இவர்க்கிலையோ ..?
பரந்த கடலன்னை மேனியிலே,
நீந்தும் படகினில் தானமர்ந்தே,
ஞாலம் புகழ்ந்திடும் நீருழவன்,
நாடியே மீனினைத் தான் பிடிப்பான் !
கந்தலுடையவன்தான ணிந்தே,
கஞ்சிக் கலயத்தைத் தான் சுமந்தே ,
நொந்து வருந்தியே !தன்னுடலை,
நூறு வகைக் கடல் மீன் பிடிப்பான் !
பொங்கிப் புயலெழுந் தாடயிலே,
பூதங்கள் போலலை மோதயிலே,
அங்கு படகினைப் பந்தாகும்,
இறைவா ! மீனவன் தத்தளிப்பான் !
ஓலைக் குடில் திரை ஓரத்திலே,
ஓடும் வாழ்க்கையோ ஓடத்திலே,
காலை விடிவுகள் இவர்க்கிலையோ ..?
காலமெல்லாம் கண்ணீர் தானுரித்தோ .?
அறிவால் உணர்க ..!
அரபு நாட்டின் வெம்மையிலே
அனுதினம் வெந்தாய் பணத்துக்காய்
இரவும் பகலும் ஓயாது
இயந்திரம் போலே நீயு ழைத்தாய் !
விறகாய் அங்கே நீ எரிந்தாய்
வீட்டில் அடுப்பு எரிவதற்காய்
உறவைப் பிரிந்தாய் .உயிரென்று
ஓம்பும் கௌரவம் அங்கு திர்த்தாய் !
மண நாள் "மாலை"வாடு முன்னர்
வானிற் பறந்து நீ சென்றாய்
பணந்தான் வாழ்க்கை என்றெண்ணி
பைத்தியமானோர் பலருண்டு
துணையே பணமும் வாழ்க்கைக்கு
துலங்கும் அறிவால் நீ யுணர்க !
இளைஞர் இல்லா வாழ்க்கையிலே
இன்பம் ,அன்பு உறவன்றோ !
தாலித் தங்கம் விற்றே நீ ,
தாவிச் சென்றாய் பொருளீட்ட ,
வேலியில்லா மனத் தரையில்
விதைத்தாய் நீயும் பேராசை
கேலிக் கூத்தாம் உன் வாழ்க்கை
கிடைக்கும் பணத்தால் கிடைக்காது ,
பாழாய் போன இளமை சுகம்
வருமோ மீண்டும் நீ யுணர்வாய் !
திருத்தம் செய்வோம் !
எல்லையில்லாக் கல்வியெனும் ஒளியைப் பெற்று
இவ்வுலக வாழ்க்கையிலே ஏற்றம் பெற்று
தொல்லையில்லா திவ்வுலகில் துருவ மாகத்
துலங்கிடவே தூய்மையொடு கல்வி கற்போம் !
குருட்டு நெறியால் மனதைக் குரூர மாக்கிக்
கொண்டிழிவு புரிவதனை அறவே நீக்கி !
புரட்சி யினால் இவ்வுலகில் புதுமை பூக்க
பொலிவோடு கல்வியினைத் துணையாய்க் கொள்வோம் .!
கடல் போன்ற சொத்தெல்லாம் அழிந்து போகும்.
காலமெலாம் சேர்த்த பணம் கரைந்து போகும்
உடலோடு உயிரொன்றி வாழு மட்டும்
உயர்வான கல்வியது இணைந்து வாழும் !
ஒன்று குலம் ஒரு ஜாதி ஒன்றே மக்கள்
ஒற்றுமை தான் வையத்தின் உயிரின் நாடி
என்ற நிலை யோடு தினம் இணைந்து வாழ !
இணையில்லாக் கல்விய தன் துணையே வேண்டும் !
இளமையது வாழ்க்கைய தன் வசந்த காலம்
இவ்வுலகின் பொறுப் பெல்லாம் மனிதர் கைக்கே !
தெளிவுடனே இளமையிலே கல்வி தன்னைத் ,
தேடிடுவோம் வையத்தை திருத்தம் செய்வோம் !
மானுட வாழ்க்கை!
மகிமை மிக்கதோர் மானுடப் பிறவி
அணுவிலும் நுண்ணிய கருவினில் இருந்து
அன்னை வயிற்றினுள் அடக்கமாய் வளர்ந்து
பத்துத் திங்களில் பாரிலே பிறப்பார்....!
இருண்ட சூழலை மாற்றிய பின்னே
ஒளி உலகத்தை உவப்புடன் பார்க்க
விழிகள் திறப்பார் விருப்புடன் கை கால்
ஆட்டி மகிழ்ந்து அகிலத்தை ரசிப்பார்.....!
தத்தித் திரிந்து தளர்நடை பயின்று
பள்ளிப் பருவ வாசல் ஏறி
இளைஞராகி என்றும் வனப்புடன்
உலக அரங்கில் நடிப்பினைத் தொடர்வார்....!
குருடராய் ,செவிடராய் குடிக்கு அடிமையாய்
அறிஞராய்க் கலைஞராய் ஆயிரம் வேஷம்
ஏதோ ஒன்றை இட்டுக் கொள்வார்
எல்லாம் மனம் போல் இகத்தில் செய்வார்....!
முதுமை தோன்றுமே நரைகள் தாவுமே,
பிள்ளையைப் பெற்றவர் பேரனைக் காண்பார்
போகப் போக நடை தளர்ந்திடுவார்
பூமியில் ஒரு நாள் உறுதியாய் இறப்பார்.....!
இடறி இடறியே ..!
பசித்திருந்தோம் படிப்பதற்காக,
தனித்திருந்தோம்- .
தனித்துவத்தைக் காப்பதற்காக,
விழித்திருந்தோம்
விடியலுககாக ...!
ஆனாலும் ,
இன்னமும் தான் விடியவில்லை !
கருக்கலுக்குள்ளே தெரியும்
விடி வெள்ளியாய்
அடி மனதில் கனவுகள்!
உறுதியான வழியின்றி
உருகிக் கொண்டிருப்பதால்
மனங்களில்
ஊமைக் காய்ச்சல் !
அடக்கு முறைகளில்
அடிமையாகிப் போனதால்
உணர்வலைகளில்
அக்கினிப் பிழம்பு
தெருப் பாடகரின் தகரடப்பாவாய்
எங்கள் தராதரங்கள்
தரமிழந்து போயின !
`தடைகளையும் படிகளாய் நினைத்து
நாங்கள் -
முன்னேறத் துடித்தோம்
இறுகிப் போன அந்தக் கற்களில்
இடறி இடறியே
எங்கள் பாதங்கள்
புண்ணாய்ப் போயின
நிறம் பூசிக் கொண்ட நரிகள்
நானே ராஜா வென்று
கூப்பாடு போட்டன
அரசியல் லாபம் தேடும்
பச்சோந்திக் கும்பல்கள்
எங்கள் தராதரங்களை
நிறம் மாற்றின ..!
நாற்காலியின் ஆசை சில
நல்லவர்களை
நயவஞ்சகர்களாக்கலாம்
நயவஞ்சகளே
நாற்காலிக்குள் அடக்கமானால்
பாவம்
அந்தநாற்காலி என்ன செய்யும் ....?
கம்பி எண்ணும் கைதிகளைப் போல
நாங்கள் -
நாட்களை எண்ணிக் கொண்டிருக்கிறோம்
சொடிததுப் போன
விரல்களை நீட்டி விட்ட படி
சொக்க வைத்த வாக்குறுதிகள்
கையில்
சிக்காமலே போனதை
எண்ணிய படி ...!
ஏனிப்படியில்
தலைக்கணமாய் ஏறும்
ஒல்லிச் சிறுவரைப் போல்
எங்கள் வயதுகள் -
ஆண்டுகளின் நகர்வில்
ஆங்காங்கே `நரை மயிர்கள்
இன்னுமொரு தராதரத்தைப்
பெற்றுக் கொண்டதாய்
பறை சாற்றுகின்றன ..!
தினம் தினம் !
பகலில் சுமையாய் இருக்கிறேன்
இரவில் பிணமாய் கிடக்கிறேன்
வேதனைகளும் சோதனைகளும்
என்னை தொடரும் பொழுது
பல வருடங்கள்
எனக்கான தன்மானத்தை
காப்பாற்றி வந்த பின்
சுகத்தை நீ தடவிக் கொள்ளும்
அந்த சில் நொடிகளில் மின்னலாய் சிந்திக்கின்றேன்.
பனி காலத்திலும், நுவரெலியா
கிழக்கு மண்ணின் உஷ்ணமாய் சுடுகிறது.
அனலாய் சுடுகிறது மனசு
பெண்மை புனிதமானது
என்பதை புரியாதவர் பலர்
தாய்மையின் உணர்வுகளை
அடைவதற்காய் நாயாய்
அலைகின்றனர்.
ஒரு முட்டையின்
கருவாய் -
கற்பினை மட்டும் உடைத்து விடாது
காப்பாற்றுகிறேன்.
தினம் தினம் வெள்ளையாகிப் போகும் முடிகளும்..
உதிரிப் போகும் நினைவுகளும்.......
இருளாய் மாறும் நினைவுகளும்......
சுடராய் மாறும் பகல்களும்.....
நான் -
எது வந்திடினும்
மானத்தை காப்பதால்
மரியாதையை வளர்ப்பதால்
பெண்மையை போற்றுவதால் எப்போதும்
என் பெண்மை சூரியனாகவே பிரகாசிக்கின்றது.
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.