கடற்கரை மணலில்
கைகளைக் கோர்த்து
கால்புதைய நடப்பதல்ல
காதல்!
நெடிதுயர்ந்த
மரங்கள் அடர்ந்த
பூங்காக்களில்
புதர்களின் ஓரம்
புகலிடம் தேடுவதும் - அல்ல
காதல்!
வாழ்க்கை வரலாற்றை
பக்கங்களில்
பதிவு செய்து
புத்தகமாய் வெளியிட
பதிப்பகங்கள்
கிட்டாத காரணத்தால்
உடல் முழுதும்
வரிகளை வரைந்து நிற்கும்
தள்ளாத வயதிலும்
தணியாமல் இருப்பது
காதல்!
நாணல் புல்லாய் - நின்று
உழைத்த உடல் - இன்று
நாண் ஏற்றிய வில்லாய்
வளைந்து நிற்கும்
வயதிலும்
வளையாமல்
வளைய வருவது
காதல்!
மருத்துவமனைகளின்
அவசர ஊர்திகளிலும்
அமரர் ஊர்திகளிலும் - தம்
துணையோடு தவித்திருக்கும்
கண்களில் பளிச்சிடுவது
காதல்!
தம் வாழ்க்கையின்
சக்கரமாய் இருந்தவளை - இன்று
சக்கர நாற்காலியில்
தாங்கி நிற்கும் கைகளில்
தேங்கி நிற்பது
காதல்!
அறுவை அரங்கிற்குள்
அரைமயக்கத்தில்
அனுப்பிவிட்டு
அரைநொடியும்
அமர இயலாமல்
அங்குமிங்கும்
அலைபாயும் கால்களிலும்
தெரிகின்றது
அமரத்துவ காதல்!
இந்தக் காதல்
காதலர் தினமென்ற
ஒற்றை நாளில்
ஒடுங்கிவிடும் காதல் அல்ல -
மாறாக
ஒவ்வொரு தினத்திலும்
ஓங்கி ஒலிக்கின்ற காதல்!
அன்றிலையும் மகன்றிலையும்
என்றும் நான் கண்டதில்லை!
அரைநூற்றாண்டுக்கும்
அதிகமாக
குறைகளைப் புறந்தள்ளி
நிறைகளை முன்னிறுத்தி
பிறைபல கண்ட
எத்தனையோ
காவியக் காதலர்களே
எம் கண்ணிற்கு
என்றைக்கும்
அன்றிலும் மகன்றிலும்!
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.