1. உயிர்ப்பு .
- சுப்ரா (திருநெல்வேலி) -
இளநீல நிறத்தில் நான்கு சுவர்களுக்கும்
அழுக்கில்லா டிஸ்டம்பர் .
தரையில் வழுக்கும் மார்பிள் சதுரங்கள் .
மூலையில் மகாப் பெரிய
எல் ஈ டி தொலைக்காட்சிப் பெட்டி .
கூரையில் பளபளக்கும் பாரசீகச் சரவிளக்கு .
உட்கார்ந்தால் உள்வாங்கும்
உயர்தர மெத்தையோடு தேக்கு இருக்கைகள் .
ஆறடிக்கு ஆறடியில்
அழகிய பொம்மைகளோடு காட்சிக்கூடு .
நாலைந்து அலங்கார பானைகளில்
நாளும் வாடாத வண்ண மலர்கள் .
கடலென மாயை காட்டும்
கண்ணாடித் தொட்டிகளில் மின்னும் மீன்கள் .
வடபுறச் சுவரில் ரவிவர்மா ,
தென்புறம் பிக்காஸோ நகல் .
நேற்று வரை
வெற்றுக் கட்டிடமாகவிருந்த வரவேற்பறை
உற்சாகமாக உரையாடிக் கொண்டிருக்கிறது இன்று
பேத்தியின் க்ரேயான் கிறுக்கல்களோடு .
2. கணிப்பு .
- சுப்ரா (திருநெல்வேலி) -
அவர்கள் இவர்களுக்குள் .
இவர்கள் அவர்களுக்குள் .
தெரிந்தும் தேடிக்
கொண்டேதான் இருக்கிறார்கள் .
இவர்கள் அவர்களையும் .
அவர்கள் இவர்களையும் .
சுயமாக அமைத்துக் கொண்ட
சுவர்களுக்குள் ஒளிந்திருக்கும்
இருட்டில் தேடுவதால்
இது வரை
அவர்களால் இவர்களையும்
இவர்களால் அவர்களையும்
கண்டு கொள்ளவே இயல வில்லை .
எனினும்
தொடர்ந்து கொண்டேதான்
இருக்கிறது தேடல் .
சுவர்களில் துளை போட்டு
உருவாகும் வெளிச்சத்தில்
அவர்கள் இவர்களையும்
இவர்கள் அவர்களையும்
கண்டு கொண்டு
ஒன்றாக ஆகிப் போகலாம் ;
அல்லது
அவர்கள் இவர்களாகவும்
இவர்கள் அவர்களாகவும்
மாறியும் போகலாம் .
எல்லாமே ஒரு கணிப்புதான் .
3. நதியில் மிதக்க விட்ட கவிதை .
- சுப்ரா (திருநெல்வேலி) -
நதி நிலவைச் சுமந்த
ஒரு முன்னிரவு நேரத்தில்
பேருந்து பாலத்தில் ஓடியது .
ஜன்னலோர இருக்கையிலிருந்த
எனது பார்வையில்
நதியும்
அதில் மிதக்கும் நிலவும்
பட்டபோது
சட்டென்று தோன்றியதால்
மனதிலிருந்த எனது கவிதையில்
ஒன்றை வீசியெறிந்தேன்
ஜன்னல் வழியே வெளியே .
மிதக்க விட்ட கவிதையை
மறந்து விட்ட
ஒரு முன்மாலை நேரத்தில்
இலேசாய் வெளிச்சம் போர்த்திய
நதியின் கரையில்
நின்றிருந்த போது
தூரத்தில்
மிதந்து வந்து கொண்டிருந்தது
என் கவிதை
நிலவின் கைகளைக் கோர்த்தபடி
மேலும் அழகு கூடி .
4 . நேற்று பார்த்த நதி .
- சுப்ரா (திருநெல்வேலி) -
நேற்று பார்த்த நதி
இன்று இங்கில்லை
தூரத்தை
முன்னே தள்ளி
காலத்தை
பின்னே நிறுத்தி
ஏற்படும்
இடமாற்றத்தில்
எதிர் படலாம்
அதே நதி
இன்னொரு இடத்தில் .
ஆனால்
நதியென்பது
நீர் மட்டுமன்றி
நீர் சார்ந்திருக்கும்
நிலமும்
நீர் தொடும் கரைகளும்
கரை வாழ் மனங்களும்
என்பதினால்
நேற்று பார்த்த நதியை
மீண்டும் காண்பது
சாத்தியமே இல்லைதான் .
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.