இயற்கையின் விழியிலே இறைவனும் பார்க்கிறான்
மலர்களின் இதழ்களால் அவனுமே சிரிக்கிறான்
பறவைகள் மொழியிலே பாடலும் இயற்றுவான்
அருவியின் இசையிலே அழகுடன் பாடுவான்
மலைகளின் உயரமாய் மனதினை கொண்டவன்
பசுமையின் வடிவிலே மனந்தனை ஈர்க்கிறான்
முகில்களின் உருவத்தில் கருணையை பொழிகிறான்
வனங்களின் மரங்களாய் வசீகரம் கொள்கிறான்
பயிர்களின் விளைச்சலால் பசியினை போக்குவான்
இருளினைக் காட்டியே ஒளியினை ஊட்டுவான்
கடல்தனில் அலைகளாய் மிதந்துமே திரிகிறான்
காற்றினில் ஒலியென கலந்துதான் இருக்கிறான்
வானத்தில் சுடரென வளமுடன் வருகிறான்
வையகம் செழித்திட வளம்பல தருகிறான்
ஞாலத்தை ஒருவனாய் ஆட்சியும் செய்கிறான்
நாளைக்கு என்பதை நேற்றிலே காண்கிறான்
இனிமையைக் கொடுப்பதில் தேனென இனிக்கிறான்
கொடுமையை விலங்குகள் குணத்திலே விதைக்கிறான்
தனிமையில் இருந்திட துணையென வருகிறான்
கனிகளின் நடுவிலே சுவையென கிடக்கிறான்
இரவிலே நிலவென எழில்மழை பொழிகிறான்
உறவிலே உயிகளின் உயர்குணம் வளர்க்கிறான்
பிரிவிலே நரகமாய் உழன்றுமே கொல்கிறான்
தீயிலே ஜோதியாய் திகழ்ந்தவன் வாழ்கிறான்
தனித்தனி படைப்பதன் தனித்துவம் காட்டுவான்
தனக்கொரு இடமின்றி தாண்டவம் ஆடுவான்
மணிக்குள்ளே நிமிடமாய் மறைந்தவன் கிடக்கிறான்
மனிதனை திருத்திட மறுத்தவன் திரிகிறான்
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.