இர.மணிமேகலை கவிதைகள்! (பூ.சா.கோ.அர.கிருஷ்ணம்மாள் மகளிர்கல்லூரி.,கோயம்புத்தூர்.
தமிழகம், இந்தியா) -
1. பூலோக வாசிகள்
வானளாவி நிற்கும் கட்டிடக்கூரைகள்
பிரபஞ்சவெளிக்குச் செய்தியனுப்புகின்றன
தார்ச்சாலைகளில் பாய்ந்துசெல்லும் மகிழ்வுந்துகளில்
உறுமும் புலிகள் பயணிக்கின்றனவாம்
பலதரப்பட்ட மலைப்பாம்புகள் அவற்றைச்சாகசத்துடன்
ஓட்டுகின்றன என்பதும் குறிப்பு
கவனிக்க...பயணத்தின்போது சில இடங்களில்
நாசுக்கும் அழகும் மிளிரும் மான்தென்படும்
பாம்பு அதனிடம்
கண்சிமிட்டிக் கரம் குலுக்கி நகரும்..
ஒதுக்கப்பட்ட தவளைகளைக்கண்டால்
பாம்புக்குக் கொண்டாட்டம்
வயிற்றை நிரப்பிக்கொள்ளும்
விழுங்கும் சிங்க ராஜாக்களைக்கண்டால்
கீழ்நோக்கிய பார்வையுடன் பாதம் பணியும்
அதன் பாசாங்கில் ஏமாந்த சிங்கம் மந்தகாசம் புரியும்
வெள்ளந்தி முயல்களைக்கண்டால்
மலையனுக்கு அறவே பிடிக்காது
விஷம் உமிழும்
கழுத்தை நெறிக்க மலையத்துவசன் மகள் இல்லாத்தால்
விஷத்தில் மாளும் முயலின் குருதியும்
பாம்பைப்பெருகச்செய்யும்
ஏகபோக ராஜாக்களும் அசுரப்புலிகளும் உள்ளவரை
அரவுகளின் பயணம் இனிதே தொடரும்
மீண்டும் ஒரு முறை
புசித்துவிடலாம் அறிவுக்கனியை
கிடைத்துவிடலாம் ஒருவேளை
மேடுபள்ளங்களற்ற உலகமும்
சாத்தான்களற்ற ஓவியமும்.
2. பாவைகள்
குளிரூட்டப்பட்ட அறையின் ஒளிக்கு
நிலவின் கதிர்கள் தோற்றிருந்தன
நாற்காலிகள் நிறைந்திருந்த வேளை
மேடையைத் தனதாக்கியிருந்தாள்
குரல் அதிகாரத்தொனி கொண்டிருந்தது
சந்தனக்குறியீடுகளில் வெண்ணிற நெற்றி
ஒளி மங்கியிருந்தது
முழவு முழங்க அவள் பாடத்துவங்கினாள்
மந்திர உச்சாடனம் உச்சத்தையடைந்தது
நாற்காலிக்கூட்டம் எதிரொலித்தது
அசைய மறுத்த இதழ்களும் விரிந்தன
அவனைக்குறித்த அலறலில் திகைத்திருந்தேன்
இன்னும் எத்தனை விரதைகள்
நெருப்புத்தேவன் அணைத்துக்கொள்ள
நாற்காலிகள் நிறைந்திருந்தன
மந்திர ஒலியைமீறி இதயத்தில்
சலங்கை ஒலி அதிர்ந்தது.
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
புழுதிப்படிவுக்குள் புதையுண்டு போய்விடுகிறது பாலஸ்தீனத்தின் பெருமூச்சு ….!
- மட்டுவில் ஞானக்குமாரன், கனடா -
சாம்பலாகிப்போன ரோம் நகர் போல
தீப்பிடித்து எரிகிறது காசா
இதையும் கூட
முள்ளிவாய்க்கால் போல
கண்டும் காணாமல் போவாயோ
எல்லோருக்கும் பொதுவான ஈசா
காலாதிகாலமாக பாலஸ்தீனர்
ஆண்டவர் பூமி இப்போது
மாண்டவர் பூமியாக மாறியிருக்கிறது.
தொழுகைச் சத்தம் கேட்டபூமியிலே
இப்போது அழுகைச் சத்தமே
எதிரொலிக்கிறது
ஒவ்வொருவரையும்
துளைத்து துளைத்து விசாரிக்கிறார்கள்
வினாக்களால் அல்ல
துப்பாக்கிச் சன்னங்களால்
மரத்துளிரை வெட்டவே
அரசாங்க அனுமதி எடுக்கவேண்டிய
தேசத்திலே
நகத்தை வெட்டுவது போல
முகத்தை வெட்டுகிறார்கள்
அவர்களோ உங்கள் வீடுகளையெல்லாம்
இடித்துக்கொண்டுதான் இருக்கிறார்கள்.
கல்லாக
நீங்களோ அதையெடுத்து
இடித்தவர் மீதே வீசிவிட்டு
வாழும்வழிமுறையை
உருவாக்கிக் கொண்டுதான் இருக்கி றீர்கள்.
தில்லாக
கையிலே எடுக்கும் கல் கூட
யாரையும் கொல்வதற்காகவல்ல
தங்களது கோரிக்கையை சொல்வதற்காகவும்
வெல்வதற்காகவுமேயாகும்
பாலஸ்தீனர்கள் வீசி எறியும் சொல்லுக்கும்
கூழாங்கல்லுக்கும்
பதில் சொல்ல இஸ்ரேலியரே
நீங்கள்
பீரங்கிவாய்களை அல்லவா திறக்கிறீர்கள்
பாலஸ்தீனத்தின் மூலஸ்தானம் வரை
துளாவத் துடிக்கிறது
இசுரேலிய ஏவுகணை
குருத்தெலும்பை உடைத்துவிடுகின்றன
பருத்த நரிகள் விடும்
ஏறிகணை
அவர்கள் நெஞ்சிலிருந்து
வழிந்து விழுகின்ற நீண்ட பெருமூச்சு
மேற்குக் கரையோர
புழுதிப்படிவுக்குள் புதையுண்டு போய்விடுகிறது
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
கனகியின் கொண்டைக்கு பூச்சூடும் சுப்பையன்
- துவாரகன்
அடி அழகி, இவ்வளவு காலமும்
குளத்துத் தெருவோரம்
வெறும் திரளைக் கற்களை
பொறுக்கிகொண்டிருந்தேனே!
என் காலங்களைக் கரைத்து விட்டேனடி!
செல்லத்துரையரும் ...காத்தானும்...
குடுமி வைச்ச சின்னச்சாமி ஐயரும்...
பெரியவளவு முதலியாரும்...
உன் வீடு வந்து போகும்போதெல்லாம்
பொறாமை கொண்டேனடி.
என் காலங்கள் வீணானதடி.
உலகத்தீரே, என்னைப் பொறுத்தருள்வீர்.
நான் கிறுக்கியதைப் பொத்திக்காத்து
பொக்கிசமாய் பெத்திவைத்தேன்.
அந்த ஏடுகளைச் சிதைத்தவரே.
மிச்சமிருப்பனவும் தருவேன்
தீயிட்டுப் பொசுக்குவீர்.
கனகி, அவள் அழகி.
அவள் கொண்டை ஆயிரம் பொன்பெறும்.
அவள் நகக்கண்களில் அழுக்கெடுக்க
என்னையும் சேர்த்திடுவீர்.
அவள் பேச்சின் நளினமும்
அவளின் அசைவின் அர்த்தமும்
இத்தனை நாள் தெரியாதிருந்தேனே!
அன்பரே வாரீர்!
கனகியின் பெருமை கேளீர்!!
அவள் கூந்தலில் கொண்டை பாரீர்!
அவள் கைகளில் விரல்கள் பாரீர்!
அவள் கால்களில் கொலுசு பாரீர்!
அவள் முகத்திலே கண்கள் பாரீர்!
(குறிப்பு – ஈழத்தில் 19 ஆம் நூற்றாண்டில் தோற்றம்பெற்ற அங்கதநூலே ‘கனகிபுராணம்’. இதனை எழுதியவர் புலவர் சுப்பையனார்)
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
பூக்களோடு ஒரு கைகுலுக்கல்
- மெய்யன் நடராஜ் (இலங்கை) -
புன்னகை விற்கும் சந்தை என்னும்
பூங்கா வனத்தில் நின்ற நேரம்
மின்னிடும் வண்ணம் மெல்ல இழந்து
மெல்லிய இதழ்கள் உதிர்ந்த சோகம்
தன்னை எண்ணி வருந்திய பூக்கள்
தன்மை கண்டு கலங்கியே அவைக்கு
என்னிரு கைகள் நீட்டி ஆறுதல்
இதமாய் வழங்க வாழ்த்துச் சொன்னேன்
உதிர்வை பார்த்து வாழ்த்துக் கூறும்
உள்ளம் கொண்ட கொடிய மனிதா
உதிரும் எமக்கு கைகள் நீட்டி
உதிர்த்த வாழ்த்தால் என்ன உணர்ந்தாய்?
அதிர வைத்தது பூக்களின் கேள்வி.
அடடா என்னக் கொடுமை செய்தேன்
புதிராய் வந்து புயலாய் தாக்கி
பூக்கள் சாய்த்து விட்டன என்னை.
ஆறுதல் என்பது வாழும் போதில்
அளிக்க வேண்டும். .சாவில் அல்ல.
மாறுதல் காண்பாய் மனிதா நீயும்
மறுபடி வந்து கூறிய பூக்கள்
சோறுடன் உப்பை சேர்த்தே உண்பாய்
சூடு சொரணை வரலாம் என்றே
கூறிய படியே கைகள் நீட்ட
கொடுத்துக் கையை குலுக்கிய நானும்
உதிர்ந்தேன் பூக்களின் காலில் சருகாய்.!
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
வழியனுப்புங்கோ !
கலைமகள் ஹிதாயா ரிஸ்வி
பெருநாளை வரவேற்று மகிழுங்கோ அந்த :
நாளை என்றுமே ! போற்றுங்கோ
மனதினில்”” ஈமானை”பெருக்குங்கோ _நல்ல
அமல்களை செய்து வாழு ங்கோ !
நோன்பினில் நன்மைகளை தேடுங்கோ _தினம்
அல் குர்ஆணை ஒதுங்கோ !
பாவத்தை வாழ்கையில் போக்குங்கோ _உயர்
தூய்மையை நாளுமே பேனுங்கோ !
தொழுகையை தவறாது தொழுவுங்கோ நல்ல
நன்மைகளை உள்ளத்தில் தேடுங்கோ
ஷக்காத் சதக்கா பித்திரா கொடுங்கோ _ நம்ம
ஏழைகளை இதயத்தில் என்னிப்பாருங்கோ !
உள்ளத்தை தக்பிராய் மாற்றுங்கோ அங்கு
இணையில்லாஹ் அல்லாஹ்வை கானுங்கோ !
பாசத்தை அன்பாய் பொலியுங்கோ _ என்றும்
வீணான கொள்கைகளை வீசுங்கோ !
பெருநாளை வரவேற்றுங்கோ _நம்ம
காஸா உறவுகளுக்கு பிராத்தனை செய்யுங்கோ !
நிறையில்லா இன்பதை அடையுங்கோ !
நோன்பினை சந்தோசமாய் வழியனுப்புங்கோ !
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.