[பதிவுகள் இதழில் ஏற்கனவே வெளிவந்த படைப்புகள் அவ்வப்போது ஒருங்குறி எழுத்துருவில் மீள் பிரசுரம் செய்யப்படுகின்றன. அந்த வகையில் பதிவுகளின் ஆரம்பகால இதழ்களில் வெளிவந்த கவிதைகளை இம்முறை மீள்பிரசுரம் செய்கின்றோம். பதிவுகள் தனது கடந்த காலத்தில் தமிழ் இலக்கியத்திற்கு, குறிப்பாகக் கணித்தமிழ் இலக்கிய உலகிற்கு ஆற்றிய வளமான பங்களிப்பினை இவ்வித மீள்பிரசுரங்கள் புலப்படுத்துவதால், அன்றைய கணித்தமிழின் ஆரம்ப காலத்தில் உலகின் பல்வேறு பாகங்களிலிருந்தும் தமிழ்ப் படைப்பாளிகள் எவ்வளவு ஆர்வத்துடன் பதிவுகள் இதழுடனிணைந்து தங்கள் பங்களிப்பினை நல்கினார்களென்பதையும் இவ்வகையான மீள்பிரசுரங்கள் புலப்படுத்துவதால் இவை முக்கியத்துவம் பெறுகின்றன; இவற்றை மீள் பதிவு செய்ய வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்துகின்றன. இன்று கணினிகளில் ஒருங்குறி எழுத்துருவில் மிகவும் இலகுவாகத் தமிழ் ஆக்கங்களை வாசிக்க முடிகிறது. ஆனால், அன்றைய காலகட்டத்து நிலை வேறு. இணைய இதழ்கள் பாவிக்கும் எழுத்துருவை அவற்றை வாசிக்கும் ஒவ்வொருவரும் தத்தமது கணினிகளில் நிறுவிக்கொள்ள வேண்டும். இத்தகைய தடைகளையெல்லாம் மீறி வாசகர்களும், படைப்பாளிகளும் ஒருங்கிணைந்து படித்தல் (வாசித்தல்) , படைத்தல் (எழுதுதல்) ஆகியவற்றை ஆற்றுவது கணித்தமிழ் உலகிற்கு மிகவும் முக்கியம். அந்த வகையில் 'பதிவுகள்' கணித் தமிழ் இலக்கிய உலகிற்குத் தன் பங்களிப்பினை நல்ல முறையில் ஆற்றியிருக்கிறது; ஆற்றிவருகிறது. அதனையிட்டு நாம் பெருமையுறுகின்றோம். - பதிவுகள் ]
ஒரு கிறிஸ்தவனின் விண்ணப்பம் !
-சுகன் -
எங்கள் பரமபிதாவே!
சீதனத்தில் பாதித்தொகை
ஏஜென்சிக்குப் போய்விட்டது.
அரைவருடச் சம்பளத்தின் மிச்சம்
சீட்டுக் கழிவுக்குப் போய்விட்டது.
ஒரு மாதச் சம்பளம்
இயக்கத்திற்குப் போன பின்
எனக்கென்று
ஆணிச் செருப்புக்கூட வாங்க முடியாதிருப்பதேன்?
உயிர்த்தெழுந்த யேசுவே!
வேலைக்குப் போகும் போது
தூக்கத்தில்
அருகில் இருக்கும் பெண்ணின் மேல்சாய
அவள் சிரிக்க
பதிலுக்குக் கூடச் சிரிக்க முடியாது
வேலை என்னைத் துரத்துகிறது.
எனது ஆண்டவரே!
விடியலிற்குச் சற்றுமுன் தூங்குகிறேன்
காலை எழுந்து ஓடுகிறேன்.
மிகச் சிறந்த மேய்ப்பரே!
உம்மிடம் இறைஞ்சிக் கேட்கிறேன்
எனது தேசத்தில்
என்ன நடக்கிறது?
இந்த நற்செய்தியை மட்டும்
சொல்லியருளும்
ஆமென்!!!
- பதிவுகள் மார்ச் 2003; இதழ் 39
ஞாபகங்கள்
- நாகரத்தினம் கிருஷ்ணா (பிரான்ஸ்) -
வாழ்வியல் கவித்துவத்தில்
குயிற்பாட்டாய் ஞாபகங்கள்
இளவேனிற்காலத்து
இலைநீர்முத்தென
காற்றில் கலந்து மனத்தை விசிறிடும்!
பசித்த வாழ்க்கையில்
பழையமுது!
நினைவுப் பதிப்பில்
பிழை திருத்தப்படாமல்
பிரசுரமாவதில்
வருத்தமென்றில்லை.
சுட்டதும் சுடாததும்
ஞாபகத்திற்குமுண்டு
சுட்டது
அந்தரங்கமானது;
சுடாதது
அவைக்களிப்பது!
ஒருமழைநாளில்
எனக்காக அம்மா
இரவெலாம் அலைந்து
நாய்க்குட்டி நண்பனைத்
தேடித் துவட்டித்
திண்ணையில் விட்டதாய்
ஞாபகம்....
இப்போதும் எனக்குள்
நாய்க்குட்டிகளுண்டு.
அம்மா..?
- பதிவுகள் பெப்ருவரி 2003; இதழ் 38.
சந்திரவதனா செல்வகுமாரன் கவிதைகள்!
1. மனசு!
சூனிய வெளிக்குள்.......
மனசு சூனிய வெளிக்குள்
சிக்கித் தவிக்கிறது.
உன்னவள்
உன் அஸ்தியை
ஊருக்கு அனுப்புவது பற்றிப் பேசினாள்.
அவள் புண்ணியவாட்டி.
உன் அருகிருந்து
தன் கடன் முடித்து விட்டாள்.
நான்
எதுவுமே செய்யாதிருந்து விட்டு
இப்போ..........
சூனிய வெளிக்குள் நின்று
சுற்றிச் சுழல்கிறேன்.
உயிர் போன பின்னும்
நீ அருகிருக்கிறாய் என்பதில்
வலி தெரியாதிருந்தது.
சிதையேறிய போதுதான்
நீ இனியில்லை என்ற நினைப்பில்
மனசு பதை பதைக்கிறது.
நாடொன்றுதானே
நன்றாக உறவாடியிருப்பேன் என்று
ஊரவர்கள் நினைப்பார்கள்.
யாருக்கும் நான் ஏதும் சொல்லவில்லை.
போரென்று வந்து புலம் பெயர்ந்த பின்
வேர்களும் விழுதுகளும் வெகு தூரமாகி.......
போனதை நினைத்துப்
புலம்புவதுதானே வாழ்வாகிப் போச்சு
நாமெல்லோரும்
- நேரமில்லை - யென்றும்
- தூரமாகிப் போச்சு - என்றும்
இயலாமைகளுக்குப் போர்வை போர்த்திப்
பழகி விட்டோம்.
இத்தனை வருடங்களில்
எத்தனை தரம் சந்தித்திருப்போம்.
மின்னஞ்சலும்
தொலைபேசியும் இல்லையென்றால்
தொடர்பாடல் என்றைக்கோ
அறுந்து போயிருக்கும்
எமது ஓரிரு சந்திப்பின் போதான
உறவு முறை சொல்லி அழைக்கும்
உன் இதமான சிரிப்பு மட்டுந்தான்
என்னோடு நின்றிருக்கும்.
நான் அழவில்லை.
மனசுதான் அலைகின்றது
இல்லாத உன்னோடு கை கோர்த்து
உல்லாச உலா வருகின்றது
நீ இல்லை என்பது
உறைக்கும் சமயங்களில்
மல்லாக்காய் வீழ்கின்றது.
- பதிவுகள் செப்டம்பர் 2003; இதழ் 45.
2. புயலடித்துச் சாய்ந்த மரம்
காற்றே!
உனக்கும் இரண்டு முகமா........?
தென்றல் என்றுதானே
என்னைத் தந்தேன்
இளமையின மதாளிப்புடன் நான்
பசுமையாய் செழித்திருக்கையில்
அல்லும் பகலும்
தழுவலும் வருடலுமாய்
அருகிருந்து
என் இளமையைச் சுகித்து விட்டு
எனதிந்த தள்ளாத வயதில்
உன் சுயத்தைக் காட்டி விட்டாயே!
கனிதரும் காலம் போய்விட்டாலும்
நீ களைப்பாக வரும்போதெல்லாம்
இளைப்பாற இடம் தந்திருப்பேனே!
வேரோடு சாய்த்து விட்டாயே!
வீழ்ந்ததில் வேதனை இல்லை
உன் நியமான
புயல்முகம் கண்டதில்தான்
பலமான அதிர்ச்சி.
வேரறுந்ததில் சோகமில்லை
நீயறுத்தாயே
அதைத்தான் ஏற்காமல்
மனதுக்குள் வெகுட்சி.
- பதிவுகள் அக்டோபர் 2003; இதழ் 46.
காணாமல் போனவைகள்!
- சைலஜா -
கைவளை ஒன்று
காணாமல் போனது
கட்டிலுக்கடியில்
தேடும்போது
கணவன் என்னை
காலால் எட்டி
உதைத்தது
நினைவிற்கு வருகிறது
மர அலமாரியில்
விரல்விட்டுத்
துழாவும்போது
தரதரவென்று
தலைமுடிபற்றி
தெருவிற்கென்னை
தள்ளிவிட்டது
நினைவிற்கு வருகிறது
தலையணைக்கடியில்
தவிப்புடன் தடவித்
தேடும்போது
விலைமகள் என்றென்னை
வாய்கூசாதுரைத்தது
நினைவிற்கு வருகிறது
கதவிடுக்கில்
கண்ணை செலுத்தி
கண்டுபிடிக்க
முனைந்தபோது
இதயமே இல்லாது
ஈனத்தனமாய்
பேசியதெல்லாம்
நினைவிற்குவருகிறது
காணாமல் போன என்
பொருட்களையெல்லாம்
தேடும்போதுதான்
உணரமுடிகிறது
காணமல் போனது
பொருட்கள்
மட்டுமல்ல என்று
- பதிவுகள் டிசம்பர் 2004; இதழ் 60.
ஏன் இந்த அவலம்?
- றஞ்சினி -
யாரும் நினைக்காத ராட்சத அலைகளால் இழந்து
நிக்கிறோம் எம் அன்பு உறவுகளை
குழந்தைகள் பெண்கள் முதியோர் ஆண்களென
பல்லாயிரக் கணக்கில் .
இந்து சமுத்திர திவுகளெங்கும் மனித இறப்பின் அவலம் தொடர்கிறது
ஆபிரிக்காவையும் விட்டுவிடவில்லை.
இது என்ன கொடுமை மிருகங்கள் போல
மனித உடல்கள் அநாதைகளாக வளிகள்தோறும்
பல்லாயிரக் கணக்கில் அள்ளி அடுத்து புதைக்கும் நிலை
கொடுமை
போரினால் இழந்தோம் பல்லாயிரக் கணக்கில்
அதையும் தாண்டி இயற்க்கையிடம் சிக்கி இறந்த உறவுகள் .
யாரை நோவது யாரிடம் உரைப்பது
இயற்க்கையே உனக்கு ஏன் இந்த சீற்றம்
மனிதர்கள் உன்னை அழிப்பதலா மனிதர்கள் உன்னை வதைப்பதனாலா
உன்னை பரிசித்து வல்லரசுகள்,
தம்மை பலம் செய்வதனாலா
ஏழை மக்களின் உயிரை ஏன் பதிலாக கொண்டாய்
இயற்கையை அன்னையின் சீற்றக்கணக்கில் இன்னும் எத்தனை அழிவுகள் உளதோ
இனியேனும் உன்னை உனது சீற்றத்தை மனிதர்கள் புரிந்து கொள்வார்களா
- பதிவுகள் ஜனவரி 2005; இதழ் 61.
வைகைச் செல்வி கவிதைகள்!
1. உள்ளே ஒரு வானவில்!
தாழ் திறக்கும் என்றால்தான்
காத்திருத்தல் சுகம்.
இல்லையெனில்
மரண அவஸ்தை
கால மயக்கத்தில்
கண் விழித்துப் பார்க்கையில்
பகலா
இரவா
ஏதும் புரியவில்லை.
பகலுமின்றி
இரவுமின்றி
அந்திப் பொழுதாய் இருந்தாலும்
சில்லென்ற குளிர்காற்றும்
சிங்காரப் பூமணமும்
உன் முத்தம் தந்திடுமோ?
பகலென்று தெரிந்தால்
சிறகுகளை விரிக்கலாம்.
இரவென்று தெரிந்தால்
கூட்டிற்குள் ஒடுங்கலாம்.
தாழ் திறக்காவிட்டாலும்
இந்த மரண அவஸ்தை
- பதிவுகள் மார்ச் 2005; இதழ் 63.
2. அம்மி!
வேகமாய்த் திரும்புகையில்
இன்றும் காலில் இடறிற்று
கருங்கல் அம்மி.
'அரைக்கவும் ஆட்டவும்
என்னென்னவோ இருக்க
எடத்தை அடைச்சிட்டு
ஏன்தான் இருக்குதோ?'
இப்படி-
அன்றாடம் மாமியார்
கண்டனம் தெரிவித்தும்
ஆசை அம்மியை
அறுத்தெறிய மனசில்லை.
அம்மா வீட்டில் இது
சும்மாவா இருந்தது?
வெள்ளைத் தேங்காயும்
கறுப்பு மிளகும் .....
பச்சை மிளகாயும்
சிவப்பு வற்றலுமாய் .....
தாள லயத்தோடு
அம்மா அரைக்கையிலே
ஆத்துக்கு அக்கரையில்
அழகருக்கும் வாயூறும்.
இன்றோ-
அவசர உலகத்தில்
அடுக்கு மாடிக் குடியிருப்பில்
பதுங்கிக் கிடப்பதற்கு
முற்றமோ?... புதுக்கடையோ ?
ஒதுங்கிக் கிடப்பதற்கு
திண்ணையோ இல்லாமல்
கவனிக்க ஆளின்றிக்
காய்ந்திருக்கும் வெறுங்கல்லாய்
வயோதிகம் போல் அம்மியும்.
ஆயினும் ஓர்நாள்-
மழைநாள் இரவில்
மின்சாரம் தடைபட்டுச்
சிம்னி கதகதப்பில்
ராச்சோறு சுவைப்பதற்காய்
பருப்புத் துவையலதைக்
கை வலிக்க அரைக்கையிலே
வீடெல்லாம் மணந்தது
அம்மாவின் வாசனையில்.......!
- பதிவுகள் மே 2005; இதழ் 65.
3. உயிரினினும் இந்தப் பெண்மை இனிதோ?
என் தாயே!
நீ மாதவம் செய்திருக்கத் தேவையில்லை.
அங்கே மாமரத்தின் கீழே
என் வயதுப் பையன்கள்
நட்சத்திரங்களுடன் பேசுகையில்
இங்கே நானோ,
சிம்னி வெளிச்சத்தில்
அரிசியிலே கல் பொறுக்குகிறேன்
உலை காய்ந்து கொண்டிருக்கிறது.
அந்தக் கூட்டத்தில்,
என் பிரிய நண்பன் இருக்கிறான்.
பகற் பொழுதினிலேயே
அவனுடன் நான் அமர இயலவில்லையே?
இவ்விரவில்...?
அவன் ஒரு ஆண்
நான் ஒரு பெண்ணாம்.
என் மனத்தின் ஆண்மை யாருக்குப் புரியும்?
நேற்று ஒருவன் பாரதியைக் காதலித்தான்
இன்று நான் காதலிக்கிறேன்.
அவனுக்குப் பெயா பாரதிதாசன்.
தாசனுக்குப் பெண்பால் எனில்
தமிழே என்பால் கல்லெறியும்.
ஆதாமுக்குப் பிறகு ஆண்சாதியும் இல்லை.
ஏவாளுக்குப் பிறகு பெண்சாதியும் இல்லை.
இது இங்கே
யாருக்குப் புரியும்?
- பதிவுகள் மே 2005; இதழ் 65.
4. மெல்லச் சாகுமோ மலைக்காடுகளும்?
அடர் மரங்களின்
அணைப்பிற்காய்க்
கீழிறங்கிய மேகக் கூட்டம்
யூகலிப்டசைக் கண்டு
சோர்வுடன் கலையும்.
செதுக்கிய கேசமாய்
அடுக்கடுக்காய்ச் செழித்த
ஏலக்காய் வாசந்தான்
இழுக்குமோ மேகத்தை?
வீடுகளைக் கட்டக்
கூடுகள் பிரிக்கப்படும்.
கூட்டத்தை உச்சிக்கும்
மரங்களைக் கீழேயும்
கடத்தும் வாகனங்கள்-
பூச்சிகள் நகரும்
இலைப் பிரதேசத்தில்
புழுதி கிளப்பி ஓசையிட-
துள்ளிக் குதிக்கும் விலங்கினங்கள்
பள்ளி கொள்ள வழியேது?
இப்படித்தான்
இலையாய் மரமாய்
மலைகளைப் போர்த்திய
காடுகள் மறைவது தெரிகிறதா?
உடுக்கை இழந்தும் 'மானத்தோடு'
மனிதன் வாழ்வது புரிகிறதா?
கூட்டை இழந்த பறவையோலம்
சாட்டையடி போல் கேட்கிறதா?
இங்கே
கருவில் பெண்ணை அழிப்போர்க்குக்
காட்டை அழித்தல் பெரிதாமோ?
- பதிவுகள் ஜூலை 2005; இதழ் 67.
5. காட்டு வெளியினிலே. . . .
அன்று நீ
கவிஞன் ராபர்ட் ·பிராஸ்ட்டைப் போலத்
தயங்கி நிற்கவில்லை.
என்னையும்
அந்த அடாந்த காட்டிற்குள்
அழைத்துச் சென்றாய்.
ஒரு மான்குட்டியைப் போல நான்
அங்குமிங்கும் துள்ளியோடினேன்.
மண் வாசனையை முகர்ந்தேன்.
ஒவ்வொரு இலையாய்த் தொட்டேன்.
எல்லா மரங்களும்
நம்மைச் சுற்றி நிற்கையில்
நான் உன்னைச் சுவாசித்தேன்.
அப்போது நீ கவிதை சொன்னாய்:
' மரம் தனது கைகளை உயர்த்தி
வானில் எழுத ஓயாமல் போராடுகிறது.
ஆனால் பூமியோ விடுதலை தருவதில்லை '
பிறகு என்னைப் பிரிந்து
உன் வீட்டுத் தோட்டத்திற்கு
நீ சென்றாய்.
அங்கே உனக்கு வசந்தம் காத்திருந்தது.
நான் அந்தக் காட்டினை
மனத்தில் சுமந்தவளாய்த் தனியாகத்
திரும்பினேன்.
இங்கோ எப்போதும்
இலையுதிர் காலம்தான்.
மரங்கள்-
இலைகளை
என் கண்களின் வழியே
உதிர்த்துப் போட்டன.
மனதைக் குத்தினாலும்
அந்த மொட்டை மரங்களைச்
சந்தனக் கட்டைகளாகச் சுமந்தேன்.
இதோ-
இப்போதோ-
தாழ்வாரத் து¡ணில் சாய்ந்திருக்கிறேன்.
சற்றுத் தொலைவில்
என் தாய் வயிற்றுக் குழந்தைகளின்
பேரப் பிள்ளைகள்
விளையாடிக் கொண்டிருக்கின்றன.
எங்கிருந்தோ காற்றில்
வேப்பமர இலையொன்று
என்மீது விழுகிறது.
அதைச் சிரமப்பட்டுக்
கையிலெடுத்துப் பார்க்கையில்
மனம் மீண்டும்
மான் குட்டியாய்த் துள்ளிட....
என் கவிஞனே!
அன்று நீ
அந்தக் காட்டிற்குள் என்னை
அழைத்துச் சென்றிருக்காவிட்டால்
இன்று என் மனசும் அல்லவா
கன்னியாக வாழ்ந்து கொண்டிருக்கும்?
- பதிவுகள் அக்டோபர் 2005. இதழ் 70
ஒரு கவிதாமரத்தின் இறப்பு!
- சாரங்கா தயாநந்தன் -
தலையணைகளைச் சரிப்படுத்துகிற
வழமையான ஒரு காலைப் பகலில்
கிளைத்திருந்த துளிர்கள்
யாவையும் தொலைத்திருக்கும்
கவிதாமரம் மனசிடறிற்று.
மஞ்சளாகி
மூத்துதிரா அதன் திடீர் மரணம்
உன்னால்
என் மோதிரவிரலில் ஏற்றப்பட்டிருந்த
பொன்விலங்கினால் நிகழ்ந்தது.
ஒரு அழகிய நதி
குதியல் தொலைத்து
குளமாகிய
அதே கணத்தில் இருந்து தான்
என் கழுத்தில் ஆடுகிறது
உன்னால் இடப்பட்ட மூன்று முடிச்சு.
யாருமருகற்ற பொழுதுகளில்
நினைவுகள் குலுங்கிச்
சரிகின்றன,
நீலவானில் வெடித்துதிருகிற
நட்சத்திரவால்களின் துரதிஷ்டத்தோடு...
கனவுகளின் மீதேறியிருந்த
வானவில் துகில்
வர்ணம் தொலைத்துள்ளதில்
கனவுகளும்
மீத வெற்று நனவுகளோடு
சேர்ந்துருள்கின்றன
இருளில் பிணைதலுற்ற
இரு பாம்புகளாய்.
எனினும்.....
முன்பொருநாளில்
மனசு தேங்கிய
பச்சிலைகளின் வாசத்தில் மயங்கி
விழிமூடிக் கிடக்கிறேன்
வாயில் மணி
உன்
விரல் தொட்டு
அழும் வரைக்கும்......
- பதிவுகள் அக்டோபர் 2005; இதழ் 70.
துயரின் தொடக்கம்
த.அகிலன்
எப்போதும்
ஏதேனுமொரு
புன்னகையிலிருந்தே
ஆரம்பிக்கிறது துயரம்
ஒரு
புன்னகையில் இருந்து
மற்றுமோர்
புன்னகைக்கு
வழிநெடுக
புன்னகைகளை
வாரியணைத்தபடியும்
ஒவ்வோர்
புன்னகையின்
முகத்திலும்
தன்னை
அறைந்தபடியும்
பயணிக்கிறது
துயரம்
அது தன்
தீராக்காதலோடு
தொடர்ந்தும் இயங்கும்
இன்னொரு
புன்னகையைநோக்கி
- பதிவுகள் அக்டோபர் 2005; இதழ் 7
சுப்ரபாரதிமணியன் கவிதைகள்!
1.
துர்வாடை எங்குமாயிருந்தது
பீடிப்புகையின் கமறல் யாருக்குமில்லை
எல்லோருக்கும் பழக்கமாகி விட்டது.
விளித்த புன்னகைகள் கூட விசமாயின
உதடுகள் துதித்த நாமங்கள்
சுவர்களில் மோதி அலையுண்டு
தற்கொலை செய்து கொண்டன.
கழிவறைக்குழாயிலிருந்து வந்தவர்கள்
காட்சிகளை மாற்றினர்.
எத்தனை தரம் மாற்றினாலும் அதே காட்சிகள்
கறுத்த சாக்கடையில் நடக்கிறவர்கள் கூட
நாற்றத்தின் உணர்வின்றி இருந்தார்கள்
காதில் விம்மும் குரல்கள்
ஒரு நிமிடம் திடுக்கிடச் செய்தன.
காமம் கவிழ்ந்த உடம்புகளின்
பரபரப்பு சீக்கிரம் தணிந்து விட்டது
வெளவால்களின் இருப்பிடத்தில்
முட்டி மோதியது ஆன்மாவும்.
நானே நானாக யிருக்கிறேன் என்றார்கள்
" நிச்சய நிலையென்று பரம் பொருள் நானென்று "
சூட்சுமம் கண்டவர்கள் போல்
எதைஎதையோ சொல்லிக்கொண்டார்கள்
இருக்கிறவனுக்கு கமறலும்
இல்லதவர்களுக்கு கொட்டாவியும் என்று
2
என் வாசல் முற்றம்
மலையை வேடிக்கை பார்க்கவென்று
தோதான இடமல்ல
ஆனாலும் அங்கு நின்று
வேடிக்கை பார்ப்பது உவப்பானது
மூன்று பக்கங்களூம்
சுவரால் அடைபட்டதுதான்
உட்கார்ந்து ஆசுவாசப்படுத்தி கொள்ள
பழய காலத்து திண்ணை வடிவ
சிமண்ட் திண்டுகள் உண்டு.
அதில் உட்கார்ந்து பார்த்தால்
காம்பவுண்டு சுவர் எல்லாவற்றையும் அடைத்துப் போகும்
முற்றம் தாண்டின தூரத்துப் பார்வையில்
தூரத்து மலைகள்.
இரவுகளில் தெரியும் வெளிச்சம்
மின்சார விளக்கா
காட்டுத்தீயா
என்ற யூகங்களுக்கு அடங்காது
முற்றத்து மலை வழியே
காட்டுத்தீ/ மின்சார வெளிச்சம்.
நாற்பது வயதைக் கடந்தவனின்
சாளேஸ்வரப் பார்வை போல்.
என் தேகத்து காமத்தீ போல்
மலை வழியேயும் தீ
வெறுமையை நினைவூட்டியபடி.
காமத்தை சீண்டியவாறு.
- பதிவுகள் அக்டோபர் 2005; இதழ் 70.
அந்த நிலவொளியில்!
- நளாயினி தாமரைச்செல்வன் (சுவிற்சலாந்து) -
வெறும் சின்னச் சின்னதான
ஆசைகள் தான்.
பட்டாம் பூச்சி சிறகில்
ஒட்டிய வர்ணங்களாய்.
இலையுதிர்த்து
உறைபனியில்
வாழும் மரங்கள்
போலத்தான் நாமும்.
சூ¡¢யன் காலத்தக்காய்
இலை தளைகளை
உயிர்ப்பிக்க.
எத்தனையோ
வெய்யில் காலம்
வந்து போனபடி
ஆனாலும்
நாம் இன்னும்
இலையுதிர்த்து
உறைபனியில்
வாழும் மரங்கள் தான்.
அதன் வேர்கள்
இந்தப் பனிப்பூமியில்
எப்படி ஆழமாய்
வேரூன்றி உள்ளதோ
அப்படித்தான் இன்னமும்
ஆனால் இலையேதும்
உதிர்க்காமல்
சருகு கூட ஆகாமல்
தாயகத்து நினைவுகள்
அப்படியே பசுமையாய்.
பிரமை பிடித்திருப்பவர்களை
பைத்தியங்களை
எங்காவது கண்டிருக்கிறிர்களா?!
அது நாம் தான்.
இத்தனை துன்பத்துள்ளும்
செத்து துலைக்காமல்
எத்தனை ஏக்கங்களை
இதயத்தின் விழிம்புவரை
சேர்த்தாகி விட்டது.
உங்களின் உணர்வுகளின்
உச்சத்தை எப்படி எங்களால்
புரிய முடியவில்லையோ
எங்களின் உணர்வுகளையும்
உங்களால் புரிந்திட முடியாது தான்.
படியால் விழுந்த போது
வலியை கண் மூடி
பற்களுக்குள்ளும்
உள்ளங் கைகளுக்கள்ளும்
மறைத்து விட்டு
ஓசையின்றி
கடவுச் சிட்டின்றி
விசா இன்றி
விமானமின்றி
முழங்காலால் வடியும்
இரத்தத்தை பார்த்தபடி
என் முற்றத்து
நினைவோடு
எத்தனை மணித்தியாலம்.
பிரசவ காலத்தில்
பெட்டி மீன் காரனின்
கூனிறால் நினைவோடு
வெறும் சோத்தை எத்தனை நாள்
திண்டிருப்பம்.
பிள்ளை பிறந்து
பத்து வயசாச்சு
கதிர்காமத்தான் மாவிளக்கு
கடிதத்திலை இன்னும் வரேலை.
முதலாளி சீறி விழுந்ததுக்கு
கையை வெட்டி எமக்கு நாமே
தண்டனை கொடுத்து
கோபத்தை அடக்கியதும்.
ஐய்யோ வேண்டாம்
இதயத்து சுவர்களில்
இரத்த நாளங்களில்
உணர்வுகளில்
தினம் தினம் அறைகின்ற
எம் ஓல ஒலி
எவர் காதிலும் விழவே
கூடாது.
ஒத்தடம் தருவதாய்
ஓராயிரம் கை நீளும்
அத்தனை கனவுகளும்
அழிந்தேதொலைந்து போகும்.
அவை என்ன அங்கை
நல்லாத்தான் வாழுகினம்.
அப்படியே இருக்கட்டும்.
இத்தனையும் கேட்டுவிட்டு
உங்களுக்குள்
ஓர் வெறுப்புணர்வு எம்மீது.
பட்டுடல் தனை ஈய்ந்தோர்
கடலிலே சங்கமித்தோர்
தந்தை தாய் அற்று நிற்ப்;போர்
பிள்ளைகளை தொலைத்து நிற்ப்;போர்
அண்ணன் கை வீரம் சொல்வோர்
அரண் அமைத்தே சுவர்க்கம் போனோர்
இவர்கள் பற்றி எந்த வரியும் இல்லை.
நான் நினைப்பது சா¢தானே.
இத்தனையும் கேட்டுவிட்டு
உங்களுக்குள்
ஓர் வெறுப்புணர்வு எம்மீது.
அப்படிப்பாக்க வேண்டாம்.
ஐயோ கடவுளே!
இத்தனை துன்பத்துள்ளும்
செத்துத் தொலைக்காமல்
வாழுறது
இவர்களை நினைத்துத்தான்.
சொல்லித்தான் வளக்கிறம்.
தாய் நிலம் பிரிக்கேக்கை
நான் செத்துப்போனாலும்
சிறுப்பிட்டி முலையிலை
குடிசை ஒண்டு போட
காணி ஒண்டு பிடிச்சிடுங்கோ.
விடுமுறைக்காவது வந்து
என்ரைபிள்ளை
எங்கடை நினைவோடை
கால் நீட்டி இருக்கட்டும்
அந்த நிலவொளியில்.
- பதிவுகள் ஜூலை 2004; இதழ் 55.
கானல்நீர் வேட்டை!
- பிச்சினிக்காடு இளங்கோ(சிங்கப்பூர்) -
ஆதியும் அற்ற
அந்த நாளிலிருந்து
அமீபாவாகி
அவதாரங்கள் எடுத்து
நீ
நாங்கள்
இணையா இடைவெளியானோம்
அந்தமும் அற்ற
அந்த நாள்வரை
அப்படியே...
எங்களுக்கிடையே
எத்தனையோ கோடுகள்
நிருவாணம் தொலைந்ததிலிருந்து
வர்ணங்களை அப்பிக்கொண்டோம்
வெற்றிடத்தை
இருளாள் நிரப்பிவிட்டோம்
மூல வயலில்
பார்த்தீனியங்களைப்
பயிர்செய்தோம்
ஒருமுறைகூட
நீ வெளிக்காட்டிக்கொள்ளாதவரை
கானல்நீர் வேட்டையில்
பற்றித்தான் எரிவோம்
வெடித்துத்தான் சிதறுவோம்
- பதிவுகள் மே 2004; இதழ் 53.
இயற்கையை காதலிக்காமல்!
- சத்தி சக்திதாசன் -
இலைகளின் பச்சை-யை புற்களின் மென்மையை
உணர முடியாத நீ
பூக்களின் இதழ்களிலுள்ள பஞ்சுத்தன்மையை
புரியமுடியாத நீ
மனிதத்தன்மையை மறந்தவனே !
செடிகளுடன் உரசும்போது அவைகளின் ஈரத்தன்மையை
இரகசியமாக அனுபவிக்கத் தெரியாமல்
இயற்கையை நீ எப்படி காதலிக்கலாம் ?
பரம்பரைக்கு
பணத்தைச் சேமிக்கும்
பைத்தியக்காரனே
இயற்கையை விற்று நீ வாங்கும் எதிர்காலம்
நாளையைத் தொலைத்து வந்த ஒரு வரவு என
அறியாத முட்டாள் நீ
அன்னையும் தந்தையும் தம்மை
மறந்த அரைவினாடி உன் பிறப்புக்கு
காரணத்தைக் கற்பித்தது
இயற்கையின் தோற்றத்தின் ஆதியும் அந்தமும் அறிவாயா ?
இப்போது இருக்கும்
இந்த ஒரு நிமிடத்தை
நேசி
பச்சைத் தாவரங்களின் பசுமையை
அதிசயி
வானத்தின் நீலத்தை
ஆச்சரி
இந்த ஒரு நிமிடம் கொடுத்த
அமைதியை
சுவாசி
இயற்கையைக் காதலிக்காமல் நீ இருந்தென்ன ? இறந்தென்ன ?
எத்தனை தோட்டங்களில் எத்தனை மலர்களை
அணைத்து வாங்கி வந்த வாசத்தை
இலவசமாய் அள்ளித் தெளிக்கும் தென்றலை
இதயத்தின் இடதுபுறத்தில் இன்றேனும்
அடைத்துவை
பக்கத்து வீட்டு தோட்டத்தில் கூடு கட்டி வாழும்
குருவியது
உன் வீட்டு முன்றலிலே ஓர் கானம் பாடியதை
உள்ளத்திலே ரசிக்கத் தெரியத உன்னால்
இயற்கையை எப்படிக் காதலிக்க முடியும் ?
தெய்வத்தை ஆராதித்து
தெரியாத வாழ்க்கையின் காலங்களை வரையறுக்கத் தவிக்கும்
இருட்டு மன்னனே!
இயற்கையைப் பதுகாத்து
இன்றே இறுக்கமாய்ப் இன்றைப் பொழுதைப்
பிடித்துக்கொள்
இயற்கையை என்று நீ காதலிக்கின்றாயோ அன்று நீ மனிதனாவாய்.
- பதிவுகள் மே 2004; இதழ் 53.
மனசை உடைத்தெறிய பத்துக்கும் மேற்பட்ட வழிகள்!
- மாலதி -
வேண்டியழை!விருப்பம் சொல்லாதே!
யாரோ இடம் பெற்ற கனவை விவரி
வலிக்கிறதா என்று பார்க்காதே!
பிறர் எவ்வளவு மகத்தானவர்
என்று பிரித்துப் பகர்
என் மகத்தை யாருக்குச்சொன்னாய்
என்று தெரிவிக்காதே!
எப்போதும் பிறருக்காக என்னை அழவை!
மண்டியிடவை!
நான் அழும்போது தொலைந்து போ!
காதல் சொல்லு!விவரம் சொல்லாதே!
எந்த நிலையிலும்.
சதா பேசு எழுது சிரி என்று வற்புறுத்து!
எந்தப் பதிலையும் ஞாபகம் கொள்ளாதே!
உருக்கங்களை மறந்து போ!
தகவலில் முரணை மட்டும் புனைந்து
மீட்டு தடியால் அடி!
உடம்பில் துவண்டு துடிக்க அனுபவி!
உடம்பில் புண்ணாக்கில்லை என்று தத்துவம் பேசு!
காதலிக்கிறேன் என்று சொல்லு தினமும்.
இல்லவே இல்லையாகி இயங்குநிமிடநிமிடமும்.
வாழ்க்கை விளிம்பின் எங்கிருந்தோ
ஆதிமூலமே! என விளிக்கும்போது
போர்வைக்குள் புரண்டு களித்துறங்கு!
மறுநாள் ஒன்றுமிருக்காது என்று
நீ அறிந்திருந்ததைச் சொல்லு.
என்றுமிருக்காத உன்னை
நான் அறிந்ததை மறந்து.
நேரமில்லை என்று சொல் உடன்
உண்ட போகங்களைப் பட்டியலிடு
சாவகாசமாய்.
கணங்களைக் கொண்டாடாதே!
மனத்தைப் பத்துக்கும் மேற்பட்ட
வழிகளால் சம்மட்டியால் அடி!
என் சவத்தைப் பார்க்க வராதே!
சிரமம் எதற்குஉனக்கு?
நான் தானே உன்னை நேசித்தேன்!
- பதிவுகள் ஜூன் 2004; இதழ் 54.
உள்வீட்டில் எல்லாமே உள்ளபடி....உள்ளபடி....
- சாந்தி ரமேஷ் வவுனியன் -
நெற்றிப்பொட்டு விட்டெறிந்து
நெடுங்காலம் ஆயிற்று.
கட்டிவந்த கூறைப்பட்டு
கழற்றி வைத்து ஆண்டாச்சு.
கழுத்திருந்த தாலி கழற்றிக்
கனகாலம் போயிற்று.
கனத்திருந்த அட்டியலும் ,
கைநிறைத்த பொன்வளையல் ,
காதுக்குத் தினமொன்றாய்
கனம் தந்த குண்டலங்கள் ,
எல்லாம் விட்டாச்சு...
கடவுளின் பெயராலே
பெண்கள் கலங்குவது பொறுத்திடாது
கடவுளையும் வணங்குவதை
கடவுளாணை மறந்தாச்சு.
அடிமைகளை எழுப்பி வைக்கப்
புதுமையாய் எழுந்தாச்சு.
எல்லாம்.....எல்லாம்....
எடுத்தெறிந்து பலகாலம்....
எண்ணிக்கை மறந்தாச்சு....
எண்ணமதில் தீமூண்டு
எழுதியவை ஏராளம்.
திண்ணமுடன் தைரியமாய்
சொன்னவைகள் ஏராளம்....
“பாவரசன் பாரதியின்
வரிகளுக்கு உரியவராய்
வலம் வந்த புதுமையின்
பொய்சொன்ன வாய்மொழிகள்
மெய்யென்றுணர்ந்து
மேன்னைமிகு தகுதியெல்லாம்
கொடுத்து வைத்தோம் !
கழுத்தில் கனமான தங்கக்கடை,
கையிலும் வளையலாய்,
மின்னியொழி பாய்சியபடி....
அவிழ்த்து வைத்ததாய்
சத்தியம் செய்த சேலையும்,
மறந்து போன நெற்றிப்பொட்டும்,
ஆகா அதுவும் அழகுதான்.
புதுமைசெய்யப் புறப்பட்ட
புதுமையரின் வாரிசொன்றின்
திருமணத்தில் வேண்டாமென்று
சொன்னவைகள் ,
அடிமையென இருந்தவைகள்....
காணக்கண்கோடி போதுமா ?
தம்பிள்ளை மணவாழ்வில்
இணைந்து விட,
சைவத்தார் முறைப்படி
பொன்னுருக்கி , தாலிசெய்து ,
வேட்டி தலைப்பாகையுடன் கூறைகட்டி ,
மணவறையில் வந்தமர்ந்து
அக்கினி சாட்சி வைத்து
இல்லாத அருந்ததியை
இருந்த இடமிருந்து நோக்கி ,
இருமருங்கும் தாரைவார்த்துத்
தம்பதியர் பெற்றோராய்....
புதுமை செய்யும் பெற்றோராய்....
மற்றோர்க்கு உபதேசம்
பெற்றவர்க்குக் கடைப்பிடிக்க
முடியாத வெளிவேசம்.
திரும்பவும் திரும்பவும்
ஊருக்கு மட்டும் உபதேசம் !
உள்வீட்டில் எல்லாமே
உள்ளபடி....உள்ளபடி....
என்ன செய்ய இந்தச்சாபம்
எங்களுக்குத் தீராதோ ???
சொன்னவரின் வாய்களிதைச்
செவிவைத்துக் கேளாதோ ????
- பதிவுகள் ஜூன் 2004; இதழ் 54.