அம்மாவிடம் சேகரமாகிய முத்தங்கள்
நேற்றும்கூட
என் அம்மா
எனக்காக ஒருபிடி திரளைச்சோறு
குழைத்து வைத்திருந்தாள்
நான் வருவேனென்று.
அவளிடம் சேகரமாயிருக்கும்
எண்ணங்களுக்கு வார்த்தைகளேயில்லை.
எல்லாப் பாரத்துக்கும்
அவளே சுமைதாங்கி
அப்பாவின் உயர்வில் கோபம்கொண்டே
எங்கள் வீடு
அடித்து உடைத்து
போத்தலால் அப்பாவைக் காயப்படுத்தி
அம்மாவும் நாரியில் அடிவாங்கி அலறியபோது
வேலிப்பொட்டால்
எங்களை இழுத்துக் காத்த
'பெரியமாமி' சொல்லக் கேட்டிருக்கிறேன்.
பெற்றெடுத்த கணத்திலும் முன்பு
எங்களுக்காய் சேகரித்து வைத்திருந்த
முத்தங்கள் பற்றி.
தாம் சொல்வது பொய்யெனத் தெரிந்தும்
ஆயிரம் வார்த்தைகள் கூறியும் காத்திடுவர்
எங்கள் தாயர்.
ஊரானுக்கு ஊதாரியென்றாலும்
அவளுக்கு உயிர்க்கொடி.
நள்ளிருளிலும் தனித்திருந்து கலங்குவாள்.
தாய்மைக்கு வார்த்தைகளேது?
எங்கள் தாயரைப்போலவே
என் அம்மாவின் புன்னகை அழகு
அவளின் அழுக்கு அழகு
அவளின் மனசு அழகு
எங்கள் தாயரின் காலங்கள் புனிதமானவை.
இப்போ எங்கள் சின்னத்தாயர்
இந்தப் புன்னகைகளை எல்லாம்
குப்பைக்கூடையில் தூக்கிஎறிந்துவிட்டு
சென்று கொண்டிருக்கிறார்
தாயாக அல்ல தெருநாயாக…பேயாக…
மீன்குஞ்சுகள்
கண்ணாடித் தொட்டியில் இருந்த
மீன்குஞ்சுகள்
ஒருநாள் துள்ளி விழுந்தன
மாடுகள் தின்னும்
வைக்கோல் கற்றைக்குள்
ஒளிந்து விளையாடின
வேப்பங் குச்சிகளைப்
பொறுக்கியெடுத்து
கரும்பெனச் சப்பித் துப்பின
வயலில் சூடடித்து நீக்கிய
‘பதர்’ எல்லாம்
பாற்கஞ்சிக்கென
தலையிற் சுமந்து
நிலத்தில் நீந்தி வந்தன
வீதியிற் போனவர்க்கு
கொல்லைப்புறச் சாமானெல்லாம்
விற்றுப் பிழைத்தன
திருவிழா மேடையில் ஏறி
ஆழ்கடல் பற்றியும்
அதன் அற்புதங்கள் பற்றியும்
நட்சத்திரமீன்களின் அழகு பற்றியும்
அளந்து கொட்டின
இப்படித்தான்
வைக்கோலைச் சப்பித் தின்னும்
மனிதமாடுகள்போல் கதையடிக்கின்றன
தொட்டியில் இருந்து துள்ளிவிழுந்த
மீன்குஞ்சுகள்.
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
04/2011