கட்சி விட்டுக் கட்சித் தாவிக்
காட்ட வந்த தேர்தல்.
கட்டுக் கட்டாய் பணத்தை அள்ளிக்
கொட்ட வந்த தேர்தல்
பெட்டி மேல பெட்டி வைத்து
பேரம் பேசும் தேர்தல்
மட்ட மான கொள்கை கொண்ட
மானங் கெட்டத் தேர்தல்
கொலைக்கு அஞ்சா குறிக்கோள் தன்னை
கொண்ட பேரின் தேர்தல்
விலைக்கு வேற்றுக் கட்சித் தலைவர்
வாங்கு கின்றத் தேர்தல்
வலைகள் விரித்து மக்கள் வாக்கை
வாரத் து(ந)டிக்கும் தேர்தல்
நிலைக்கு மென்ற ஜனநா யகத்தை
நெரித்துக் கொன்றத் தேர்தல்.
நீதி செத்து போன நாட்டில்
நெஞ்சை உறுத்தும் தேர்தல்
நாதி யற்ற மக்கள் பணத்தை
நாச மாக்கும் தேர்தல்
போதி மரத்தின் கீழ மறந்து
பொய்கள் சொல்லும் தேர்தல்
ஜாதி துவேசம் தூண்டி விட்டு
ஜெயிக்கப் பார்க்கும் தேர்தல்
காசு கொடுத்து மக்கள் கூட்டம்
காட்டு கின்றத் தேர்தல்
வீசு கின்றக் காற்றும் கூட
வெறுத்து விலகும் தேர்தல்
மாசு கொண்ட சூதாட் தமாய்
மாறிப் போன தேர்தல்
நாசூக் காக உரைப்ப தென்றால்
நாற்ற மெடுக்கும் தேர்தல்!
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.