வீழ்தலின் நிழல்
- எம்.ரிஷான் ஷெரீப் -
ஒரு கோட்டினைப் போலவும்
பூதாகரமானதாகவும் மாறி மாறி
எதிரில் விழுமது
ஒளி சூழ்ந்த
உயரத்திலிருந்து குதிக்கும்போது
கூடவே வந்தது
பின்னர் வீழ்ந்ததோடு சேர்ந்து
ஒரு புள்ளியில் ஐக்கியமாகி
ஒன்றாய்க் குவிந்ததும்
உயிரைப் போல
காணாமல்போன நிழலில்
குருதியொட்டவே இல்லை
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
பறித்தெடுக்கப்பட்ட மூலப்பிரதி
- துவாரகன் -
துருப்பிடித்த அடையாளம் அழி
முலாம் பூசு
கண்ணைப் பறிக்கும்
வண்ண விளக்குகள் பொருத்து
கண்டவர் வாய் பிளக்கட்டும்.
மூலப்பிரதியைப் பிரித்தெடுத்து அழி
புனைந்தெழுது
புதிய பக்கம் சேர்
ஏமாந்து போனவனிடம்
பிரதியே இல்லையென்று சொல்.
வாதம் செய்தால்
உன் கச்சையில் இருந்து
பழுப்பேறிய பக்கத்தை எடுத்துக்காட்டு
இதுதான் மூலஓலை என்று.
தலையாட்டிப் பழக்கப்பட்டவை
கோயில் மாடுகள் மட்டுமல்ல.
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
10/2012
உன் நினைவினால்..
கலைமகள் ஹிதாயா றிஸ்வி இலங்கை (சாய்ந்தமருது)
என் தாயின் வயிற்றிலிருந்து
ஒரு முறை தான்
பிறந்து காட்டினேன் பிரசவத்தை
வலியோடு நிறைந்தஇனிமையை ..
சகீ
உன் நினைவுகளோ
ஆயிரமாயிரம் முறை
எனக்குள் பிறக்கின்றன
பாசம்
வளரத்தான் செய்கிறது
நாம்தான்
நாடு கடந்து போகின்றோம்
பிரிந்தவர்கள் கூட
அழுவ தில்லை
இணைந்த நான்
அழுதுகொள்கிறேன்
உன் நினைவினால் ....
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
துயர் விடு தோழி.
- வேலணையூர்-தாஸ் -
அணிகலன் தேர்ந்து
அழகினில் ஒளிர்வாய்-தோழி
வேல்என முகைகள் மெய்பட இருந்தும்
வாசனை கொண்டு உயிரினை வவ்வும்
முல்லை அரும்பின கொடிகளில்
கொன்றை மலர்ந்தன கோடுகள் தன்னில்
கார் இறங்கி கனமழைபொழிய
பரலை பள்ளம்
படந்தன வெள்ளம்.
உருக்கிய இரும்பென கொம்புடை மான்கள்
குளித்து களித்தன தோழி.
கவின் பெறுவனமும் காணவும் அழகே.
சிறுமலை உறையூர் விழா நலம் பொருந்தும்
கதிரவன் திசை மலை
காந்தள் பூக்கும்
உன் நினை வெழும் காதலன்
விரைவில் நண்ணும்.
தேரின் மணியொலி செவியிலையென்றே
பேதை நீயும் பேதுறல் வேண்டா.
காதலன் வருவழி காவுககள் நெருங்கும்
காவில் பெடையுடன் வண்டுகள் முயங்கும்
மணியொலி ஊறென நிறுத்தி
மன்னவன் வருதும்.
பிரிவு விலகும்
துயர் விடு தோழி.
சங்கத்தமிழ்
முல்லை வைந்நுனை தோன்ற
- அகத்திணை -குறுங்குடி மருதனார் -
இல்லமொடுபைங்காற் கொன்றை
மெல்பிணி அவிழ,
இரும்பு திரித்தன்ன மாஇரு மருப்பின்,
பரலவல் அடைய, இரலை தெறிப்ப,
மலர்ந்த ஞாலம் புலம்புபுறக் கொடுப்ப, 5
கருவி வானம் கதழுறை சிதறிக்
கார்செய் தன்றே, கவின் பெறு கானம்;
குரங்குளைப் பொலிந்த கொய்சுவற் புரவி,
நரம்பு ஆர்த்தன்ன, வாங்குவள்பு அரிய,
பூத்த பொங்கர்த் துணையொடு வதிந்த 10
தாதுண் பறவை பேதுறல் அஞ்சி,
மணிநா ஆர்த்த மாண்வினைத் தேரன்,
உவக்காண் தோன்றும் குறும்பொறை நாடன்,
கறங்கிசை விழவின் உறந்தைக் குணாது,
நெடும்பெருங் குன்றத்து அமன்ற காந்தட் 15
போதவிழ் அலரின் நாறும்-
ஆய்தொடி அரிவை! - நின் மாணலம் படர்ந்தே
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
காதலா...
-செண்பக ஜெகதீசன் -
தஞ்சமடைந்த பனித்துளியை
தணியாத காதலுடன்
தலையில்வைத்து ஆடியது
தர்ப்பைப் புல்..
அதுவோ,
காலைக் கதிரவனைக்
கண்டவுடன் ஓடிக்
காலை வாரிவிட்டதே...!
பாவம் பச்சைப் புல்,
தென்றல் வந்து
தடவிக்கொடுக்கிறது ஆறுதலாய்...!
கதையிதுதான் காதலா..
கண்டு கற்றது மனிதரிடமா...!
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.