1
உன்னை நினைவு கூறுவதற்கு
என்னிடம் இருக்கிறது
உன் வெயில் காலத்து அணைப்புகள்
மழைக்காலத்து தீண்டல்கள்
இதயத்திடம் சொல்லத்தேவையில்லை
அவரை நினைவு கூறு என்று
கோழி எப்படி நினைவு கூறும்
விடியற்காலையை
வாசலை
கோலங்கள் நினைவு கூறுவதாய்
உன்னை நினைக்கின்றேன்
விதைக்குள் மண் நுழைவதில்லை
மண்ணின்றி முளைக்க முடியுமா
நினைவு கூறலால் வளர்கின்றேன் நான்
வறண்ட வெயில் காலத்தில்
மெல்ல நடந்து வரும் நதி நான்
உன்னைக்கண்டவுடன்
மழைக்கால நதியாய் கரை உடைத்து செல்கிறேன்
காற்றுக்கு இலைகளில்
மிதப்பது பற்றி சொல்லிக்கொடுக்கின்றேன்
மரங்களுக்கு பூப்பது பற்றி
செடிகளுக்கு மலர்வது பற்றி
நீதான் பேசுகிறாய்
என்னுடைய குரலில்
அம்மா குரலின் அதீதத்தை கண்டு பிடிக்கிறாள்
காதல் பிறந்து விட்டது
அதற்கு முந்தைய காலத்தை பற்றி
வெறும் நினைவு கூறல் மட்டுமே
ஆனாலும் உன்னை நினைவு கூறுகின்றேன்
முன்னிலும் அதிகமாக
என் காலத்தில் காதலை பெருமை படுத்துவேன்
என் மூதாதையர்களை போல
வலிமையான காதலை பேசுவேன்
காதலை வைத்து வாழ்க்கையை கட்டுவேன்
இனி நான் ஒரு மதத்தை சேர்ந்தவளல்ல
ஒரு சாதியை சேர்ந்தவளல்ல
ஒரு கலாச்சாரத்தை சேர்ந்தவளல்ல
நான் காதலி நான் காதலி
எனக்கும் பூமிக்குமான தொடர்பு
இது மட்டுமே.
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.