கடற் திராட்சைகள்
மூலம்: டெரெக் வால்காட்
தமிழில்: ரா பாலகிருஷ்ணன்
ஒளியில் சரியும் அப்பாய்மரம்
தீவுகளால் களைப்புற்றுள்ளது
இரு பாய்மரப் படகொன்று கரிபியனை நோக்கி
வீடடைய ஏஜியன் வழி இல்லம் நோக்கி
ஓடிசியுஸ் செல்லலாம்
திராட்சைக் கொத்துகளின் கீழ்
தந்தையும் மகனும் கொண்ட பேராவல்
கல் பறவையின் ஒவ்வொரு ஓலத்திலும்
நசிக்கவின் பெயரை உணரும் காமுகன் போல்
தனது மிதியடிகளூன்றி விந்தி நடந்து வீடு திரும்ப நினைக்கும்
ஒரு கடல் சஞ்சாரி அல்லது கரை இருப்போன்
என எவர்க்கும் அமைதியைக் கொணராது
இச்சைக்கும் பொறுப்பிற்கும் இடையிலான தொன்மப் போர்
ட்ராய் அதன் இறுதித் தீக் கனலை கண்டதிலிருந்து
என்றும் அழியாது நிலைத்திருக்கும்
வலிந்திழுத்த ராட்சத மூடப்பாறைகள்
கடலலை இரண்டிடைப் பள்ளத்தினை உருவாக்கும்
அகண்ட பேரலைகளில் அறு அடிச் செய்யுள் உயரும்
மோதுண்ட நுரைகள் மறைந்து வரிகள் இறுதியாகும்
செவ்விலக்கியம் நமைத் தேற்றலாம் ஆனால் பயனில்லை
*ரெக் வால்காட் (Derel Walcott) ஜனவரி 23, 1930இல் செயின்ட் லூசியாவில் பிறந்தவர். கவிஞர், நாடகாசிரியர், எழுத்தாளரான இவர் 1992ற்கான இலக்கியத்துக்கான நோபல் பரிசினைப் பெற்றவர். அத்துடன் 2011ற்கான டி.எஸ்.எலியட் பரிசினை 'வெள்ளை நாரைகள்' என்னுன் தனது நூலுக்குப் பெற்றவர். 'ஒமெரோஸ்' இவரது மிகவும் புகழ்பெற்ற படைப்பாகும்.
*Nausicaa is the burner of ships -the daughter of King Alcinous. gAL PARAVAI -gull bird is a huge sea bird
மேதை
மூலம்: லியோனார்ட் கோஹேன்
தமிழில்: ரா பாலகிருஷ்ணன்
நான் உனக்கு
ஒரு ஒதுக்குபுறப்பகுதி யூதன்
எனது திருகலான முட்டிகளில்
வெண் காலுறை அணிந்து
நடனமாடுபவன்
அணைத்து நகரக் கேணிகளிலும்
நஞ்சு கலப்பவன்
நான் உனக்கு
ஒரு துரோகம் செய்யக் கூடிய யூதன்
டல்மடின் அடிப்படையில்
குழந்தையின் எலும்புகள்
எங்கு மறைத்து வைக்கப் பட்டுளவோ அங்கு
ஸ்பானியப் பாதிரியிடம் உறுதி
எடுத்துக் கொள்பவன்
நான் உனக்கு
ஒரு வங்கி அதிகாரியான யூதன்
ஒரு பழம் கம்பீர வேட்டைக்கார அரசனைத்
திவாலாக்கி அழித்தவன்
நான் உனக்கு
ஒரு பிராட்வே யூதன் எனது அன்னைக்காகத்
திரை அரங்குகளில் கதறுபவன்
பேரம் பேசிய சரக்குகளை
கவுண்டருக்குக் கீழ் விற்பவன்
நான் உனக்கு
டாக்டர் யூதன் மீண்டும் தையலிட
குப்பை டப்பாக்கள் அனைத்திலும்
ஆண்குறி நுனித் தோலைத் தேடுபவன்
நான் உனக்கு
ஒரு டச்சாவு யூதன்
பசைக் கட்டால் முட்டி இறுகக் கிடந்து
எம் மனமும் அறியவொண்ணா
வீங்கிக் கிடக்கும் வலியில் கதறுபவன்
*ல்மட்- யூதர்களின் வரைவு நூல்
*ச்சாவு ஒரு நாசி வதை முகாம்
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
சூறை ஆடி விட்டார்கள்!
- எம். ஜெயராமசர்மா , மெல்பேண் -
* யாழ் நூலகம் எரியுண்ட தினமான மே 31, 1981 நினைவாக...
ஏடுகளாய் இருந்தவற்றை எப்படியோ கண்டெடெடுத்து
நாடெல்லாம் நன்மைபெற நல்ல உள்ளம் விரும்பியாதால்
ஓடாக உழைத்து நிதம் உருப்படியாய் செய்தமையே
வாடாது நிற்கின்ற வகைவகையாம் நூல்களெலாம்
எத்தனையோர் உழைப்பினிலே இங்குவந்த புத்தகங்கள்
எத்தனையோ மேதைகளை எமக்களித்து நின்றதுவே
நித்தமும் நாம்படிப்பதற்கு புத்தகமாய் இருக்குமவை
எத்தனையோ சந்ததிக்கு இருக்கின்ற பொக்கிஷமாம்
நூல்நிலையம் இல்லையென்றால் நுண்ணறிவு வளராது
நூல்நிலையம் அருகிருந்தால் தேடிடிடலாம் அறிவையெலாம்
பாவலரும் நாவலரும் பலபேரும் உருவாக
நூல்நிலையம் காரணமாய் அமைந்ததனை அறிந்திடுவோம்
யாழ்ப்பாண நூலகத்தை யாருமே மறக்கார்கள்
வேண்டிய புத்தகத்தை விரைவுடனே தந்துநிற்கும்
தென்கிழக்கு ஆசியாவின் சிறந்தவொரு நூலகமாய்
சிறந்தோங்கி நின்றதனை தேசமே தானறியும்
எத்தனையோ வகையான புத்தகங்கள் இருந்ததங்கே
அத்தனையும் படிப்பவர்க்கு அருமருந்தாய் அமைந்தப்போ
சொத்தாக மதித்துமே புத்தகத்தைக் காத்தார்கள்
சுவையறியா அரக்கர்களோ சூறையாடி விட்டார்கள்
கற்றுணர்ந்தோர் வாழ்ந்தவிடம் கல்விக்கூடம் நிறைந்த இடம்
கண்ணியத்தின் உறைவிடமாய் கருத்திலே நின்றஇடம்
பெற்றவர்கள் பிள்ளைகளை பெரிதாக்க நின்றஇடம்
பித்தர்களின் வெறியாலே சொத்தையெல்லாம் இழந்தார்கள்
கோவிலுக்கு நிகராகக் கொண்டாடும் நூலகத்தை
கொடுங்கோலர் பலர்சேர்ந்து கொழுத்தியே விட்டார்கள்
தாவீது எனும்சாது தன்னளவில் தாங்காது
ஓய்வெடுத்து நின்றதுவே உலுத்தர்களின் செயலாலே
நூல்நிலையம் எரித்தவர்கள் நூறுமுறை பணிந்தாலும்
தலைசிறந்த படிப்பாளி தாவீது வருவாரா
எரித்தவர்கள் மனத்தினிலே இரக்கமே வாராதா
அரக்க குணம் இன்னுமே அழியாமல் இருக்கலாமா
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
படுகொலை செய்யப்பட்ட கவிதை - செல்வி.டிமாஷா கயனகி
செல்வி. டிமாஷா கயனகி
தமிழில் - எம்.ரிஷான் ஷெரீப்
(சம்பவம் - இலங்கை, எல்பிடிய பிரதேசத்தைச் சேர்ந்த பல்கலைக்கழக மாணவி செல்வி.டிமாஷா கயனகி, தனது கல்வி நடவடிக்கைகளுக்காக ழும்பு செல்வதற்காக 24.05.2014 அன்று விடிகாலை 3.30 மணிக்கு, எல்பிடிய பஸ் நிலையத்துக்கு வந்தவேளை, அங்கு நின்றிருந்த இராணுவ ரனொருவனால் அருகிலிருந்த பாழடைந்த கட்டிடமொன்றுக்கு இழுத்துச் செல்லப்பட்டுள்ளார். மாணவி அங்கிருந்து தப்பிக்க முற்பட்ட வேளையில் ராணுவ வீரனால் கத்தியால் பல தடவை குத்தப்பட்ட நிலையில் மரணமடைந்துள்ளார். மோப்பநாயின் உதவி கொண்டு தப்பித்துச் சென்ற ற்றவாளியைக் கைது செய்துள்ள போதிலும், குற்றவாளி இராணுவத்தினன் என்பதால் 'இராணுவ வீரனது காதலை மறுத்ததால் அவனுக்கு ஏற்பட்ட டுதியான கோபத்தின் காரணமாகவே கொலை நிகழ்ந்துள்ளது. திட்டமிட்டுச் செய்ததல்ல' என இராணுவத்தரப்பும், இலங்கைக் காவல்துறையும் ம்பவத்தை மூடி மறைக்கவும், குற்றவாளியைத் தப்பிக்கச் செய்யவும் முயற்சிக்கிறது.)
கடந்த 24.05.2014 அன்று ஒரு இராணுவ வீரனால் படுகொலை செய்யப்பட்ட 21 வயதான பல்கலைக்கழக மாணவி செல்வி.டிமாஷா கயனகி மரணிக்க ன்பு இறுதியாக எழுதிய கவிதை இது.
எப்போதேனுமொரு நாள் இவையெல்லாவற்றையும்
விட்டுச் செல்லவேண்டியிருக்கும்
எவரும் மகிழ்ச்சியாகச் செல்லும் பயணமல்ல அது
எனினும் அதை
துயரமின்றிச் செல்லமுடிந்தால்
எவ்வளவு நன்றாகவிருக்கும்
அந்நாளில்
நினைவில் வராதோர் அனேகர்
எனினும்
நினைவில் வரக் கூடிய சிலரில்
நீங்கள் இருப்பீர்களென்ற நம்பிக்கை எனக்கிருக்கிறது
நான் மரிக்கும் நாளில் வாருங்கள்
என்னைப் பார்க்கவென்றே வந்துசெல்லுங்கள்
ஒருபோதும் சிந்திராத கண்ணீரில்
ஒரு துளியை விட்டுச் செல்லுங்கள்
இரு விழிகளும் இறுக்கமாக மூடப்பட்டிருந்த போதிலும்
குளிர்ந்த சரீரத்துடனிருந்த போதிலும்
முன்பு பழகியதையெண்ணி
நெற்றியிலொரு முத்தமிடுங்கள்
ஆயிரம் கண்கள் பார்த்திருக்கும்
எனது நற்குணங்களை விமர்சிக்கும்
பதிலாக எதுவும் பேசாது
ஒரு பிடி மண்ணிட்டுச் செல்லுங்கள்
கல்லறையிலிருந்து நீங்கள்
நீங்கிச் செல்கையில்
மாபெரும் தனிமையை நான் உணரக் கூடும் - எனவே
ஒரு பூவை மட்டும் வைத்துவிட்டு
நீங்கள் செல்லுங்கள் திரும்பிப் பாராது
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
மூக்கு
முல்லைஅமுதன்
மூக்கு
எனக்கு அவசியமானது.
அம்மா
சின்ன மூக்கு
என்று பிடித்து
அழகு பார்த்தது..
அப்பாவின்
சுருட்டு மனத்தை
திருட்டுத்தனமாக
மணந்து உள்ளிழுத்தது.
அவனுடன் மோதி
உடைபட்டு மூக்கால்
குருதி வடிந்த போது
பரியாரியின் கோபத்திற்கு
என் மூக்கும்
பழிச் சொல் கேட்டது..
அவ்வப்போது
வகுப்பு வாத்தியார்
மூக்கைப் பிடித்து
கோபப்பட்டபோது
மூக்குடன்
மனதும் வலித்தது.
அந்த ஒழுங்கையால்
போகும் போதும்
மூக்கு
காட்டிக்கொடுத்துவிடும்
அதன் மணத்தை..
சில சமயங்களில்
தேடப்படுபவர் பட்டியலில்
உள்ளவரின் மூக்குடன்
ஒப்பிட்ட நாட்கள்
நினைவு வந்ததும்
மறக்காத பொழுதுகள்..
எப்படியேனும்
இது என் மூக்கு..
அதன் சுவாசத்தை,
அதன்
இயங்குசக்தியை
யாருக்கும்
இலகுவாய்த்
தந்துவிடமுடியாது
என் தாய்
நிலத்தைப்போல..
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
நொடிக்கு நொடி
கலைமகள் ஹிதாயா ரிஸ்வி
மரணமே உண்மை
எப்படியும்
வாழ நேரிடுகிறது
வாழ்க்கை
மண்ணில்
மரணமே உண்மை
வாழ்க்கையோ பொய்.
மகிழ்ச்சியாய் வாழலாமென்றால்
வாழ் நாளோ
இரவு பகலைப் போல.
இருள் வெளிச்சம் போல்
நிரந்தரமற்ற
மாற்றங்கள்.
அல்லாஹ்வுக்கு
இல்லை
வேற்றுமை
மனிதர்கள் தான்
நொடிக்கு நொடி
பச்சோந்தியாய் மாறிப் போகிறார்கள்.
எங்கும்
எல்லாரிடத்தும்
பேராசையின் ஆதிக்கம்.
நிம்மதி யின்றி
இல்லை எதுவும்
வாழ்வு .
வாழ்வதற்கு,மரணிப்பதற்கு
மனிதனுக்கு
வயது தேவையில்லை
உத்தரவு அற்ற வாழ்க்கையோடு
இம் மனிதம்.
மரணத்தை நினைத்து
வாழ வாய்கின்றது
இவ் வாழ்வு....!
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
எழிலாட்சி
மெய்யன் நடராஜ்
கள்ளாட்சி செய்வதற்கு
கடைதிறந்து வைத்தோரே
முள்ளாட்சி செய்வதையே
முன்னெடுத்து செல்வோரே
உள்ளங்கள் வென்றிங்கே
உயர்நிலைக்கு போனபின்னே
கொள்கையிலே மரந்தாவும்
குரங்கினத்தை வென்றோரே..
நல்லாட்சி புரிவதிலே
நாமிங்கு முதலென்று
சொல்லாட்சி புரிவதிலே
சுவையாட்சி கொண்டோரே
நெல்லாட்சி செய்கின்ற
நிலமெங்கும் காடாக்கி
புல்லாட்சி செய்வதையே
புகழாட்சி என்பீரோ?
வனமாட்சி செய்கின்ற
வனப்பெல்லாம் சீரழித்து
உனதாட்சிக் காலத்தில்
ஊரெல்லாம் வீதியாக்கி
மனசாட்சி புதைக்கின்ற
மயானமாய் மனசாண்டு
கனக்கின்ற சுமையாலே
களைப்பதுவோ அரசாட்சி?
அரசாட்சி செய்வோரும்
அகமகிழ்ந்து உண்பதற்கு
அரிசியாட்சி செய்தாலே
அன்னமதில் கைவைக்க
வரவேண்டும் என்கின்ற
வழக்கத்தை நன்குணர்ந்து
விரலோடு சோறள்ள
விவசாயம் உரமூட்டு.
மண்மீது விதையிட்டு
முளைத்தரும்ப இருக்கின்ற
பொன்னள்ளிக் கொடுத்தாலும்
புத்துணர்ச்சிப் பெற்றெழும்ப
கண்திறக்கும் விதையெல்லாம்
காசுக்கு விலைபோகும்
கண்ணிருந்தும் குருடான
காசில்லா ஏழையல்ல
விதைபோட்டு பயிராக்க
வியர்வையொடு உதிரத்தை
நிதந்தோறும் சிந்துகிற
நம்முழவர் கையுயர்த்தி
சதையோடு நகமாக
சகாஅவரை அரவணைத்தே
எதைநீயும் ஆண்டாலும்
எழிலாட்சி ஆகாதோ?
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.