1.சமகால மனிதநேயம்
காமுகர்களின்
கண்கள் அரங்கத்திற்கு
காட்சி தொடங்க
கறுப்புத் திரைபோடும்
வெறுப்புச் சேவகன்.
சுயலாபங்களுக்கான
பக்கச்சார்புகளின் மைதானத்தில்
விளையாடப்படும் கால்பந்து.
சந்தர்ப்பவாத சூரியன்களை
சாத்தான்கள் மறைக்க
ஏற்படும் சாத்தியமில்லாக்
கிரகணம் .
முதியோர் இல்லங்களில்
பெற்றோராய் இருந்ததற்கான
அடையாளங்களை உருவாக்கும்
காலத்தின் களங்கம்.
கருணைக் கொலைகளில்
சிரிக்கும் கடவுளின் யதார்த்தம்
2 சூன்ய கணக்கு
பனித்துளி சிந்தும் பரவசம் காண
பகலவன் தோன்றி சிரிக்கும் பொழுதில்
மரங்கள் செடிகொடிகள் பூத்த மலரால்
வரவேற்கும் காலை அழகு.!
மழைவரு மென்று மனதினி லெண்ணிக்
குடைதனைக் கையில் சுமக்கும் தினங்கள்
பொழியா மழையோ குடையற்ற நாளில்
குளித்திடச் செய்யும் சதித்து !
கொட்டும் மழைக்காலம் கோடை நலமென்றுத்
திட்டும் மனமோ, திரும்பியோர்நாள் சுட்டெரிக்கும்
வெய்யில் பொழுது வருத்த நினைக்குமே
பெய்யும் மழைசிறப் பென்று.!
அடைமழை பெய்து அகிலம் நனைந்து
விடைபெறும் காலம் விரைவாய் நடைபயின்று
வந்தெரிக்கும் சூரியன் வாராத மண்மேலே
சுந்தரம் சூன்ய கணக்கு!
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.