"(வேட்டை நாய்களின் குரூரம்)
அவர்கள் எங்கள்
நிலங்களைத்தின்றுகொண்டே
இருந்தார்கள்."
1. பசி
(வேட்டை நாய்களின் குரூரம்)
அவர்கள் எங்கள்
நிலங்களைத்தின்றுகொண்டே
இருந்தார்கள்.
நாம் உருண்ட முற்றத்தை
உழுது புரட்டினார்கள்.
அங்கே எங்கள்
வானத்தையும் அல்லவா
உடைத்துப்போட்டார்கள்.
புலவுகளும் பொழுதுகளும்
கலவரமாயிற்று.
எப்படி மனசு வரும்?
அவ்வளவு இலகுவில்
சொந்தம் விட்டுப்போக.
குட்டி ஈன்ற பூனையாக
மனசு அந்த மண்ணையே
வட்டமிட்டுக்கொண்டிருந்தது.
லாந்தர் வெளிச்சத்திலும்
பொருள் நகர்த்தினோம்.
பயணப்பட்டு,
மலமும் சலமும்
கலந்த களப்புக்குள்
எங்கள் வாழ்விருந்தது.
மாறாக
நிலம் தின்னிகளோ,
எப்போதும் போலவே
புசிப்பதற்கும்
முகர்வதற்கும்
தயாராகவே இருந்தனர்.
அந்தக்களப்புக்குள்
நாங்கள் நிச்சயம்
கடித்துக்குதறி
வேட்டையாடப்பட்டு
விடுவோம்.
இது தெரிந்திருந்தும்,
“நாங்கள்
சாவதற்காக வாழவில்லை
வாழ்வதற்காக
செத்துக்கொண்டிருந்தோம்
அந்த மண்ணில்!”
அவர்களோ தங்கள்
உணவுத்தட்டுகளை
எங்கள் தசைகளாலும்,
தேநீர்க்கோப்பைகளை
எங்கள் இரத்தத்தாலும்
நிரப்பிக்கொண்டிருந்தார்கள்.
தட்டுகளும் கோப்பைகளும்
தீர்ந்து போகா வண்ணம்
பார்த்துக்கொண்டார்கள்.
முடிவில்,
தறப்பாள் பிய்த்து
உரியப்பட்ட துகில்கள்
அவர்களின்
துப்பாக்கி முனைகளில்
வெற்றிக்கொடிகளாயிற்று.
உடுபிடைவைகளை
எடுப்பதற்கேனும்
அவகாசம் தராத
அவர்களுக்கு,
நமது நிர்வாணம்
வெற்றிக்களிப்பாய்ச்சு.
அதன் உச்சக்கட்டம்,
நாம்
அந்த மண்ணிலிருந்து
பெயர்க்கப்பட்டுவிட்டோம்.
இதுநாளும்
“நாம் உயிர் வாழ்வதற்கு
உணவு தந்த
விளைநிலங்களுக்கு
மேலால் அல்லவா
ஏறி நடந்து வந்தோம்.
நமக்காக நாம் இட்ட
நாற்று மேடைகளையல்லவா
மிதித்துவந்தோம்”
அன்று மட்டும் தான்
நாங்கள்
முள்முடி சுமந்திருக்கின்றோம்.
சிலுவையின் கனதியை
உணர்ந்திருக்கின்றோம்.
ஆழ ஆழத்தன்னை இழந்து
உயிர் தந்த மண்ணின்,
ஓ! நம் மனம்
விரும்பிய மண்ணின்
விசும்பலைக்கூட
ஏறெடுத்துப்பார்க்க
முடியாத
நடைபிணங்களாக
நம் பயணம்
தொடங்கிற்று.
வழி நெடுகிலுமான
கண்ணீர்க்கோடுகள்
முள்கம்பி வேலிகளுக்குள்ளும்
நீளுகின்றன.
ஐயகோ!
“பசி வந்தால்
பத்தும் பறந்து விடும்” என்பார்.
இங்கோ,
அந்தப்பத்தையும்
நம்மிடமிருந்து
பறிப்பதற்கென்றே
பசி எடுத்தவர்கள்
இப்போது(ம்)
எங்கள் மீது
சோற்றுப்பொட்டலங்களை
வீசிக்கொண்டிருக்கின்றார்கள்.
அது எங்கள்
சோற்றுப்பசியை மட்டுமே
தணிக்கும்…?
2. வன்னி : ஓர் அவலம்!
கவனத்திலிருந்து
மறைக்கப்பட்ட
ஒரு சமுகத்தின்
வலிகளில் எழுப்பப்பட்ட
“போர் வெற்றியை கர்வப்படுத்தும்”
நினைவுச்சின்னங்களைத்தான்,
திரும்புகிற இடமெல்லாம்
பார்க்க முடிகிறது.
காதைப்பிளக்கும்
(இ)யந்திரசத்தத்தினூடே
உரசிச்செல்லும்
வாகன உஷ்ணம் ஒருபுறம்,
சுட்டெரிக்கும்
காபனீரொட்சைட் வாயு மறுபுறம்,
குமட்டல், வாந்தி, தலைவலியென
உடல் அசதியோடு,
தறப்பாள் கொட்டகைக்குள்
நாளும் கழிகிறது
நம் வாழ்வு.
சாலையின் இருமருங்கும்
வானுயர எழும்
விளம்பரப்பதாதைகள்
அளவுக்குக்கூட,
உயரவில்லை
நம் வாழ்க்கைத்தரம்!
கொட்டும் மழை பனி
சுட்டெரிக்கும் வெயில் நடுவே
கொட்டிக்கிடக்கும்
துன்பங்களோ கோடி!
வயிற்றுப்பசியோடும்
வாய்க்காலாய் ஓடும்
வியர்வையோடும்
விழித்திருந்து உழைத்தும்,
இன்னும்
உலை ஏறவில்லை
எனும்போது,
நெஞ்சில்
முள்ளே(ற்)றி வலிக்கிறது.
கல்லில் சிதறி
மடுவில் பாய்ந்து
குன்றுகள் மேவி
ஆகமொத்தத்தில்,
“நதி ஒன்று கடலில்
சங்கமித்த மனநிறைவு”
எப்போதுதான்
வந்து சேரப்போகிறது
நமக்கு.
இதற்கெல்லாம்
கொடுக்க வேண்டிய அக்கறைகள்
மேற்கொள்ள வேண்டிய
மீட்பு முயற்சிகளை விடுத்து,
இப்போதும்
சுற்றுலா நோக்கோடுதான்
வந்து போகிறார்கள்.
தமிழர் நம்மை
காட்சிப்பொருள்களாக
வேடிக்கைப்பார்த்துத்திரும்புகிறார்கள்.
பக்கத்து வீட்டில்
இழவு விழுகின்றபோது,
தனி ஒரு மனிதனின்
பிறப்பு கொண்டாடப்படும்
தகுதியை இழப்பதுதான்
உலக வழக்கம்.
மாறாக,
இங்கெல்லாம்
நரபலி எடுக்கப்பட்ட தமிழரின்
இரத்தத்தில்
கண்ணீரில்,
போர் வெற்றி விழா
களியாட்டங்களை
நடத்துகிறார்கள்.
கேளிக்கை நிகழ்ச்சிகளில்
களித்திருக்கிறார்கள்.
“பண்பற்றவர்
புண்பட்டவரே,
புண்பட்டவர் நாம்
பண்பற்றவரல்லர்!”
முட்கள் நிறைந்த
பாதைகளில்
நம் கால்கள்
பயணித்திருக்கின்றன.
இப்போதும்
பயணித்துக்கொண்டிருக்கின்றன.
பாதங்களுக்கு நீங்கள்
மருந்திட வேண்டாம்.
குறைந்தபட்சம்
அதன் வலிகளையாவது
உணரலாமல்லவா?
3. நீ(தி) தீ
என்ன
குறை வைத்தோம்
உன்னில்,
ஏது குறை சொன்னோம்.
பல பண்பாட்டுத்திருவிழாக்களை
ஆடிக்களித்திருந்த
ஊர்களில் இருந்தல்லவா
காவடிகள் தூக்கி வந்தோம்.
தீச்சட்டி ஏந்தி வந்தோம்.
பால்குடம் எடுத்து வந்தோம்.
எப்படித்தகும்?
கிரக பலன்கள் அவர்க்கும்
கிரக பாவங்கள் நமக்கும்.
தோஷங்கள் நமக்கும்
பரிகாரங்கள் அவர்க்கும்.
நீதி கேட்டு
மதுரை மாநகரை எரித்த
சோழ நாட்டாளே,
எதை எரித்து
நீதி கேட்பாள்
ஈழ நாட்டாள்?
உனைப்போல முடியாதம்மா.
எரிப்பதற்கு
உனக்காவது
மதுரை மாநகர் இருந்தது
நாடே இல்லா
ஏதிழையாள்
என் ஈழ நாட்டாள்.
யுத்தம் சுடுகாடு ஆக்கிய
ஊர்களுக்குள் நின்று கொண்டு
நீதி கேட்கிறாள்.
யுத்தம் சப்பித்துப்பிய
மனிதர்களுக்குள்
இருந்து கொண்டு
நீதி கேட்கிறாள்.
மரண ஓலமும் பிணவாடையும்
சுமந்து வரும் காற்றை
சுவாசித்தவாறு
நீதி கேட்கிறாள்.
அம்மா! தாயே! என
வாயெடுத்துப்பாடிய
அதே வாய்கள்தானே
அன்றும்,
ஐயோ! அம்மா! என
ஓலமிட்டன.
என் தாயே! ஏன் தாயே!
நீ இரங்கி வரவில்லையே.
ஆயிரம் கண்ணுடையாளே
உந்தன் ஒற்றைக்கண் கூட
திறக்கவில்லையே.
பனிச்சங்காயில் படை
விரட்டியவளே!
கந்தகவெடி அதிர்வில்
எங்கள் தாய்க்குலத்துக்கு
மடி கிழிந்து
குறைப்பிரசவம் நிகழ்ந்தபோது,
உந்தன் பனிச்சங்காய்களில்
ஒன்றுதானும் அவர்க்கு
சிராய்ப்புக்காயமேனும்
கொடுக்கவில்லையே.
களப்புக்குள்
எம் ஆடை களைந்து
கலங்கப்படுத்தி
கலவரப்படுத்தியபோது
ஒட்டுத்துணி கூடத்தந்து
நம் மானம் காக்கவில்லையே.
உப்பு நீரில் விளக்கெரியும்
அதிசயம் காட்டியவளே!
சுற்றி வளைத்து
வேலி கட்டி அடிக்கும்போது,
உப்புச்சப்பில்லாமல்
இருந்து விட்டாயே.
“ஓயாத அலைகள்”
தொடர் வெற்றிக்கான ஆசி
உன்னிடமிருந்தல்லவா
பெறப்பட்டது.
நான்கு வானோடிகளின் பறப்பில்
நாற்பது இலட்சம் தமிழனும்
உச்சிக்கிரங்கிக்கிடைக்கையில்,
தலைக்கு மேலே எழுந்தவர்
தலைக்கனமே இல்லாது
உன்னிடம் பணிந்து
விடைபெற்றுத்தானே போயினர்.
உந்தன் கோபுரகலசத்துக்கு
பூத்தூவும் பறப்புதானே
வான்படை கண்ட
முதல் தமிழனின் முதல் பறப்பு!
உலகுக்கு
முத்தாய்ப்பாய் ஒரு செய்தி!
ஏன் தாயே?
எமைக்கைவிட்டு விட்டாய்.
ஏன் தாயே?
எமைக்கைதுசெய்ய விட்டாய்.
உண்மைக்குள் வாழ்தல்
எத்தினை அர்த்தம்.
வாழ்ந்துதான் பார்த்தல்
எத்தினை அழகு.
எதிரும் புதிருமான
மௌனத்தை ஏன் தாயே
எங்கும் பரப்பிக்கிடக்கிறாய்.
சென்.பீட்டர் தொடங்கி
செஞ்சோலை, மடு,
ஐயன்கண்குளம்,
முள்ளிவாய்க்கால் என நீளும்
எங்கள்
வண்ணத்துப்பூச்சிகளின்
இறக்கைகள் ஒடிக்கப்பட்டதும்,
அவற்றின்
பல வண்ணக்கனவுகளுக்கு
புலிச்சாயம் பூசப்பட்டதும்
நெஞ்சுக்கு நீதியா?
தேரோடும் வீதியில்
கொலு இருந்தவர்க்கே
கொள்ளி வைத்தார்
புத்தரின் பெயரால்,
போர்தான் வாழ்வென்று
வந்தெம் உறவுகளைத்தின்று
ஏப்பமிட்டவர்கள்.
நெஞ்சில் ஆயிரம்
தீயை வைத்தார்.
நடுநிசி நித்திரையை
மாற்றி வைத்தார்.
கண் கலங்க கதி கலங்க
ஊரெல்லாம் மரண ஓலம்
கேட்க வைத்தார்.
இந்தக்கருமமெல்லாம்
யார் தலைக்கு?
எல்லாம்… எல்லாமே…
வரலாறு மாறும்!
வண்டியும் ஓடத்தில்
ஏறும் என்று எதுவரை
சொல்லிக்கொண்டிருப்பேன்.
தருமத்தின் வாழ்வுதனை
சூது கவ்வும் தருமம்
மறுபடியும் வெல்லும் என்று
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.