடி பிரிவுகள்! ஆயின்
ஒற்றுமையாய் ஒருமித்தவை தரும்
தண்நிழல்!
பிரமிப்பில் தொடருமென் பயணம்.
ஆறறிவு பிளந்து வைக்கும் மண்ணில்
கீழறிவின் பேரறிவு!
நன்மைக்காய்த் தனை மறக்கும்
இன்மனத்தினிருப்பிடமாயிவ்
விருட்சங்கள்!
தமையழித்த போதும்
தண்தரும் விருட்சங்கள்!
- பதிவுகள் செப்டமப்ர் 2004; இதழ் 57
2. இயற்கையொன்றி இருத்தல்!
விரிந்திருக்கும் வெளியில் விரையுமிந்தக்
கோளின் வனப்பும், கதியும்,
உயிரின் இருப்பும், அதற்கான சாத்தியமும்,
விந்தைக்குரியவை; அற்புதமானவை என்று
வேண்டுமானாலும் கூறிக்கொள்ளலாம்.
சிலவேளைகளில் விருட்சங்களின்
இயல்பும் வாழ்வும் என் சிந்தையில்
பொறியேற்படுத்துவதுண்டு.
அப்பொழுதெல்லாம் அவற்றின் வாழ்க்கை
பற்றிச் சிறிது ஆழமாகச் சிந்திப்பேன்.
ஒளியும், வளியும் விருட்சத்தின்
இருப்பு; எம்முடையதைப் போல.
ஒன்றின் கழிவில் அடுத்ததன்
உயிர்ப்பு.
விருட்சத் தோழரைப் போல்
வாழுதற்குணவு தயாரித்தல் சாத்தியமா?
என்று அப்பொழுதெல்லாம்
சிந்திப்பேன்.
அதற்குரிய ஆற்றல் எம்முள் உண்டா
என்று அப்பொழுது நான்
ஆழமாக யோசிப்பேன்.
இருதயத் துடிப்படக்கி
இருத்தல் இலகுவானதா
என்றெல்லாம் சிந்தனைகள்
இறக்கை விரிக்கும் சமயங்களவை.
மாரித்தூக்கத்தின் சாத்தியம்
மிருகங்களுக்கு மட்டுமா
சாத்தியம்? என்றும் அப்பொழுது
எண்ணுவேன்.
அவை மட்டும் சாத்தியமானால்
- ஆம் அதற்குரிய சாத்தியங்கள்
விந்தைகள் நிறைந்த,
புதிர்களின்னும் புரிபடாத,
இருப்பில் நிறையவே
இருக்கின்றனதான். -
இருப்பிற்காகக் கொல்லுதல் தவிர்த்து,
இருப்பபிற்காக விருட்சமழித்தல் நீக்கி,
இயற்கையொன்றி இருந்திடுமொரு
இருப்பில்தான்
எத்துணை வனப்பு! எத்துணை களிப்பு
- பதிவுகள் பெப்ருவரி 2005; இதழ் 61
3. நகர் வலம்
பெரு
நகரின் இருண்டதொரு
அந்தியில் தொடங்கினேன்
என்
நகர் வலத்தை ஒரு
மன்னனைப் போல.
சகதிக்குள் குளித்துக் கொண்டிருக்கும்
ஓர் எருமையைப் போல்
புரண்டு புரண்டு குளித்துக்
கொண்டிருந்தது
நகரம்.
வீதிக் கால்வாய்கள் வழியாக
மெதுமெதுவாய்
நகர்ந்து கொண்டிருந்த
வாகனப் பாம்புகளை
அவை வயிற்றில் சுமப்பவர்களை
வியப்புடன் ஒருவித அருவருப்புடனும்
பார்த்துக் கொண்டிருந்தனர்
நகரத்து மாந்தர்.
உயரமான, பழையதொரு
கோதிக் பாணியில் அமைந்திருந்த
கிறித்தவ ஆலயமொன்றின்
உச்சியில் வாசம் செய்யும் புறாக்கள்
சில பறப்பதும் சிறகுகளை
உதறுவதுமாக பறவைகளின்
இருப்பின் சாட்சியாகச்
சோர்ந்து கிடந்தன.
இரவின் கருமையை கார்
மேகங்கள் மேலும் அதிகரித்துப்
பார்வைப் புலத்தினைப்
பழுதாக்கின.
அழகான பெண்கள் அலங்கரித்தபடி
கரைகளில் நின்றபடி
கால்வாய்களில் நகரும் பாம்புகளையும்
அவற்றில் பயணித்தவர்களையும்
ஆர்வத்துடன் பார்த்துக்
கொண்டிருந்தார்கள்.
இந்த இரவு முழுக்க
இவர்களது பொழுது
இவ்விதமே கழியும்?
ஆகாயமே கூரையாக
வாழும் ஊர் உலாத்தி மனிதர்கள்
உற்சாகம் குன்றி
நகரின் நடுநடுவே தெரியும்
நந்தவனங்களில்
போர்வைகளிற்குள்
நடுங்கி, முடங்கிக்
கிடந்தனர் எந்தவிதக்
கணப்புமின்றி.
கிளப்புகளில்
களியாட்டம் தொடங்கி விட்டது. மேடைகளில்
ஆண்கள், பெண்கள்
ஆடைகளின்றி ஆடினர்
முலைகளைக் குறிகளைக்
குலுக்கியபடி. பாயும் மதுவெள்ளத்தில்
நீந்தி நீந்தி
மூழ்கினர் நகரத்தின் பெருங்குடி
மக்கள்.
போதை வஸ்த்து, பியர், விஸ்கி
பொங்கி நகரை வெள்ளத்தில்
மூழ்க வைத்தன. திருடர்கள்
கன்னக்கோல் வைத்தழகு
பார்க்கத் தொடங்கினர்.
துப்பாக்கிக் கரங்கள் நீண்டு
நகரைச் சுற்றி வளைக்கத் தொடங்கி
விட்டன.
பகல் முழுக்கச் சட்டங்கள் இயற்றிவர்கள்,
உரிமை பற்றி வாய் கிழிய முழங்கியவர்கள்,
பார்களில், ஓட்டல்களில் சல்லாபித்துக்
கிடந்தனர்.
நகரை நோக்கி
இன்னும் பலர் படையெடுப்புகள்
நிகழ்த்திக் கொண்டிருந்தார்கள்.
ஆலைகளில், உணவகங்களில்
இன்னும் மனிதர்கள்
உழைத்துக் கொண்டுதானிருந்தார்கள்
எந்தவித களிப்புமின்றி
இருப்பிற்காக ஆனால் பெருங்
கனவுகளுடன்.
களியாட்டமிடும் நகரை
ஓரமாக ஒதுங்கி நின்று
பார்த்து
ஏக்கத்துடன் சோகித்துக் கிடந்தன
கிராமங்கள்.
நகரத்தின் விளையாட்டைச்
சகிக்க முடியாத விண்மீன்கள்
தங்களை மூடித் தொலைந்து
போயின எங்கோ.
விரிந்து கிடந்த
பெருவானோ
எந்தவிதச் சலனமுமின்றி
மெளனித்துக் கிடந்தது
இது வழக்கமானதொரு நிகழ்வு
போல.
சுடர்களற்ற
இந்த இரவில்,
இந்த மழையில்
எதற்காக நான்
என் நகர்வலத்தை
ஆரம்பித்தேன்?
- பதிவுகள் நவம்பர் 2002; இதழ் 35
4. விளங்காத விந்தை. வியப்பு கொள்ளும் நம் சிந்தை!
விரிந்திருக்குமிந்த வான்
என் நெஞ்சினில்
இனம்புரியாததொரு களிப்பினை
விடைதெரியா பல்
வினாக்களை எழுப்பிட
எப்பொழுதுமே தவறியதில்லை.
சூழல் தெரியா
மலை முகட்டில் அல்லதோர்
குன்றில்
அல்லது உயர்வானதொரு புல்வெளியில்
அண்ணாந்து படுத்திருந்து
வான் பார்த்தல்
எப்பொழுதுமே மகிழ்ச்சிக்குரியதொரு
விடயமாகத் தானிருந்து வருகிறது.
இந்த வெளி
தத்துவஞானிகள் எப்பொழுதும்
தத்துவங்களைத்
தர்க்கிப்பதற்குப் பெரிதும்
உதவியாக இருந்திருக்கின்றது.
அன்றைய அறிவியல் அறிஞர்கள்
தொடக்கம்
இன்றைய நியூட்டன், ஐன்ஸ்டைன் என்று
சிந்தனையைத் தூண்டியதில்
அளப்பரியதொரு பங்கு இதற்குண்டு.
விரிந்திருக்கும் சடவெளி
அதில்
உயிர்த்துடிப்புடன் வளையவரும்
பொருளின் பின்னணியில்
பெரும் அர்த்தத்துடன் விரிந்து
கிடக்கும்
மிகப் பெரியதொரு
'பிர(ம்)மா'ண்டமானதொரு
மேடையின் பின்னணியாய்.
இதன் பின்னணியில்
உயிர்களின் நடனம், நடிப்பு
எல்லாமே வெகு நேர்த்தியாக
இயல்பாக, அற்புதமாக
இருக்கின்றன.
ஒருவரை ஒருவர்
ஒன்றினை ஒன்று
கொன்று தம் இருப்பை
உறுதி செய்வதில்
எல்லோருமே
எல்லாமே
உண(ர்)வாக இருக்கின்றார்கள்.
இருக்கின்றன.
சின்னஞ்சிறிய அழகானதொரு குருவி
தன் குஞ்சிற்கு
உணவாக ஊர்ந்து செல்லுமொரு
உயிரினைப் பிடித்து வருகிறது
எந்தவித மன உறுத்தலுமில்லாமல்.
ஊர்ந்திடும் உயிருக்கு உள்ள
இருக்கக் கூடிய பந்த
பாசங்களைப் பற்றிய
எந்தவிதத் துயரங்களோ
சோகங்களோ
கழிவிரக்கமோ
இல்லாமல்.
தனியாக மானொன்றினை அல்லது
வரிக்குதிரையினைத் துரத்தும்
புலியோ அல்லது சிங்கமோ
அந்த மானின், அந்தக் குதிரையின்
அவற்றின் வருகையை
ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கும்
அவற்றின் குட்டிகள் அல்லது அவற்றின்
காதலர்கள் இருக்கக் கூடிய
சாத்தியங்களைப் பற்றியெல்லாம்
சிந்திக்காமல் துரத்துகின்றன
புசிப்பதை மட்டும்
நினைவில் வைத்துப்
பெரும் பசியுடன்.
ஆனால் முதலை, காட்டு நாய்
போன்ற சில
கொல்லுவதில் கூடக் கொடூரமானவை.
சிறுகச் சிறுகக் குழுவெனக்
கூடிக் கொல்லும் இவற்றின் செயல்
கொல்லப் படுவதன்
உணர்வுகளைக் கொஞ்சமேனும்
கவனத்திலெடுக்காமல்
புரியப் படுகின்றது.
தனது குழுவில் ராஜாவாக ஆதிக்கம்
செலுத்திக் கொண்டிருந்த
வரிக் குதிரையொன்றை
அல்லது
காட்டெருமையினை
அல்லது
மானொன்றினை இவை
கீழ்த்தரமாகக் கொல்லுகின்றன
எந்தவித இரக்கமும்
இல்லாமல்.
உயிர் அளவில் சிறிதாயினும்
அல்லது
உருவில் பெரிதாயினும்
டிஎன்ஏயின்
சில வித்தியாசங்கள்
போதுமானவையாக
இருக்கின்றன
அடிப்படை இயல்பினை
மாற்றுவதற்கு.
உண(ர்)வு
உயிர்களின் இருப்பிற்கு
உயிராகவே
இருக்கின்றது.
விரிந்திருக்கும் வெளிப்
படுதாவில்
வரைந்திருக்கும் ஒவியமாய்
சுடர்கள், உயிர்கள்
அனைத்துமே எழில் கொண்டு
ஒளிர்ந்து. கருவாக,
உருவாக, உதித்து
உலருமொரு இருப்பு
இங்கிருப்பதன் அடிப்படை
இரகசியமென்ன?
உயிரற்ற கதிர்
அதன் ஒளி, அதன் துகள்
உயிரின் அடிப்படையாய்
உள்ளதொரு விந்தை.
விளங்காத விந்தை. வியப்பு
கொள்ளும் நம் சிந்தை.
- பதிவுகள் டிசம்பர் 2002; இதழ் 36
5. நடிகர்கள்!
இந்த நாடக மேடையில்
நடிக்கும் நடிகர்களைப் பார்த்தால்
அழுவதா சிரிப்பதா என்று
சில நேரங்களில் தெரிவதில்லை.
இவர்களுக்கோ தாங்கள் பிறவி
நடிகர்கள் என்ற அடிப்படை
உண்மை கூடத் தெரியவில்லை.
தாங்கள் நடிப்பதில்லை என்று கூறிக்
கொண்டே நடித்துக்
கொண்டிருக்கின்றார்கள்.
இவர்களில் ஒருவன் என்ற வகையில்
என்னையும் சேர்த்துத் தான்
கூறுகின்றேன்.
எவ்வளவு தேர்ச்சி பெற்ற
நடிகர்கள் இவர்கள்.
எவ்விதமாகவெல்லாம் இவ்வளவு
தத்ரூபமாக இவர்களால்
முகபாவங்களைக் காட்ட முடிகின்றது?
உருகுவதிலாகட்டும் அசடு வழியக்
குழைவதிலாகட்டும்
என்னமாய் ஜமாய்த்து விடுகின்றார்கள்?
இந்த நாடக மேடையிலிருந்து
விடுபட வேண்டுமென்று தான்
இத்தனை நாளாக முயன்று
கொண்டிருக்கின்றேன்.
திமிர் பிடித்தவன். மரியாதை தெரியாதவன்.
கர்வம் கொண்டவன். வாழத் தெரியாதவன்.
எல்லா நடிகர்களும் ஒன்று சேர்ந்து
கத்துகின்றார்கள்.
நடிக்கவில்லையென்று கூறிக் கொண்டே
நடிப்பவர்கள் கூறுகின்றார்கள்
ஓரளவாவது நடிப்பதைத் தவிர்க்க முனையும்
என்னைப் பார்த்துப்
'பார் இவனது அபாரமான
நடிப்பை'யென்று.
என்ன நடிகர்களிவர்கள்?
தங்கள் நடிப்பை விட
என் நடிப்பு அபாரமானது
என சான்று வழங்கும்
பெருந்தன்மை மிக்க
மகா பெரிய நடிகர்களே!
உங்கள் பெருந்தன்மைக்காக
உங்கள் கருணைக்காக
உங்கள் அனைவருக்கும்
எனது சிரந்தாழ்ந்த வணக்கங்கள்
உரித்தாகுக.
மகாபெரும் கவிஞராக, அற்புதப்
படைப்பாளியாக, மூதறிஞராக,
அதிமேதாவியாக,சமூகத்
தொண்டராக, தலைவராக
எத்தனை விதமான வேடங்களில்
நீங்கள் வெளுத்துக் கட்டுகின்றீர்கள்!
உங்கள் வாயால் கிடைக்கும் பாராட்டு
வசிட்டர் வாயால் கிடைத்தது போல்
எத்துனை பெருமை மிக்கது. அதற்காக
எனது ஆயிரம் ஆயிரம் கோடி
நன்றி!
இந்த நாடக மேடையில் முற்றாகவே
நடிப்பை ஒதுக்கி விடுவதென்பது
இயலாததொன்று என்பதை உணர
முடிகின்றது. இருந்தாலும்
நடிப்பதைக் குறைத்துக் கொள்ளத்
தான் முயன்று கொண்டிருக்கின்றேன்.
அதனைக் கூட நடிப்பாகக் கருதி விடும்
அற்புதமான நாடக மேடையிது.
இங்கு நடைபெறும் நாடகங்கள்
அனைத்துமே திரை விழும் வரை
தான். விழுந்த பின்னும்
நடிப்பில் தேர்ச்சி பெற்ற
நடிகர்கள் நாடகத்தைத்
தொடரத் தான் செய்வார்கள்.
இந்த நாடக மேடையில்
நடிப்பதென்பது மட்டும்
தான் நித்தியம்.சாசுவதம்.
நிரந்தரமானதொரு திரை
என்று ஒன்று உண்டா
இதன் நிரந்தரத்தை
நிரந்தரமின்மையாக்க?
யாருக்கும் தெரியாது? அவ்விதமொரு திரை
இருக்கும் பட்சத்தில்
அவ்விதம் விழும் திரை கூட
இன்னுமொரு பக்கத்தில்
ஆரம்பமாகுமொரு நாடகத்தின்
தொடக்கமாகவிருக்கலாம்?
யார் கண்டது?
பாத்திரங்களிற்கா
குறைவில்லை?
ஆக,
இருக்கும் வரை
நடித்துக் கொண்டேயிருப்போம்.
- பதிவுகள் ஜூலை 2002; இதழ் 31.
6. அனகொண்டா
அடாது மழை
விடாது பெய்து கொண்டிருந்த
நேற்றிரவு நானொரு கனவு
கண்டேன்.
வழக்கம் போல்
இம்முறையும் தனது அகன்ற
வாயினை விரித்தபடி
அதே அனகொண்டா.
விண்ணளாவ வியாபித்து
விரிந்திருக்கும் அதன் வாய்
எனக்கு அச்சத்தினை
மூட்டியது. அதன்
துரத்தலிலிருந்து
தப்புதலென்பது வழக்கம் போல்
இம்முறையும்
இயலாத செயல்களில் ஒன்றாகவே
ஆனது.
எனது கால்களும் கூட
நிலை பெயர்தலை
நினைக்க மறந்தன.
எதற்காக இந்த அனகொண்டா
என்னை எப்பொழுதுமே
துரத்துகிறது?
இதனிடமிருந்து எனக்கு
மீட்சி
எப்பொழுது?
அவ
தரிப்பிலிருந்து
தரிப்புவரை
அகன்ற தன் வாயினை
அகலத் திறந்தபடியிந்த
அனகொண்டா
இது போலெப்பொழுதுமே
வரத்தான் போகின்றது
போல் தெரிகிறது.
அகன்று பெரு வெளியெங்கும்
வியாபித்துக் கிடக்கும்
இதன் பார்வையிலிருந்து
ஒரு போதுமே தப்புதலென்பது
முடியாது போல் தான்
படுகிறது.
அனகொண்டாவுடன்
வாழப் பழகிக் கொள்வதைத் தவிர
வேறெதுவுமொரு வழி
இருப்பதாகத் தெரியவில்லை
கனவில் மட்டுமல்ல
நனவிலும்தான்.
- பதிவுகள் டிசம்பர் 2002; இதழ் 36.
6. இருப்பதிகாரம்
- நிலை மண்டில ஆசிரியப்பா!
வானினை நிலவினை வரையினை மடுவினை
தேனினை யொத்த சொல்லினை உதிர்க்கும்
அணங்கினை அகன்ற இடையினைத் தனத்தினை
மீறிட முடியா சிந்தையை மேலும்
தேனிசை சிற்பம் சித்திரம் கலைகள்
மொழியும் இனமும் மண்ணும் பொன்னும்
குதலைக் குறும்பும் அன்பும் சிரிப்பும்
ஆட்டியே வைக்கும் மீட்சி யுண்டா?
என்றென் துயரும் பிடிப்பும் சாகும்?
விரியு மண்ட மடக்கு மண்டம்
அதனை யடக்க மற்றோ ரண்டம்.
வெறுமை வெளியில் பொருளின் நடனம்.
இதற்குள் துளியெனக் கரையு மிருப்பு.
இதுவும் நிசமா நிழலாக் கனவா?
நனவும் கனவா? கனவும் நனவா?
விடைகள் நாடித் தொடரும் வினாக்கள்.
விடைக ளற்ற வினாக்கள்! வினாக்கள்!
இருப்பு அறிந்திட தேடித் தொடரும்
இருப்பே எந்தன் வாழ்வே வாழ்வே!
இதனை அறிதல் புரித லெவ்விதம்?
நூலினைக் குருவினை அறிவினை உணர்வினைக்
கோளினைச் சுடரினை வெளியினை விரிவினை
வாழ்வினைத் தாழ்வினைத் துயரினை மகிழ்வினை
அறித லெவ்விதம்? புரித லெவ்விதம்?
கலவிக் குலாவி யிருந்திடு மவைகளாய்
இருந்தே யிருப்பின் இவ்வித இடரெலாம்
இல்லா தொழிந்து இருந்தன்றோ இருக்கும்?
செயற்கை சமைத்திட சிந்தை தந்த
செயலினால் தானோ செகத்தினில் துயரோ?
அன்பினை ஆக்கிட அறிவினைப் பாவிக்க
என்னவர் உன்னவர் நம்மவர் மறந்திட்ட
பண்பினால் தானோ பாரினில் பகைமை?
தாமரை இலைமேல் தண்ணீர் போன்று
தரணியில் வாழ்ந்திடும் பக்குவம் கொண்டு
நானினைச் சித்தினை அசித்தினை அறிந்து
விருப்பு விட்டு வாழ்ந்திடும் தன்மை
வந்திடு மென்றால் அதுவே போதும்.
வேறு....
அந்திக் கதிரின் சிவப்பில் நாளும்
சிந்தை யிழந்து இருத்த லின்பம்!
இரவில் வானில் நீந்தும் மீன்கள்
வரவி லிதயம் மூழ்கிக் களிக்கும்.
விசும்பும் மதியும் கதிரும் காற்றும்
புள்ளும் மற்று மிருக்கு மனைத்தும்
படைப்பின் திறனை பறையே சாற்றும்.
இன்ப வெள்ளம் மடையை யுடைக்கும்.
கூகைக ளுலாவிடும் நள்யாமப் பொழுதும்
அகத்தினி லுவப்பினை யேற்றி வைத்திடும்.
உறவினை உதறி யுண்மை அறிதல்
துறவென ஆயிடு மதனா லதனை
ஏற்றிடே னானால் உள்ளி ருந்தே
உண்மை காணலே சிறந்ததோ தறியேன்.
எவ்வித மிருப்பின் உண்மை அறிவேன்.
உளையு முளத்தின் உளைவை எவ்விதம்
தணிப்பேன் தணித்துப் பதிலை அறிவேன்?
- பதிவுகள் ஏப்ரில் 2003; இதழ் 40.
7. கிணற்றுத் தவளைகள்!
தவளைகளின் கொட்டம் தாங்க முடியவில்லை.
கிணற்றை விட்டு வெளிவர
மாட்டோமென்று அடம் பிடிக்கின்றன.
சில தவளைகளுக்கோ வார்த்தைகளென்றால்
அவ்வளவு உயிர். மழைக்காலங்களில் அவை இழுக்கும்
ஆலாபனையிருக்கிறதே! வார்த்தைகளை வைத்து
மாயாஜாலம் காட்டுவதில் வல்லவை அவை. மேற்படி
தவளைகள் சில வேளைகளில் அறிதலுக்காக
மிகவும் பிரயத்தனம் செய்கின்றன.
ஆயினும் 'வெளிவருத'லென்பது அவற்றுக்கு
வேப்பங்காய் தான்.
புறம் விரிக்குமென்பதறியாத அவை
அறிதலின் உச்சியில் நின்று
ஆனந்தக் கூத்தாடுவதாகக் கனவுகள்
காணுகின்றன. தமக்குள் அடிக்கடி மோதிக் கொண்டபோதும்
ஒரு விடயத்தில் மட்டும் அவை பெரிதும் ஒற்றுமையாக
இருக்கின்றன. அது....
இருப்பை நிலை நாட்டுவதிலுள்ள ஆர்வம்.
தம்மிருப்பை உறுதி செய்வதில் அவை
பெரிதும் ஒற்றுமையாகவிருக்கின்றன.
ஆயினும் ஒற்றுமையின் பலம் கொண்டு
வெளிவர மட்டும் அவை சிறிதும்
முயல்வதில்லை.
கிணற்றுத் தவளைகளின் இருப்பு
அவற்றின் பரிதாப நிலையினைப்
புலப்படுத்தும். வெளி விரிந்து கிடப்பதை
அவை அறியவில்லை. இருந்தும் அவை
மிகவும் சந்தோஷமாகத்
தானிருப்பதாகத் தெரிகின்றது.
போதுமென்ற மனதில் பொன் செய்து
வாழும் தவளைகள்!
8. தேடல்கள்!
எப்பொழுதுமென் நெஞ்சில் களியை
ஊட்டுவனவாகக் கீழுள்ளவற்றினைக்
கூறிடலாம்.
நல்ல நூல்கள்; நதி;கடல்;
மலை;சுடர்;புள்;மரம்;காற்று...
இது போல் பலப் பல. இவை
எனக்குப் படைப்பின் அதிசயத்தை,
அற்புதத்தினைப் போதிக்கின்றன.
அகக் கண்களை எல்லைகள் கடந்து
நோக்கத் தயார் செய்து விடுகின்றன.
எப்பொழுதுமே
அறிதலுக்கும், புரிதலுக்குமாக
தேடுமென் நெஞ்சத்தின்
தாகம் இச்சிறுகணவிருப்பில்
அடங்கிப் போகப் போவதில்லை
என்பதும் புரிந்துதானிருக்கிறது.
இருந்தும் இயன்றவரை
வினாக்களுக்குரிய விடைகளை
நாடித் தொடருமென் தேடல்
தொடரத் தான் போகின்றது.
9. யானை பார்த்த குருடர்கள்!
யானை பார்த்துப் பெருமிதமுறும்
குருடரிவர்.
காலைப் பார்த்துரலென்பார்..
காதைப் பார்த்துச்சுளகென்பார்.
முழுவுரு அறிதற்கு
முயலார். ஆயின்
முற்றுந் தெரிந்ததாய்
முரசறைவார்.
சொல்லின் பொருளறியார்.
ஆயின் சொல்லழகில்
சொக்கி நிற்பார்.
'இஸம்' பல பகர்வாராயின்
'இஸம்' புரியார்.
குழுச் சேர்த்துக்
குளிர் காய்வார்.
இருப்போ தற்செயல்.
தற்செயலுக்குள்
இவர்தம்
தற்செயற் தந்திரம் தான்
என்னே!
நிலையற்றதனுள்
நிலைப்பதற்காயிவர்
போடும் ஆட்டம் தான்
என்னே!
புரிந்து கொள்ளப்
படிக்கார்.
அறிந்து கொள்ளப்
படிக்கார்.
புலமை பகிர்வதற்கன்றிப்
பகர்வதற்காய்ப்
படிப்பார்.
ஆனை பார்க்கும் அந்தகரே!
தனியறிவை
இணைத்தறிய என்றுதான்
முயல்வீர்?
- பதிவுகள் மார்ச் 2004; இதழ் 51.
சிறு சோடிப் பாதங்களுக்கு ஒரு சலங்கை
- சாரங்கா தயானந்தன்
வந்த -
உன் சிறுசோடிப் பாதங்களில்
சூட்டும் சலங்கையில் கோர்ப்பதற்குகந்த
முத்துப்பரல்கள் சில
சேர்த்துள்ளேன் என் செல்ல மகளே!
இறந்த காலத்தில்
நான் நடந்த பாதைகளில்
சேர்த்திருந்த அனுபவ முத்துக்கள்...
அவை
உன் தாய் வசித்திருந்த தேசத்தின்
ஓராயிரம் கதை சொல்லும்.
மென்தென்றல் பற்றி
மிக அழகு சொரிகின்ற
பொன்வெயில் படர்ந்த மண் பற்றி
மிதிக்க மனமொப்பா
வெண்மணல் வெளிகள் பற்றி
விரிந்து நீளும் வேனில் பற்றி
கண் துஞ்சா வீரர் போல்
கருநிறத்தில் மிளிர்ந்திருந்த
பெண் ஆண் பனைகள் பற்றி
பின்னொருநாள் கொடும் போரில்
தம் வடலிப் பிள்ளைகளொடு
தடமற்றும் தலையற்றும்
அவையழிந்த சேதி பற்றி
இடம் பெயர்ந்த எம் வாழ்வின்
அவலம் பற்றி
இருப்பிழந்த பின்னாலும்
எம் உரித்தாயிருந்த
நீயறியாச் சொல்லான
'சுயம்' பற்றி
நீள்நெடுங் காலமாய்
நம் மண் தாகித்திருந்த
சுதந்திர வாழ்வு பற்றி
சுனாமி எனும் பெயரில்
உயிர் குடித்த கடல் பற்றியென
சகலமும் உன்னிடத்தில் சொல்லும்.
முத்துப் பரல் பொதிந்த
அச் சிறு சலங்கை
வெண்பனி கொட்டும்
இத்தேசவாசியான
உனது காலுறைகளுள்
மிருதுவாய் வசிக்குமெனும்
கனவெனது.
வெளித்தெரியாத படியெனினும்
என்தேச உணர்வொற்றி
நீ வாழ வேண்டுமெனும்
நினைப்பெனது.
ஆயினும் ஒருவேளை
ஒளிதெறிக்கும் இச் சலங்கை
உன் வாழ்வின் போக்கிற்கு
இசையாதது கருதி
ஓரமாய் வீசப்படலாமெனும்
பாயமுமெனது.
எது வெல்லும்?
என் செல்ல மகளே
உன் அன்புத் தாயின்
கனவா? பயமா?
- பதிவுகள் மார்ச் 2005; இதழ் 63
நிழல் நெசவாளர்கள்!
- பிச்சினிக்காடு இளங்கோ -
இனிமேலும் நான்
வெட்டமாட்டேன்
இனிமேலும் நான்
பறிக்கமாட்டேன்
வெட்டி முறிக்கும்போதெல்லாம்
நாக்குத்தொங்கிய
வீட்டுப்பிராணியாய் உணர்ந்தேன்
இரத்தம் வடியவில்லை
கண்ணீர் வடிக்கவில்லை
ஆனாலும் என்னவோ
அவை
என்னோடு பேசுவதாய்
உந்தப்பட்டு
கண்ணீர் சிந்தாமலேயே
அழுகிறேன்!
பறிக்கிறபோது
காதுகளைக்
கிள்ளி எடுப்பதாகவே
அர்த்தப்படுகிறேன்
இனிமேலும்
எப்படி முடியும்?
அவைகளும் கைகளே
மனசு
இரத்தம் வடிக்கிறது
வெட்டுவதும் பறிப்பதும்
இனி இல்லை
காற்றைச் சலிப்பவர்களை
உயிர்ச்சத்துக்களை
உணவாய்க் கொடுப்பவர்களை...
கண்களையும்
மனத்தையும்
வண்ணச்சிரிப்பால்
கட்டிப்போட்டவர்களை...
மணம் தயாரிக்கும்
மகோன்னதமானவர்களை...
இலைகளால்
நிழல் நெசவு
நெய்பவர்களை...
இனிமேலும் நான்
காயப்படுத்தமாட்டேன்.
- பதிவுகள் செப்டம்பர் 2004; இதழ் 57
தநுசு (ஜப்பான்) கவிதைகள்!
1. 'கவிதை'ப்பூச்சி!
ஊரால் ஒதுக்கப்பட்ட அந்த பூங்காவின்
உயர்ந்த மரங்களினூடே
நீளமாய் போடப்பட்ட மரபெஞ்சில்
ஆசுவாசமாய் ஒரு காலை நீட்டி
அணுசரனையாய் மறு காலை மடக்கி
ஒய்யாரமாய் சாய்ந்து உட்கார்ந்து
கைகளை கோர்த்து பிடரியில் சேர்த்து
உடம்பை வளைத்து நெட்டி முறித்து
கண்களை மூடி லயித்த நிலையில்
சில்லென்று வருடிச் செல்லும் காற்றிலும்
எங்கும் ஏகாந்தமாய் நிறைந்த நிசப்தத்திற்கு
இசை கூட்டி தன் துணையை எனக்கு உணர்த்தும்
மரங்களின் சலசலப்பிலும் என்னை கரைக்கையிலே
என்னுள்ளே ஏராளமாய் எழும் கவிதைகள்,
எழுத்தாய் வடிக்க நினைக்கையில்
எங்கோ சென்று மறைகின்றன;
கண் முன்னே வர்ணஜாலம் காட்டி கவர்ந்திழுத்து,
நாம் கவர்ந்திட நினைக்கையில் 'டாடா' காட்டி
மறையும் பட்டாம்பூச்சியை போல.
- பதிவுகள் ஜூன் 2006; இதழ் 78.
2. நகர்வலம்
கடந்த சில வருடங்களாய்...
அலுவலக சுவர்களுக்குள்
அடங்கிப் போனதாய் வாழ்க்கை !
காலநேரம் பாராமல்
கணினிகளுடன் நடத்திய போராட்டத்தில்
காணாமற்போன மனித சந்திப்புகள் !
அன்றாடம் பார்த்து சலித்துப் போன
அதே முகங்கள்;
அக்கம் பக்கத்து நாற்காலிகளில் !
மூளையின் கற்பனை ஊற்று வற்றி
காய்ந்து போனதாய் ஓர் உணர்வு !
புதிய தோண்டுதலில்தானே ஊற்று !
புதிய சந்திப்புகளில்தானே புது எண்ணங்கள் !!
புதிய எண்ணங்கள்தானே கற்பனை !!!
அவசர ஓட்டங்களில்
அவதானிக்கத் தவறிய
அழகின் சிரிப்புகள் !
சமுதாய நீரோட்டத்தில் கலக்காது
கிணற்றுத் தவளையாய் ஒரு நெடிய பயணம்;
கிணற்றுக்குள்ளேயே !
பணப்பை கனத்தும் கனம் குறையா
மனப்பைகள் !
புதிய முகங்களின் தேடலில் ஒரு முயற்சியாய்
புத்தனாய் கிளம்பிவிட்டேன் நகர்வலம்...
ஆ ! அத்தனையும் புதிய முகங்கள் !!
சிறியதும் பெரியதுமாய்
நெட்டையும் குட்டையுமாய்
எத்தனை கோடி உருவங்கள்
இறைவனின் படைப்பில் !
ஒவ்வொரு நடையிலும் ஒவ்வொரு வேகம்
வெவ்வேறு தேடலுடன் !
நீண்ட வரிசைகளில் நெடுநேர காத்திருப்பு
ஒருமித்த தேடலுடன் !
நெடுநாளுக்குப் பின்னான சந்திப்பில்
நெகிழ்ந்து போன நட்புகளின் குசலம்விசாரிப்புகள்
நீண்ட தழுவலுடன் !
ஆண்-பெண் இரட்டையர்களின் சல்லாப
அணிவகுப்புகள்; புதிய கைப்பைகளுடன் !
தாயின் கையைப் பற்றி இழுத்து
தவழ்ந்தோடும் மழலைகள் !
தனயனை சாலையின் மறுபக்கத்தில்
தவறவிட்ட தவிப்புடன் தாய் !
தனிமையின் இறுக்கத்தில் சில முகங்கள் !
தனியராய் தப்பிவிட்ட மகிழ்ச்சியில் பல !
இப்படி -
வருவதும் போவதுமான
வண்ண வண்ண மேகங்கள்
கண்களில் கருவாகி
மனதுக்குள் மழையை பெய்து
வேகமாய் விலகிச் செல்கின்றன;
ஈரம் சொட்டும் இதயத்தை தாங்கி
தளர்வாய் நடை கட்டுகின்றன என் கால்கள்;
மீண்டும் கணினிகளை நோக்கி.
- பதிவுகள் செப்டம்பர் 2006; இதழ் 81.
காணாமல் போனவைகள்!
- சைலஜா -
கைவளை ஒன்று
காணாமல் போனது
கட்டிலுக்கடியில்
தேடும்போது
கணவன் என்னை
காலால் எட்டி
உதைத்தது
நினைவிற்கு வருகிறது
மர அலமாரியில்
விரல்விட்டுத்
துழாவும்போது
தரதரவென்று
தலைமுடிபற்றி
தெருவிற்கென்னை
தள்ளிவிட்டது
நினைவிற்கு வருகிறது
தலையணைக்கடியில்
தவிப்புடன் தடவித்
தேடும்போது
விலைமகள் என்றென்னை
வாய்கூசாதுரைத்தது
நினைவிற்கு வருகிறது
கதவிடுக்கில்
கண்ணை செலுத்தி
கண்டுபிடிக்க
முனைந்தபோது
இதயமே இல்லாது
ஈனத்தனமாய்
பேசியதெல்லாம்
நினைவிற்குவருகிறது
காணாமல் போன என்
பொருட்களையெல்லாம்
தேடும்போதுதான்
உணரமுடிகிறது
காணமல் போனது
பொருட்கள்
மட்டுமல்ல என்று
- பதிவுகள் டிசம்பர் 2004; இதழ் 60.
தமிழ்மணவாளன் கவிதைகள்!
1. மரபின் வேர்கள்!
குடித்து முடித்த தேநீர் கோப்பையை
உதட்டில் பொருத்தி
உறிங்கிப் பார்க்கும் கடைசி மிரடுக்காய்
நிகழ்த்தும் அந்ச்சையென
இணக்கத்தோடு பிரிந்து செல்கிறது.
திடீரென பெருக்கெடுத்தோடும்
நீர்ச்சுளிப்பின்
வேகத்தில் நிலை குலைந்து
அடித்துச் செல்லப் படுகிறததனோடு.
காலத்தின் நீட்சியில்
கண்ணெதிரிலேயே மாற்றமுறும்
வண்ணங்களும் வடிவங்களும்.
எச்சரிக்கையாய் கண்காணித்துக்
கொண்டிருப்பதாய்
எண்ணிக்கொண்டிருக்கும்போதே
காணாமலும் சிலவேளை களவும் கூட.
கவலையுடன் பேசிக்கொண்டிருந்தேன்
கடலோடு.
இரைச்சலில் இருந்து எந்த பதிலையும்
எற்கவியலவில்லை என்னால்.
காத்துக்கிடந்த நேரந்தன்னில்
நுரைப் பூவொன்று பாதம் வழிந்து
குமிழிகள் எழுத்தைக் கோர்த்தன
'சமுத்திரம் நடுவே மூழ்கி விடாது
பூத்துக் குலுங்கும் தோட்டம் போல
ஆழம் முழுதும் நீண்டு
ஊன்றி நிற்கும் மரபின் வேர்கள்.
2. மறுபக்கம்!
அறைந்து சாத்தப்பட்ட கதவில் தொங்கும்
பெரிய பூட்டின் கனம் தாளாது
நசுங்கிச் சிதையும்
சந்தித்தலின் மீதான ஆர்வம்
உரையாடலை நறுக்கிச் சிதைக்கும்
கூரிய மௌனத்தின்
நிராகரிப்பு.
மரண வீட்டின் இரவெனக்
மனசைக் கலவரப் படுத்தும்
பிரயோகித்த ஒற்றைச் சொல்லின் வீச்சு
அறிமுகமற்றவனைப் போல எதிரில்
கடந்து செல்லும்
ஒவ்வொரு முறையும் புதைக்கப்படும்
காலம் கடந்த உண்மைகள்
எனவேதான்
நினைத்த மாத்திரத்தில் சந்தோஷம் தந்த
ஞாபகங்களை மறப்பதொன்றே
பிரதானமாயிப்போது
காய்ந்த செடியைப்
பிடுங்கிய போது தான் தெரிந்தது
வேரின் ஆழமும்
காயாத ஈரமும்.
3. இயலாமை!
பொங்கிப் பிரகவித்து சிறுகுன்றென முன்னகர்ந்து
சோர்கிறது பேரலை
எதையோ சொல்ல நினைத்து
சொல்ல முடியாமல் போன கோபத்துடன்.
ராட்சச முயற்சியும் பலனின்றிப் போக
எழுந்த இயலாமையின்
இரைச்சலாய்
பிரமாண்டத்தின் செய்தியை
சேர்ப்பிக்கவியலாமல்
மார்பிலடித்தபடி மடிகிறது
சொல்வதற்கு தருணமும்
சொல்வதிலொரு லாவகமும்
மிகமுக்கியம்
வெகுநேரக் காத்திருப்புக்குப்பின்
திரும்ப எத்தனிக்கையில்
ஆற்றாமையில் சப்திப்பது தொடர்கிறது
சொல்லமுடியாமையின்
பெருஞ்சோகமும் இழப்பும்
எனக்குத்தான் தெரியும் உனக்கென்ன.
- பதிவுகள் ஜனவரி 2005; இதழ் 61.
கடற்கோள்!
- வ.ஐ.ச.ஜெயபாலன்-
எவரிடம் சொல்லி அழ தெய்வமே
ஏதிலி உறவுகள் ஈழக் கரையிலே
வேருடன் சாய்ந்தனரே
போருக்குத் தப்பியவர் - அங்கு
பொல்லாத வெள்ளப் பெருக்கில் பிழைத்தவர்
ஊருடன் போயினரே
உன்மத்தம் கொண்ட பேய் அலை வாயினில்
மீனவத் தோழர்களே - கிழக்கின்
மீன்பாடும் தேனக சகோதரரே
ஊனை உருக்குதையா நீங்கள்
உதவிக்கு எம்மை அழைத்த பெருங்குரல்
காற்றில் அலைகிறதோ - எங்கள்
கரங்களைத் தேடித் தேடித் தவித்தீரோ.
துன்பங்கள் யாதினிலும் - எங்கள்
துணையென வந்த தமிழகமே
என்ன கொடுமையடி - தாயே
இனிய குழந்தைகள் நீண்ட கரைதொறும்
சிந்திக் கிடந்தனரே
ப:.றுளி ஆற்றுடனே எங்கள்
பண்டைக் குமரியும் தின்ற கொடுங்கடலே
இன்னும் பிரளயமோ - விதியே
எங்களை என் செய்ய நினைத்தாயோ
- பதிவுகள் ஜனவரி 2005; இதழ் 61.