- ஒரு தகவல் : காணாமல் போன தனது சகோதரனைத் தேடியழுத 13 வயதுச் சிறுமி விபூஷிகா, கடந்த 14.03.2014 அன்று அவளது வீட்டுக்கு வந்த இராணுவத்தினரால் பட்டப்பகலில் கிராமத்தவர் முன்னிலையில் கடத்திக் கொண்டு செல்லப்பட்டாள். கவிதைக்கான குறிப்பு எப்பொழுதும் தனது சகோதரனைக் கேட்டு அழுது ஓலமிட்ட அத் தமிழ் சகோதரி இப்பொழுது கடத்தப்பட்டிருக்கிறாள். காவல்துறைத் தலைமையகம் அறிவித்திருப்பதைப் போல அதனை மனிதாபிமானக் கடத்தலா எனத் தீர்மானிப்பது உங்கள் கையிலிருக்கிறது. -
நரகத்துக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ள
விபூஷிகா எனும் சகோதரி
விமானத்தைக் காணவில்லை
உலக வரைபடமே இங்கே பார்
யோசனைகளோடு விம்மியழுது
உதித்த சூரிய மகள் எங்கேயெனச் சொல்
அண்ணன்மார் மூவருக்கு இளையவள்
அன்னையின் விழிகளோ அன்பின் உறைவிடம்
அதுதான் ஐயாக்களே தமிழனின் பாசம்
அதுவன்றி வாழ்க்கையே போராட்டம் தங்கையே
கொடிய கனவொன்றைப் போல
மூத்தவர்கள் இருவர் மரித்திட
முப்பொழுதும் பார்த்திருந்த
இளைய அண்ணனும் கடத்தப்பட
பனையழகு எல்லாம் அழிந்த பூமியில்
ஸ்வரம் இழந்த பாடலானாள்
இரட்சகனைத் தேடியதால் - நரகத்துக்கு
கொண்டு செல்லப்பட்டுள்ள சகோதரியொருத்தி
கற்றறிந்த சிலுவைக் குறிகளுக்கு
சத்தியத்தில் இடமில்லை
குரலெழுப்பிப் பூத்த மலரொன்று
சிதைகிறது இரகசியமாக
அவளுமொரு சிறுமி
இருந்திருக்கக் கூடும் கனவுகள் ஆயிரம்
இன்னும் கண்டிருக்கக் கூடும்
எப்பொழுதாவது ஒரு புன்னகைத் துளியை
உலகம் ஒரு சிறைக்கூடம்
நலிந்தவர்கள் மட்டும் சிக்கிக் கொள்ளும் சதி பீடம்
இன்றும் வலி தந்திருக்கக் கூடும்
ஒரு கொடியவனின் பார்வை
வேண்டுமென்றே கடத்தப்பட்டாள் கறுப்புத் திலகமிட்டவள்
உருவழித்து தீப்பற்றியெரிகிறது எனது இருதயம்
உருகவில்லையா செவிமடுக்கையில் உம் மனங்கள்
நரக நதியினின்றும் மீண்டிட
நீந்திடு விபூஷிகா!
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.