இடையனின் கால்நடை
- எம்.ரிஷான் ஷெரீப் -
காலை வெயில் அலைமோதும்
பனியில் குளித்த விருட்சங்களைச் சுற்றிய பசும்புல்வெளியில்
மேய விட்டிருந்தாய் உன் கால்நடையை
ஒழுகி அசைபோடச் செய்தபடியிருக்கும்
தனித்திருந்த கொட்டகையின் கூரைகள்
பகல் பொழுதின் மேய்ச்சல் நினைவுகளை
வைகறைவரை இரவிடம் கிசுகிசுக்கும்
வேட்டை விலங்குகளின் பார்வைக்குத் தப்பிய
கால்நடையின் சதைப் பூரிப்பில் மின்னும் அதன் சருமம்
உன் ப்ரியத்தில் உறைந்திருந்த அது
எங்கும் தப்பிப் போய்விடாது எனினும்
வேலியை இறுக்கிக் கட்டினாய் நீ
அதனையும் அறியாது அசைபோட்டபடியிருந்தது அது
மேய்ச்சலுக்கு இட்டுச் செல்ல முடியாத அடைமழை நாட்களில்
எங்கெங்கோ அலைந்து
தீனிச் செடி குலைகளை எடுத்து வருவாய்
உன் தலை தடவலில் உயிர்த்திருக்கும் அதனுலகம்
தீனிக்கென நீ வைத்திடும் எல்லாவற்றையும்
அன்பென எண்ணிச் சுவைக்கும்
அதட்டலுக்குப் பயந்து அடிபணியும் - பிறகும்
அகலாதிருக்க இவ் வாழ்வும்
உன் பரிவும் நிலைத்திடக் கனவு காணும்
தசை, தோல், எலும்பென கூறிட்டுப் பணம்பார்க்க
அதன் எடை கூடும் காலமெண்ணிக் காத்திருக்கும் உன்
கத்தியைக் கூர் தீட்டும் நாளில்
அதன் மேனியிலிருந்து எழக் கூடும்
விடிகாலைத் தாரகையோடு
பசும்புல்வெளியில் உலர்ந்த உன் பாசத்தின் வாசம்
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
மரங்கள்
- முல்லை அமுதன் -
மரங்கள்
அசைகின்றன..
அருகில்
நிற்பவற்றுடன்
குசுகுசுக்கின்றன...
ஏதோ
சமிக்ஞை
புரிந்திருக்கிறது...
கிளைகளை
ஒடித்துவிட்டு
மொட்டையாய் விட்டனர்..
பின்னர்-
ஆயுதம் செய்யலாம் என்று
தறித்தனர்...
வேர்களோடி
உரம்பெற்று
நிற்கும் என்பதை
கோடரிகள்
மறந்துவிட்டன...
கொஞ்சம் கொஞ்சமாக
மனித மரங்களும்
அசைந்து பார்க்கின்றன..
பறவைகள்
குதூகலமாக
வான்பரப்பெங்கும்
பறந்தன...
காலம் தாழ்த்தியாவது-
வல்லூறுகளும் தமக்குள்
பேசுகின்றன..
மரங்கள்
மெல்ல மெல்ல
நிலம் நோக்கி
அசைகின்றன...
முல்லைஅமுதன்
09/12/2013
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
தவறின் மறுபெயர் மனிதன்
- மெய்யன் நடராஜ் -
விண்ணைத் தாண்டும் விஞ்ஞானத்தால்
வியக்க வைத்துப் பார்க்கிறான்
மண்ணை ஆளும் அரசைப் போன்று
மக்களை மாக்கள் ஆக்குகிறான்
கண்ணை கவரும் அபிநயத்தாலே
கருத்தில் நிலைக்கத் துடிக்கிறான்
பண்ணை நிற்கும் கால்நடை போலே
பகுத்தறி வின்றி வாழ்கிறான்
யுத்தம் பூண்டு ரத்தம் சிந்த
யுகயுக மாக தவிக்கிறான்
சித்தம் எங்கும் பேதமை வளர்த்து
செல்வம் தேடிக் களிக்கிறான்
கத்தும் மழலை பசியைக் கண்டும்
கண்ணை மூடிக் கொள்கிறான்
புத்தன் போலே யாவும் முடிந்து
போதனை வேறு செய்கிறான்
நாளைக் கென்றே இன்றில் சேர்த்து
நடுநிஷி யாவும் விழிக்கிறான்
தேளைப் போலே விஷத்தை வைத்து
தினமும் கொட்டிப் பார்க்கிறான்
தோளைத் தாங்கும் தோழமை தனையும்
துரோகத் தாலே புதைக்கிறான்
ஆளைக் கொள்ளும் அநியாயத் தாலே
அகிலம் ஆட்டிப் படைக்கிறான்
தன்னை மிஞ்சிட முடியா தென்னும்
தலைக்கனத் தாலே மிதக்கிறான்
அன்னை தந்தை உறவைக் கூட
அலட்சிய மாகப் பார்க்கிறான்
தென்னை போல வளர்ந்தி ருந்தும்
திமிரை அடக்க மறுக்கிறான்
மின்னல் போலே ஆகும் வாழ்வில்
மென்மை வளர்க்க மறுக்கிறான்
கையில் கொஞ்சம் காசை வைத்து
கனவான் போலே மிதக்கிறான்
பொய்யில் புரட்டில் உழன்று நாளும்
புகழில் மயங்கிக் கிடக்கிறான்
செய்யும் தொழிலில் நேர்மை தன்னை
சேர்த்துக் கொள்ள மறக்கிறான்
மெய்யில் உள்ளக் காற்றுப் போனால்
மீதம் என்ன மறுக்கிறான்.
மருத்துவம் கல்வி இரண்டிலும் காசை
மட்டும் எண்ணப் பார்க்கிறான்
தெருத்தெரு வாகப் பிச்சை எடுக்கும்
தொழிலிலும் கோடி சேர்க்கிறான்
கருத்தினில் நாளும் காசினை வைத்தே
கனவுகள் நூறு காண்கிறான்
திருத்திட முடியா திருடன் இவனே
தெய்வம் தனையும் படைக்கிறான்
சத்தியம் தன்னை சாக்கடை யாக்கி
சந்தோ சங்கள் காண்கிறான்
நித்திய தொழிலாய் பிறரின் வாழ்வின்
நிம்மதி கெடுத்துப் பார்க்கிறான்
கத்திகள் இன்றி ரத்தம் சிந்தும்
கௌரவ சண்டை புரிகிறான்
வித்தகன் இவனோ விலங்கிலும் கீழாய்
வேட்டை யாடிப் பிழைக்கிறான்
இயற்கை வழங்கிய கொடைகள் தன்னை
இயந்திரத் தாலே அழிக்கிறான்
இயற்கை கொஞ்சம் சீற்றம் கொள்ள
எழுந்து வணங்கிக் கொள்கிறான்
தயக்கம் இன்றே எதையும் செய்து
தன்னலம் காக்கத் துடிக்கிறான்
மயக்கம் தெளியும் வகைகள் இருந்தும்
மயக்கம் போலே நடிக்கிறான்
எல்லாம் தெரிந்த ஞானியைப் போலே
எதிலும் முன்னில் நிற்கிறான்
பொல்லாப் பெதுவும் நிகழும் என்றால்
பொதுவாய் நழுவிக் கொள்கிறான்
இல்லா தோரை கண்டால் போதும்
ஏளன மாகப் பார்க்கிறான்
கல்லா திருந்தும் நடிப்பில் பெரிதாய்
கற்றவன் போலே ஜொலிக்கிறான்
மனிதன் என்னும் பெயரில் உலவும்
மிருகம் என்றால் முறைக்கிறான்
புனிதன் என்னும் போர்வை போர்த்தி
புதுமை ராகம் இசைக்கிறான்
இனிக்கும் விதத்தில் கசப்பை கொடுக்க
இதயம் மூடி வைக்கிறான்
தனித்து நின்று சிந்தனை செய்தால்
தவறின் மறுபெயர் மனிதனாம்
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
வர்ணம் ஆயிரம்.
- வேதா. இலங்காதிலகம், ஓகுஸ், டென்மார்க் -
1. வர்ணம் ஆயிரம். (அழகு எனும் கருத்தில்.)
கர்ணன் தந்த கொடையாய்
வர்ணம் ஆயிரம் உலகில்.
சொர்ணம் பூலோக வாழ்வு.
தருணம் இதுவே களிப்பாய்!
வர்ணம் ஏழு வரிசையில்
வானவில் தோற்றம் அழகு.
காமனின் வில்லினைப் போலதைக்
காண்பதிலே ஒரு மயக்கம்.
தென்னோலைக் கீற்று அசைய
சின்னக் குருவிகள் கதை பேச
சொர்ண நிலாவும் தென்றலும்
வர்ணம் ஆயிரம் வரையும்.
குண்டுக் கன்னம் குழிய
வண்டுக் கண்கள் விரிக்கும்
வரமாம் குழந்தைச் சிரிப்பில்
வர்ணம் ஆயிரம் ஆயிரம்.
2. வர்ணம் ஆயிரம் (புகழ் எனும் கருத்தில். )
வர்ணம் அடைய வாழ்வில்
கரணம் போடும் மனிதன்
மரணம் வரை ஓயான்
தருணம் தேடி அலைவான்.
கனாக் கண்ட நினைவு
கணித்து எழுப்பும் குறிக்கோள்,
தினவெடுக்கும் கரங்களால்
புகழெனும் வர்ணம் தொடும்.
சுடராய் நிமிர்ந்து உயர
இடறும் தாழ்வு எண்ணம்
படராதுன்னைப் பார்! – பின்
தொடரும் வர்ணம் ஆயிரம்.
வந்தனை செய்து தமிழால்
வர்ணம் (துதி) பாடு இறைவனை!
தருணமிதுவே தாய் மொழியில்
வர்ணம் ஆயிரம் காண்பாய்
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
கலைமகள் ஹிதாயா ரிஸ்வி கவிதைகள்!
1. விட்டுச் சென்ற தாயை
தொட்டுச் செல்லும் வரிகள்..!
விட்டுச் சென்ற தாயை
தொட்டுச் செல்லும் வரிகள்..!
ஜனவரி
புதிய ஆண்டு
மக்கள் மனதில்
மகிழ்சசி கொண்டிருக்க ,
அன்று ஏனோ
காலை நேரம் இருளாகவே
மங்கிக் கொண்டிருந்தது
துயரத்தோடு -
விடிந்து கொண்டிருந்தது ..!
அதி காலை நேரத்து
காக்கை கூட்டங்கள்
கூடிக் கூடிக்
கரைந்து கொண்டிருந்தன
சொல்லமுடியாத சோகமொன்றினை
கூடிக் கூடி-
வீட்டின் கூரையில்
பேசிக் கொண்டிருந்தன ...!
முகத்தில் விழுந்த
மழைத்துளிகள் கூட ,
கண்ணீர்த் துளிகளோடு
சங்கமித்துக் கொண்டிருதது!
தாயே ...,
உனது பிரிவினால்
உயிரின் சுவாசங்களை
இழந்து போகும் மூச்சுக்களாய்
நான்
உயிர் தந்த உறவே ..,
என்னை -
மண்ணின் மேலே
வாழவைத்து விட்டு
நீ -
மட்டும்
மண்ணோடு மண்ணாகிவிட்டாய் ..!
எங்களை
சிரித்துப் பேசி மகிழ வைத்த
உங்களால்-
அழவைக்கவும் முடியும்
தேடி அலையவும் முடியுமென்பதை
அறிந்து கொண்டேன் ..!
புரிந்து கொண்டேன்..!!
கண்ணால் காண முடியாத
வாயால் பேசமுடியாத
காதால் கேட்கமுடியாத
ஏன்
உடம்பைக் கூட தொட்டுப் பார்க்கமுடியாத
பெரும் ஆழத்தில்
கொண்டு போய் சேர்த்து விட்டார்கள் !
என்னுள்ளம் மட்டும்
மறக்க முடியாத மரணவலியில்
தீர்க்க இயலாத துயரத்தில் துடிக்கின்றது
என் தாயே
கசியும் உள்ளத்தோடு ,
மாறாத நினைவுகளோடு
உங்களுக்காய் பிராத்திக்கின்றேன்
அல்லாஹ்வே
என் தாய்க்கு
ஜன்னத்துல் பிர்தௌஸ்யெனும்
சுவர்க்கத்தை கொடுப்பாயாக !
ஆமீன்
2. மடி தேடும் கரு ...!
சிந்தனைக் கருவிலுள்ள
எழுத்துப் பிறப்புகள் -
உன் மடி
தேடுகின்றன ...!.
பேனா முனையில்
அலங்கரிக்கப்பட்டுள்ள
கூர்(மை)த் துளிகள் ,
உன் பெயரையே
எழுதுகின்றன ...!
மாறும் உலக மாற்றத்தில்
மாறாத ஓசையாய் -
ஓலமிட்டுக் கொண்டிருக்கும் ...,
கடல் கீதங்களும்
அலை இன்னிசைகளும்
உன்னை -
போற்றிப் புகழ்கின்றன ..!
சங்கிலித் தொடராய் நீண்டு செல்லும்
அடம்பன் கொடிகளும் ,
வீடு கட்டி
உடைத்து மகிழும்
சின்னஞ் சிறுசுகளின் சந்தோஷங்கழும்
மீன்களைப் பாதுகாக்கும்
வாடிக் குடிசைகளின்
ஐஸ் கட்டிகளும் ,
கருவாட்டு நாற்றங்களும்
தோனில்
படகு
வலை
இன்னும் பல
இத்தியாதிகளும்
என் கற்பனைக்கு
பல நூறு கரு கொடுக்கும் ..!
அதில் -
உன் நினைவுகளே
கரையை தொடும் அலையாய்
மனத் தரையை முத்தமிட்டுக் கொண்டிருக்கின்றன ,
உன் -
தூய்மையான பாசம்
விரும்பி நேசிக்கும்
என்-
சுவாச மூச்சு
உடல் உறுப்புக்களில்
உயிர் கொடுத்து
வாழ வைப்பது போல்
உயிருக்கு உயிரானவளே .....,
உண்மையாக நான்
கவிதா வானில்
சிறு மழைத் துளிதான்
சொல்லப் போனால்
கடுகு போல் சிறிதானவளல்ல
நான்,
உன் நாவின் ருசியில்
காரமானவள்
உப்பு
புளிப்பு
உரைப்பு சேர்ந்தது போல் ..!
கவிதா உலகில்
கோடிக் குழாய்கள்
தாகத்தை தீர்க்க ...
நீர் கொடுக்க..
.
நீர்விழ்ச்சியல்ல....,
நான் ,
உன் அன்புக் கிணற்றினுள்
உற்றெடுக்கும் வற்றாத ஊற்று ...!
முக நூலின்
விலாசத்துக்கு -ஒரு
ஆத்மதிருப்தியை
கற்றுத் தந்தவளே ....
இன்று
எல்லோரது நட்பு றவுகளையும்
என் -மனம்
அனைத்துக் கொள்ளும் !
நீ -
நாட்டி வைத்துள்ள
நட்புச் செடிகளில்
என்-
மனதின் வாசங்கள்
கலந்துள்ளமையால் ..!
நீ -
இதழ் விரித்துள்ள
நடப்பு (பூ)க்கு
என் -
இதயத் துடிப்பால
உயிர் வாசத்தினைக் கொடுக்கின்றேன் ..!
உயிரின் உயிரே
இந்த -
போலி உறவுகளும்
சாதி வெறிகளும்
மனச் செடியில்
வளர்வதை தடுத்துவிடு
என் -வாட்டத்துக்கு
செழிப்பை காட்டி விடு ..!
சர்வேதேச உறவுகளும்
சிந்திக்கட்டும் -இந்த
சாக்கடை நாற்றங்களை
என் -
ஆற்றல் மிகு மூளைக்குள்
ஒட்டியிருக்கும் இந்த
சிந்தனைத்துளிகளை
அல்லாஹ் நீயே
பேணகளுக்கு குருதித் துளியாக
மாற்றி விடு ..!
அப்போது தான் ..
நம் -
மானிட தலைகளின் புற்றிலிருக்கும்
போலி உறவுகளின்
எச்சங்கள் மாறும்
நிம்மதி பிறக்கும் !
தீயவற்றை அகற்றி
நல்லவற்றைகாண்போம் ..!
நன்மையானவற்றைப் பெறுவோம் !
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
மழையெச்ச நாளொன்றில்...
- முனைவென்றி நா. சுரேஷ்குமார் -
வெயிலில்
தலையுலர்த்திக் கொண்டிருந்தது
நேற்றுபெய்த மழையில்
தொப்பலாய் நனைந்த
அந்தக் குடிசை.
பெய்த மழையாய்
கூரைவழி எட்டிப்பார்த்தது
மேகத்தின் கண்ணீர்
ஏழைகளின் வாழ்க்கையை...
மெதுமெதுவாய்
மேகப்போர்வையை விலக்கி
சோம்பல்முறித்தெழுந்தான்
தன் சுட்டெரிக்கும்
ஒளிக்கதிர் பற்கள் காட்டி...
குடிசைக்குள்
மழைநீர் குளமாய்...
மிதக்கும் பாத்திரங்கள்...
கைகால்கள் நடுநடுங்க
சோர்வாய் திண்ணையில்
குழந்தைகள்.
கடலோடு வலைவீசி
கயல்தேடி கரைதிரும்பாக்
கணவன்.
கால்கடுக்க
வாசலில் நின்றவாறு
தெருமுனையை வெறிக்கப்பார்க்கும்
அவள்
புயலின் கூரிய நகங்கள்
பிய்த்து எறிந்திருந்தன
குடிசைகளின் கூரைகளை...
ஆறுதல் சொல்வதற்காய்
பறக்கும் ஹெலிகாப்டரும்...
பார்வையிடும் கண்களும்...
அடுத்தநாள் தலைப்பு செய்திக்காக...
அண்ணார்ந்து பார்த்து
வேதனை மறந்து
கைதட்டும் சிறுவர்சிறுமியர்
கரையொதுங்கியே கிடக்கிறது
மீனவன் வாழ்க்கை.
மழைநின்றதாய்
பெருமூச்சு விடும்போது
கூரைவழி கொட்டத்துவங்குகிறது
புயலோடு பெருமழை...
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.