நெல்சன் மண்டேலாவின் 95வது பிறந்த நாள்
நெல்சன் மண்டேலாவின் 95வது பிறந்தநாளைக் கொண்டாடுவதற்கு தென்னாபிரிக்க மக்கள் மட்டுமல்ல, உலகத்தின் பல பாகங்களில் இருந்தும் இன, மத, மொழி வேறுபாடின்றிக் கலந்து கொள்வதில் மிகவும் ஆர்வமாக இருந்தார்கள். யூலை மாதம் 18ம் திகதி வியாழக்கிழமை அவரது பிறந்த நாளாகும். தனது மண்ணின் விடுதலைக்காக முன்னின்று உழைத்த இவர் 1994ம் ஆண்டு தென்னாபிரிக்காவின் முதலாவது கறுப்பின முதல்வராகத் தெரிவு செய்யப்பட்டார். இதற்காக இவர் 27 வருடங்கள் கடும் சிறை வாசம் செய்தார். மனிதநேயத்திற்காக உழைத்த இவர் பலராலும் போற்றப்பட்டதில் வியப்பே இல்லை. அவர் நலமடைந்து வருவதாகத் தற்போதைய செய்திகள் தெரிவிக்கின்றன. கடந்த சில வாரங்களாக நோய் வாய்ப்பட்டிருந்த இவர் ‘நலம் பெற வேண்டுகின்றோம்’ என்று ஊர் பெயர் தெரியாத பல்லாயிரக் கணக்கான மக்கள் தங்கள் மனம் திறந்த பிரார்த்தனையைக் கடித மூலமும், பதாதைகள் மூலமும் அவருக்குத் தெரிவித்திருந்தனர். வேறு பலர் அவரை அனுமதித்திருந்த வைத்தியசாலைக்கு முன்னால் கூட்டமாக நின்று பாடல்கள் மூலம் அவர் விரைவாக நலம் பெற வேண்டும் என்று பிரார்த்தனை செய்தனர். அவர் கடும் சுகவீனம் அடைந்திருக்கிறார் என்ற செய்தி வெளியே தெரிந்ததும் உலகின் பல பாகங்களில் இருந்தும் அவருக்காகப் பிரார்த்தனைகள் மேற்கொள்ளப்பட்டன. இது எதை எடுத்துக் காட்டுகின்றது? ஒரு மனிதனின் இறுதிக் காலத்தில் இத்தகைய பிரார்த்தனைகள்தான் அவன் மனிதனாக இந்த உலகத்தில் வாழ்ந்தான் என்பதை உறுதி செய்கிறது. பணம் கொடுத்து ஒருவரைப்பற்றிப் புகழாரம் பாடவைக்கும் நிகழ்ச்சிகள் பல மலிந்து விட்ட இந்தக் காலத்தில் நெல்சன் மண்டேலா போன்ற உயர்ந்த மனிதரின் வாழ்க்கைச் சரித்திரத்தை, கோடிக்கணக்கான உள்ளங்களில் எப்படி அவரால் குடிபுக முடிந்தது என்பதை நாமும் அறிந்து கொள்ளவது மிகவும் அவசியமாகும். மக்களின் உண்மையான பிரார்த்தனை வீண்போகவில்லை. அவர் நலமடைந்து வருவதாகத் தற்போதைய செய்திகள் தெரிவிக்கின்றன. நல்ல உள்ளம் படைத்தவர்களுக்கு அவரது வாழ்க்கைச் சரித்திரம் நல்லதோர் எடுத்துக் காட்டாக அமையும்.